Saturday, October 2, 2010

யாமே அசுரர்...


கலை நிர்வாகம் பற்றிய ஒரு பட்டயப் படிப்பின் போது, பல்வேறு கலாச்சாரத் தலைப்புகளில் ஆய்வு மேற்கொள்ளும் அவசியம் எனக்கு ஏற்பட்டது. குறிப்பாக இந்தியச் சிற்பக் கலை. அதன் தொடர்சியாக இந்தியக் கலாச்சாரப் பாடத்திற்காக தாய்த்தெய்வ வழிபாடு குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டேன். அதற்காக மேற்கத்தியக் கலைப் பாடத்தில் பண்டையக் கலை வரலாறும் கற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. அப்பாடத்திற்கு நான் எடுத்துக் கொண்டது எகிப்தியக் கலையில் காகிதச் சுருள்’. இந்தியக் கலைப் பாடத்தில் பௌத்தக் கலை – அமராவதி ஸ்தூபா. ஆய்வுக்காக பல வல்லுனர்களின் புத்தகங்களை படிக்க நேர்ந்த்து. கடவுள் நம்பிக்கையற்ற எனக்கு, தொடக்க காலத்தில் கலை பக்தி வடிவமாகவே இருந்ததின் மூலம் வெளிப்படும் குறியீடுகள் என்ன என்பதிலேயே எனது தேடுதல் இருந்தது. ஒரு பக்கம் சிற்பக் கலையில் புராணக் கதைகளும், கதாப்பத்திரங்களின் குணங்களும் நன்மைத் தீமைக்கான சண்டை என்று பார்பனியக் கதைகளைக் கேட்டுக்கொண்டிருந்தேன். மறு பக்கம், கலாச்சாரப் பாடத்தில் மதத் தோற்றம், அதன் வளர்ச்சி, பண்டையப் பொருளாதாரம் எனக் கற்றுக்கொண்டிருந்தேன்.

ஒன்றோடு ஒன்று தொடர்புப் படுத்திப் பார்க்கும் பொழுது, சைவ வைணவப் போர், பக்தி இயக்கத்தின் தோற்றம், பௌத்தத்தின் வீழ்ச்சி, இசுலாமியப் படையெடுப்பில் அழிக்கப்பட்ட இந்துக் கோயில்கள் ஆகியன பற்றிய வரலாற்றுப் பாடங்கள் எனக்கு சமாதானத்துக்குறிய எத்தகவல்களையும் தரவில்லை. கேள்விகள் எழுந்துக் கொண்டே இருந்தது. குறிப்பாக சிந்து சமவெளி நாகரீகம் பற்றிய வரலாறு. அது பண்பட்ட நாகரீகம் என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால் அம்மக்கள் யார், எவ்வழித் தோன்றியவர்கள் என்பது சர்சையாக உள்ளது ஏனென்றால் கண்டெடுக்கப்பட்ட்ட முத்திரைகளில் உள்ள மொழி, குறியீடு ஆகியவற்றை இன்னும் பொருள் பிரிக்க முடியவில்லை (decipher) என்று கூறுகின்றனர். அதே சமயம், எகிப்திய இரகசியக் குறியீட்டு பதிவுகளை “hieroglyphs” பொருள் கண்டுபிடித்துவிட்டார்கள். அவர் ஒரு ஆங்கிலேயர்.

நம் நாட்டில் அகழ்வாராச்சிகளை மேற்கொள்பவர்கள் பெரும்பாலும், பார்பனர்களே, கண்டுபிடிக்கப்படும் பெரும்பான்மையான தொல்பொருள் சான்றுகள் பார்ப்பனிய சான்றுகளே. அதை நாம் சந்தேகங்கொள்ள வேண்டியிருக்கிறது.

சிந்துச்சமவெளி சமூகத்தில் நிலவிய யோனி வழிபாடு, தாய் தெய்வ வழிபாடு, பற்றிய குறிப்புகளின் பொருள் கண்டுவிட்டால், ஆரியர் / பார்ப்பனர் எப்படி விவசாயப் பொருளாதரத்தில் நிலத்தைப் போல் பெண்ணையும் வழிபட்ட முறைகளை சீர் குலைத்து, வயிற்றுப் பிழைப்பிற்காக பல்வேறு மூட நம்பிக்கைகளை புகுத்தி, ஆநிரைகளின் மூலம் செல்வத்தை கணக்கிடும் முறையை புகுத்தி, ஆணாதிக்கத்தை ஏற்றிவைத்தனர் என்பதற்கான உண்மைகள் சான்றுகளுடன் வெளிப்படும். இது குழந்தைத்தனமான பேச்சு போல் இருக்கலாம். ஆரியப் பித்தலாட்டம் பற்றியும், பண்டைய வரலாறு பற்றியும் பல்வேறு ஆய்வுகள் பார்ப்பனர் அல்லாதவரால் (பார்ப்பனக் குலத்தில் பிறந்து, அக்கொள்கைகளை எதிர்ப்பவர்களை பார்ப்பனர் அல்லாதார் என்று கூறலாம்) வெளிவந்திருக்கிறது, குறிப்பாக கோசாம்பி, சட்டோப்பாத்தியா போன்றோரின் ஆய்வுகள் நமக்கு விடிவெள்ளி.

