Thursday, December 16, 2010

கர்நாடக இசை தமிழிசையிலிருந்து திருடப்பட்டதா - பொ. வேல்சாமி


பொற்காலங்களும் இருண்ட காலங்களும் எனும் தொகுப்பிலிருந்து:

இருபதாம் நூற்றாண்டிலிருந்துதான் தமிழகத்துக்கு வரலாறு தொடங்குகிறது. ஏன் அதற்கு முன்னர் வரலாறு இல்லையா என்ற ஐயம் எழுவது இயல்புதான்.அதற்கு முந்தைய காலங்களில் வரலாறும் புராணங்களும் செவிவழிச்செய்திகளும் ஒன்றாகக் கலக்கப்பட்டுக் கர்ண பரம்பரைக் கதைகள்தான்வழக்கிலிருந்தன. இதனால் கரிகால் சோழனுக்கு இளங்கோவடிகள் பேரனானார்.*1 ஒளவையாரும் புகழேந்திப் புலவரும் நூற்றாண்டுகள் தோறும்அவதரித்தனர். திருவள்ளுவர் நக்கீரரோடு இணைக்கப்பட்டார்.*2 பேராசிரியர் உரை எது, நச்சினார்க்கினியர் உரை எது, பரிமேலழகர் உரை எதுஎன்னும் வேறுபாடு தெரியாமல் எல்லோரும் ஒன்றாகப் போட்டுக் குழப்பப்பட்டனர். தமிழ்நாட்டில்தான் இந்த அவல நிலை இருந்ததாகக்கொள்ளவேண்டியதில்லை. இந்தியா முழுமையிலும் இதே நிலைதான். இருபதாம் நூற்றாண்டில் இத்தகைய செய்திகள் தொகுத்துப் பகுத்து ஆராயப்பட்டு,முறைப்படுத்திய வரலாற்று நூல்கள் வெளிவரத் தொடங்கின. இத்தகைய வரலாற்றுப் புரிதலுக்கு அடித்தளமிட்டவர்கள் ஐரோப்பியர்களான வெள்ளையர்களே.வெள்ளையர்களால் எழுதப்பட்ட இந்திய-தமிழக வரலாற்றுக் குறிப்புகள், வெள்ளையர் கண்ணோட்டத்தின்படி ஐரோப்பியர்களைப் பகுத்தறிவுஉள்ளவர்களாகவும் மற்றவர்களை பழங்குடியினராகவும் நாகரிகம் குறைந்தவர்களாகவும் படைத்துக் காட்டின.


பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய முறையில் கல்வியறிவு பெற்ற தமிழர்களான பார்ப்பனர்களும் முதலியார், வெள்ளாளர் போன்றஉயர் சாதிச் சூத்திரர்களும்தான் முன்னணியில் இருந்தனர். குறிப்பாகப் பார்ப்பனர்கள், வெள்ளையர்களின் நிர்வாக அமைப்பில் முதல் இடத்தைப் பிடித்துவிட்டனர்.கடந்த கால வரலாற்றில் உயர் சாதிச் சூத்திரர்களாகிய தங்களுடன் சேர்ந்து கொண்டு அதிகாரத்தை அனுபவித்த பார்ப்பனர்கள், நிகழ்காலத்தில் தங்களைவிட்டுவிட்டு ஆங்கிலேயர்களை அண்டி அதிகாரத்தில் பங்கெடுத்தது கண்டு சூத்திர உயர் சாதியினர் கொதிப்படைந்திருந்தனர். இந்த வகையான நட்பும் பகையும்பூண்ட பார்ப்பன, சூத்திர உயர் சாதித் தமிழர்களால்தான் தமிழக வரலாற்றுப் புனைவுகள் முதன்முதலில் உருவாக்கப்பட்டன.