இப்படி நான் குழம்பிக் கொண்டிருக்கையில், நம் புராணக்கதைகளில் வரும் அசுரர்கள், தேவர்கள் பற்றிய கேள்வி, மற்றும் பெண் கடவுள்களின் சித்தரிப்பு (எப்பொழுதும் ஆண் கடவுளைத் தொழுவது, அல்லது சாபம் பெறுவது), ரிஷி பத்தினிகள் கடந்த பதிவிரதை சோதனைக் கதைகள், அரசர், பார்ப்பனர், கோயில் தொடர்பு ஆகியவை பல்லாயிரம் கேள்விகளை எழுப்பிக்கொண்டேயிருந்த்து. அசுரர், தேவர், முனிகள் ஆகியோரெல்லாம் வெறும் நன்மை தீமை பற்றியக் குறியீடுகளாய் மட்டும் இருக்கக் கூடும் என்று என்னால் சமாதானம் கொள்ளமுடியவில்லை. ஏன் தேவர்கள் அனைவரும் பார்பனியத் தோற்றமும், அசுரர்கள் பழங்குடியினரின் தோற்றமாகவும் இருக்கக்கூடாது என்று தோன்றியது. தசாவதாரக் கதையை சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது என் மகள் கேட்டாள் “கடல் என்பது பூமியில் ஒரு பங்காக இருக்கும்பொழுது, அதை எப்படி கடலுக்குள் அசுரர்கள் ஒளித்து வைக்கமுடியும்”?. (குழந்தைகள் எதையும் நேரடியாக அணுகிவிடுகிறார்கள்) எல்லாம் பார்ப்பனிய வேலை என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது. உருவகம், சாதிய அரசியல், அரசர்களைக் கைக்குள் போட்டுக்கொள்ளும் வித்தை, சைவ வைணப் போர் என்று எல்லாம் தகவல்கள் கிடைத்தாலும், இதோ உண்மை என்று இரண்டுப் புத்தகங்கள் தோலுரித்துக்காட்டியது. ஆம் எவரெல்லாம் பார்ப்பனரில்லையோ, எவரெல்லாம் பார்ப்பனியத்தை எதிர்கிறார்களோ அவர்களெல்லாம் அசுரர், பழங்குடியினர் அசுரர். இதை பார்ப்பனிய எதிர்ப்பாளர்கள் படித்து அறிந்திருக்கலாம், யூகித்திருக்கலாம்.

கொங்கனி அகராதியின் பின்இணைப்பில், தேவர்கள், ரிஷி முனிவர்கள் பற்றியக் குறிப்புகள் பெரும் அதிர்வை ஏற்படுத்துகிறது. உரிய அனுமதியுடன் அவற்றை தமிழில் மொழிபெயர்க்கலாம்.

படைப்புக் கடவுளிடமிருந்து துவங்குவோம.

பிரம்மா படைப்புக் கடவுள் என்றும், வருணன் கடலின் கடவுள் என்றும் கூறுகிறோம். ஒரு பிரம்மா, ஒரு வருணன் தான் இருக்ககூடும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். அது உண்மையிலிருந்து விலகியிருப்பதற்கு சமமானது. பழங்கால செல்வந்தர்கள் எத்தனைப் பேர் இருந்தார்களோ அத்தனை பிரம்மாக்கள் இருந்தார்கள். எத்தனை நீர்வழிப் பாதை சுங்கச் சாவடிகள் இருந்தததோ அத்தனை வருணர்கள் இருந்தார்கள். பழம் பெரும் பணக்காரர்கள் யாகங்களை ஏற்பாடு செய்து வளமான இளம் ஆண், பெண் ஆகியோரை யாகங்களுக்கழைத்து தன் மேற்பார்வையில் உடலுறவுக் கொள்ளச் செய்து அவர்கள் மூலம் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான குழந்தைகளை உற்பத்தி செய்வார். அவரே பிரம்மா. இது மாபெரும் சமூகச் சேவை, ஆரியவம்சத்தின் குடியேற்றத்திற்கும், விரிவாக்கத்துக்கும் போரின்றி, இரத்தமின்றி உதவிய சேவை. இதுபோல் பல பிரம்மாக்கள், பல காலங்களில், இடங்களில் இருந்தனர். காஸ்யபன், புலஸ்தியன், தக்‌ஷன் இவ்வாறே பிரம்மாக்கள் ஆனர். கலவி நடக்கும் இடத்தில் இவர்கள் நேரடியாக இல்லாமல், ஏற்பாடு மட்டும் செய்து கொடுத்தால், அவர்கள் மனதைக் கொடுத்ததாக்க் கருதி, அவற்றின் போது பிறக்கும் பிள்ளைகள் பிரம்மனின் மனதிலிருந்து பிறந்ததாக கூறப்பட்டனர். (உ.ம் நாரதர்)

வருணனுக்கு வருவோம். பண்டைய ஆறுகளை ஒட்டி வளம் கொழிக்கும் வாணிபம் பெருகிக் கொண்டிருந்தது. வாடிக்கையாளர்கள் அச்சுறும் ஆஜானுபாகுவான தோற்றம் கொண்டவர், ரவுடிகள் படை, அதி வேகப் படகுகள் கொண்டு சட்டங்களை இயற்றி, சுங்க வரி வசூலிக்கும் கஸ்டம்ஸ் அதிகாரி வருணர் ஆவார். பணத்தை விட பொருளாகவே வரியை பெருவார். உ.ம் வசிஷ்தாவின் தந்தையான ஒரு வருணன் வரியாக குதிரைகளைப் பெற்றார். அவரிடம் மிக அரிதான பஞ்ச கல்யானி எனும் வகை குதிரைகளை இனப் பெருக்கம் செய்ய ஒரு குதிரை லாயம் வைத்திருந்தார். ஆனால் வருணரின் புகழும் செல்வமும் மங்கத் துவங்கியது, அதற்கு காரணம் மது மற்றும் மாது மீதான மோகம். செல்வந்தராகிய பல வருணர்கள், புகழ் பெற்ற ரிஷிகளின் அறியாத தந்தையாக இருந்தனர் (உ.ம். சப்த ரிஷிகள்). வருணன் குடியிருப்புக்கருகில் உள்ள ஆற்றங்கரைக்கு குளிக்கச் செல்லும் அழகிய பெண்களுகு பாதுகாப்பற்ற சூழல் நிலவியது. உ.ம் மமதா..அவள் கணவன் உதத்யா. அவரும் நாரத முனியும் பல அச்சுறுத்தல்களை கொடுத்தே அவளை மீட்க முடிந்தது. (இப்படி போய்க்கொண்டே இருக்கிறது)..

குபேரன் இலங்கையில் வருணனாக செயல் பட்டவன். அவன் கடன் கொடுப்பவன்.

வானரா (வான நரா) என்பது ஒரு பழங்குடி இனம், ராமனும் ஒரு பழங்குடியினத் தலைவன். குபேரன் வானரப் படையை பராமரிக்கும் பொருட்டு ராமனுக்கு கடன் வழங்கியவன். (இலங்கையைச் சுற்றி இருந்தவர்கள்).

ஆரிய-மங்கோலிய கலப்புக் குடி – ராக்‌ஷசர்

அனுமனின் தாய் அஞ்ஜனை கேசரியின் மனைவியாய் இருந்தாலும், இந்திரனின் (அவன் ஒரு இனத் தலைவன், சற்று பெரிய அரசாங்கம் கொண்டவன்) அரசவையில் நடனப் பெண். இந்திரனின் தம்பி (தம்பி உறவு) மாருத் அவள் மீது மயக்கங்கொண்டு 30 நாட்கள் திருட்டுத்தனமாக அவளுடன் உறவு வைத்துக்கொள்கிறான் (விரதம் என்ற பெயரில்). ஆரியக் கலப்பு குறித்து வான நர படைகள் பெருமிதம் கொள்கின்றன. உண்மையில் அனுமன் கைசரியாக (அஞ்சனையின் கணவர் கேசரி அவருக்குப் பிறந்திருந்தால் அனுமன் கைசரி என்று பெயர் பெற்றிருப்பார்.) இருந்திருக்க வேண்டும், மாருத்திற்கு பிறந்ததால் மாருதி.