இத்தகைய சூழ்நிலையில்தான் தமிழக வரலாறு தொடர்பான எழுத்துகள் வர ஆரம்பித்தன. வரலாற்றுப் புனைவாளர்கள் இயல்பாகச் செய்யக்கூடியதைப்போன்று தங்களுக்குச் சாதகமான செய்திகளை வரிசைப்படுத்தி வரலாறாகத் தொகுத்த இவர்கள், பாதகமான ஒரு காரணத்தையும் கற்பித்தனர். நவீன தமிழ்வரலாற்றில் இத்தகைய கற்பிதங்கள் ஏராளம் உண்டு. அவை பொற்காலங்கள், இருண்ட காலங்கள், நாகரிகமற்றவர்களின் ஆக்கிரமிப்புகள் போன்றபல. சூத்திர மேல் சாதியினருக்குச் சங்க காலம் பொற்காலமாக மாறியது. ஏனென்றால் பார்ப்பனர்கள், சூத்திரர்களை அண்டியிருந்த காலம் அதுதான்.பார்ப்பன உயர்சாதிச் சூத்திரர்களுக்கு இருண்ட காலம் என்பது களப்பிரர் காலம். ஏனென்றால் பழங்குடித் தமிழ் மக்களின் நிலங்களைக் கைப்பற்றும் முயற்சியில்தோல்வியடைந்து இந்தப் பார்ப்பன சூத்திரக் கூட்டு ஒடுங்கியிருந்த காலம் இது. இசுலாமியர் வருகையினால் இந்தக் கூட்டின் கொடுங்கோன்மையிலிருந்துஒடுக்கப்பட்ட மக்கள் தற்காலிகமாக விடுபட்டிருந்த காலம் இது. குறிப்பாகத் தங்கள் அதிகாரம் ஓங்கிய காலங்களை இந்தக் கூட்டாளிகள்பொற்காலம் என்று எழுதுவார்கள். தங்கள் அதிகாரத்தைச் செயல்படுத்த முடியாத காலங்களை இவர்கள் இருண்ட காலம் என்பார்கள். நாம் கேட்கவேண்டிய கேள்வி, யாருக்குப் பொற்காலம்? யாருக்கு இருண்ட காலம்? கடந்த காலப் புனைவுகள் என்பன சில தலைமுறைகள் கடந்தவுடன் பொதுக்கருத்தியலில் திராவிடக் கருத்தியலின் ஊடாக இயல்பான உண்மைகள் போன்று உருப்பெறுகின்றன. இந்த உருவாக்கம் அனைத்து மக்களுக்கும்பொதுவானது என்ற மாயக் கருத்தையும் வலுவாக விதைத்துவிடுகின்றது. இதனால் சுஜாதா போன்ற பார்ப்பனர்கள், (3) மு. அருணாச்சலம் போன்றசூத்திர சாதி ஆராய்ச்சியாளர்கள், (4) சமீப காலங்களில் தமிழிசைப் பற்றி (5) பல நல்ல கட்டுரைகளை எழுதிவரும் ந. மம்முது போன்றவர்கள் ஒரே குரலில்பேசும் நிலை ஏற்படுகிறது.


உண்மையில் அந்தக் காலகட்டம் எப்படி இருந்தது என்பதைக் கொஞ்சம் பார்ப்போம். இந்தியாவுக்கும் அதாவது தமிழ் நாட்டிற்கும் மேற்குநாடுகளாகிய அரேபியா, கிரேக்கம், ரோம் போன்ற நாடுகளுக்குமான வர்த்தகம் கொடிகட்டிப் பறந்த காலம் இதுதான். இதற்கான சான்றுகள்தமிழகமெங்கும் காணப்படுவதை இன்றைய அகழ்வாய்வுகள் வெளிப்படுத்துகின்றன. அரிக்கமேடு, கரூர், கொற்கை போன்ற பல இடங்களில் குவியல்குவியலாக ரோமானியப் பொற்காசுகள் கிடைத்திருக்கின்றன. இந்தக் காலத்தைச் சேர்ந்த சிலப்பதிகாரத்தில் மதுரை நகர் பற்றிய வருணனையும்மதுரைக் காஞ்சியில் வருகின்ற மதுரை நகரத்தைப் பற்றிய வருணனை போன்ற பகுதிகளும் இந்திய மொழி இலக்கியங்கள் எதிலும்காணக்கிடக்கவில்லை என்று வரலாற்று அறிஞர் அ.ஃ . பசாம் தன்னுடைய வியத்தகு இந்தியா (The wonder that was India) நூலில்குறிப்பிடுகின்றார்.(6)