நாரத முனி – உண்மையை மட்டுமே பேசுபவர், அவர் அன்றைய செய்தித்தாள்களுக்குச் சமம். மலை, காடு இவைகளைக் கடந்து வீணையை மீட்டிக்கொண்டு பாட்டுப் பாடிக்கொண்டு திரிபவர். மக்களுக்கு பயனுள்ள செய்திகளை ஊர் ஊராக கொண்டு செல்வார், எவருக்கும் பயப்படாதவர். நல்ல இசை ஞானி. வால்மீகி, வயாசர், சுக மஹா முனிகளின் குரு இவர்.

இப்படி 146 பேர்கள் பற்றிய தகவல்கள் அவ்வகராதியில் இடம் பெறுகிறது.

அசுரர் பற்றிய குறிப்புகள் உலகாயதம் புத்தகத்திலிருந்து:

அசிரியாவிலிருந்து குடி பெயர்ந்தவர்கள் அசுரர்கள், ஆரியர்களுக்கு முன்னரே இந்தியாவில் குடியேரியவர்கள். சிந்து சமவெளி நாகரீகத்தை உருவாக்கியவர்கள் அசிரியர்களே. சதபத பிராமணத்தின் படி, மகதம் அல்லது தென் பீஹாரில் அசுரர்களது குடியிருப்பு இருந்ததைக் குறிப்பிடுகிறது. அசுரர் எனும் சொல் ஒரு உயர்ந்த நாகரீகத்திலிருந்து கடன் பெறப்பட்டது.

அசுர மதம் சொல் பழங்கால இந்தோ-ஈரானிய சமூகத்தின் நாகரீகப் பிரிவினர். அசுரர் என்பது அசிரியாவிலிருந்த ஒரு துணைக்கடவுளின் பெயர். அசிரியர்களுடன் இந்தோ ஈரானியர்கள் உறவு கொண்டு எழுந்த வம்சாவழிப் பெயர்.

“மூர்க்கத்தனமான காட்டுமிராண்டி மக்களான ஆரியர்கள் இந்தியாவில் படையெடுத்தபோது பதிலுக்கு அவர்களைத் தாக்கியவர்களை அசுரர்கள் என்று அழைத்தனர். ஆரியர்கள் விரட்டியடித்து அவர்களை அழித்தனர். சோட்டாநாக்புரி பகுதியில் வசிக்கும் அசுரர்கள் ஆரியர்களை எதிர்த்த அசுரர்களின் வழித்தோன்றல்கள். தானா அல்லது மிர்சாப்பூர் மாவட்டத்தில் இப்பொழுதும் காணப்படும் நீர்நிலைகளில் அணை கட்டியவர்கள் இவ்வசுரர்களின் வழித்தோன்றல்களா என்பது வெளிப்படையானதொரு கேள்வி. இருப்பினும் இத்தகைய அனுமானங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதில்லை”.

அசுரர்கள், தைத்தியர்கள், தானவர்கள், நாகர்கள் ஆகியவை வெவ்வேறு கலாச்சார மட்டத்திலிருந்த மக்களைக் குறிக்கும் சொற்களாகும். இவர்கள் அநாகரீகமான ஆதிவாசிகள், அரைகுறை நாகரீக இனங்கள் ஆவர். இவர்கள் ஆரிய கலாச்சாரம் பரவுவதைத் தடுத்தனர். புராணக் குறிப்புகளில் இவர்களை ஆரம்பத்தில் மனிதர்களாக்க் குறிப்பிட்டனர். பின்னர் எதிரிகள் என்கின்றனர். பின்னர் பூதாகரமான உருவங்களோடும் பூதங்களோடும் இணைக்கப்பட்டிருக்கின்றனர்.

பெரும்பாலான அசுரர்கள்தான் சிந்து சமவெளி நாகரீகத்தை உருவாக்கியவர்கள். (பல்வேறு சூத்திரங்கள், வேத நூல்கள், பிராமணங்கள், உபநிடதங்கள், அவற்றை ஆராய்ந்த மாமேதைகளான தாஸ்குப்தா, பானர்ஜி, சாஸ்திரி, பி.கே.கோஷ் இன்னும் பிற மேலைநாட்டு ஆய்வுகளைத் தொகுத்தே சட்டோபாத்தியா இம்முடிவுகளை வெளியிடுகிறார்).

அமராவதி நதிக்கரையில் ஒரு பழங்கால நகரத்தை அகழ்வாளர்கள் தோண்டி வெளிக்கொண்டு வந்துள்ளனர். ரிக்வேத ஆதாரப்படி, இதனை அசுரர்களின் நகரம் என்றும் நாம் கருதலாம். இது ஹரப்பா என்று நமக்குத் தெரியும்.

ரிக்வேதத்தில் அசுரக்னா என்ற சொல்லும், வரசிகா என்ற சொல்லும் உள்ளது. இந்திரன் வரசிகாவையும் அவன் குலத்தையும் முற்றிலுமாக அழித்தான். அசுரக்னா என்ற பாத்திரத்தில் இருந்து இதைச் செய்தான். வரசிகா என்பது ஒரு அசுரனுடையப் பெயர் (சாயனார் கூறுகிறார்). அவர்களது நகரம் ஹரியுபியாகும், அதாவது சிந்து வெளியின் ஹரப்பா...பல்வேறு நூல்களின் ஆய்விலிருந்து சிந்து வெளியின் நாகரீகத்தை தோற்றுவித்தவர்கள் அசிரியாவிலிருந்து என்று பானர்ஜியும் சாஸ்த்ரியும் கருதினர். இக்கருத்தை சமகால அகழ்வாராய்ச்சி உறுதிப்படுத்த வேண்டியுள்ளது என்று சட்டோபாத்தியா குறிப்பிடுகிறார்.

வருணாசரமத்தைத் தோற்றுவித்து இன்று பல்வேறு பிரிவினைகளுக்கும், கலாச்சார, சாதிய பூசல்களுக்கும் ஆரிய-பார்ப்பனியர் புனைந்த கதைகளே காரணம். இந்திரன் போன்ற அரசனைப் போற்றி, யாசகம் பெற பாடிய துதிப்பாடல்களை வேதங்கள் என்று செருகல் செய்து அக்கால பழங்குடியினரை அசுரர்களாக்கி, ஆரிய இனப்பெருக்கத்திற்காக கூட்டுக்கலவிகளை யாகங்களின் முன் நிகழ்த்தி அவ்வாறு பிறக்கும் குழந்தைகளை தேவக்குமாரர்களாக்கி எதிர்ப்புகளை சமாளிக்க முடியாதபோது மற்றவர்களின் வழிபாட்டு நம்பிக்கைகளை உள்வாங்கி அவற்றையும் சாஸ்திரங்களாக்கி, அரசர்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு பக்தி இலக்கியங்கள் தோற்றுவித்து மக்களை பல்லாயிரம் ஆண்டுகளாக அடிமைகளாக்கி வைத்து வருகின்றது பார்ப்பனியம். அதுவே பெண் அடிமைத்தனத்திற்கு பெரிதும் (ஏன் முழுதும்) வித்திட்டது.

காரல் மார்க்ஸ் மூலதனத்தை எல்லாக் கேடுகளுக்கும் மூலமாய் கூறுகிறார். பிந்தையக் காலங்களில் பொருளாதாரத்தின் பங்கு பெரிதும் இருக்கிறது என்பது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருந்தாலும். இந்தியாவைப் பொருத்த வரை, ஆதி காலத்தில் பணம், பொருள், அதிகாரம் எல்லாவற்றிகும் பேராசைப் பட்டு மக்களை மூடர்களாக்கி, கடவுளின் பெயரால் அச்சுறுத்தி, வருணாசிரமத்தை தோற்றுவித்து சர்வ நாசம் செய்தவர்கள் பார்ப்பனர்களே. ஆங்கிலேய படையெடுப்பின் போது கூட அவர்களுடன் கூட்டு வைத்துக்கொண்டது அவர்களே. அவர்கள் தோற்றுவித்த வரலாறும், கதைகளுமே பள்ளிகளில் பாடமாக கற்றுத்தரப்படுகிறது. மறைக்கப்பட்ட வரலாறானது எதிர்புக் கொள்கைக் கொண்டவர்கள் தேடிப்போய் படிப்பதால் மட்டுமே கிட்டுகிறது.

குறிப்புகள்:

இந்திய வரலாற்றில் பகவத் கீதை – பிரேம்நாத் பஸாஸ். விடியல் பதிப்பகம்.

மனு தர்ம சாஸ்திரம்- மொழிபெயர்ப்பு திரிலோக சீதாராம். அலைகள் வெளியீடு

கொங்கனி அகராதி- பண்டிட் பி.பி.ஜனார்தன்.

உலகாயதம் – தேவி பிரசாத் சட்டோபாத்யாயா.

No comments:

Post a Comment