இந்தியத் தத்துவ வரலாற்றில் தலைசிறந்தவராகக் குறிக்கப்படுகின்ற தர்மகீர்த்தி, சீனாவிலும் ஜப்பானிலும் பெளத்த மதத்தைப்பரப்பி, அவர்கள் மத்தியில் இன்றுவரை புகழ்பெற்று விளங்கும் போதி தர்மர், இலங்கையில் மகாயான பெளத்தத்தைப் பரப்பிசிங்கள மொழியிலும் பாலி மொழியிலும் பல நூல்களை எழுதிய சங்கமித்தரர் போன்ற நூற்றுக்கணக்கான ஜைன பெளத்தஅறிஞர்களும் துறவிகளம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதைமுதலிய தமிழில் தோன்றிய முதல் காவிய நூல்களும் பல்வேறுபட்ட யாப்பு நூல்களும் இசை நுணுக்கம், இந்திரகாளியம் போன்றஇசை நூல்களும் திருக்குறள், நாலடியார் போன்ற நீதி நூல்களும் தமிழில் தோன்றிப் புகழ் பரப்பியதும் இந்தக்காலம்தான்.இத்தகைய தன்மைகள் நிறைந்த இக்கால கட்டத்தை இருண்ட காலம் என்று சொல்லத் துணிபவர் குருடர்களாகத்தானே இருக்கமுடியும். உயர்சாதிக் குருடர்கள் இப்படிக் கூறுவதை விட்டுவிடுவோம். மம்முது போன்ற இசைத் துறை ஆராய்ச்சியாளர் ஒருவர்தமிழ் இசைக்குக் கேடு உண்டாக்கியவர்கள் ஜைனர்களும் பெளத்தர்களும் களப்பிரர்களும் என்று கூறுவது தமிழக வரலாற்றைச்சரியாகக் கவனிக்காததால் வந்த பிழையெனக் கருதலமா?


சமணர்களாலும் பெளத்தர்களாலும் இசை நூல்கள் அதாவது தமிழிசை நூல்கள் அழிக்கப்பட்டிருந்தால் தமிழிசை, நாடகம்போன்றவற்றைப் பேசும் நூல்களான இசை நுணுக்கம், இந்திர காளியம், பஞ்ச மரபு, பரத சேனாதிபதியம், மதிவாணர் நாடகத்தமிழ் நூல் போன்றவற்றை அடியார்க்கு நல்லார் 600 ஆண்டுகளுக்குப் பின் தன்னுடைய உரையில் எவ்விதம் கையாண்டிருக்கமுடியும்? இன்றைய நிலையிலும் பழந்தமிழ் இசைபற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் அதற்கான ஆதாரங்களைச் சமண, பெளத்தநூல்களான சிலப்பதிகாரம், பெருங்கதை, சீவகசிந்தாமணி, யசோதர காவியம், போன்ற நூல்களிலிருந்துதானே பெறுகின்றனர்.இந்த வெளிப்படையான உண்மை புரியாமல் போனது ஏன்? ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் போன்றவர்களின் பதிகங்களுக்கானஇசை வடிவங்கள் இந்தப் பதிகங்களைத் திருமுறைகளாகத் தொகுக்கும்போது காணாமல் போனதாகக் கதை வருகிறதே, அதுஎப்படி? அப்படிக் காணாமல் போன இசைப் பகுதிகளைப் பாணர் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணிதான் மீள்வார்ப்பு செய்துகொடுத்ததாகக் கதை இருக்கிறதே(7) இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்றுவாய்க்கு வந்ததைச் சொல்லுவது ஏன்?


உண்மையில் இந்தப் பிரச்சினைகள் சமணர்களும் பெளத்தர்களும் சம்மந்தப்பட்டவை அல்ல. இது சாதி சார்ந்த பிரச்சினை. உயர்சாதியினர் வரலாறு எழுதியதால் இத்தகைய பகுதிகளை மறைத்து விட்டுச் சமணர்கள், பெளத்தர்கள், களப்பிரர்கள் என்று கதைகட்டினர். ஏனென்றால் இசையைப் போற்றி வளர்த்த தமிழர்கள், பார்ப்பன சூத்திரக் கூட்டு ஆதிக்கத்தின் கீழ் தமிழகம் வந்தபோதுதாழ்த்தப்பட்டவர்களாக்கப்பட்டனர். பழந்தமிழ் நூல்களில் குறிக்கப்படும் இசைவாணர்களான பாணர், பறையர், கடம்பர், துடியர்(புறம்.335) போன்றவர்கள் பின்னாளில் தீண்டத்த தகாதவராக்கப்பட்டனர். இவர்களுக்குப் பொதுக்களம் மறுக்கப்பட்டது.இவர்களுடைய இசைக் கருவிகள் இழிவுபடுத்தப்பட்டன. திருநீலகண்ட யாழ்ப்பாணர் கதையில் ஞானசம்பந்தர் இவரைக்கோவிலுக்குள் அழைத்துச் செல்வது கூடத் திருநீலகண்டரின் இசைப் புலமைக்காகத்தானே தவிர ஞானசம்பந்தருக்குச் சாதி ஒழியவேண்டும் என்ற சிந்தனையால் அல்ல என்பதை உளம் கொள்ள வேண்டும். இதற்கு இந்த இசைவாணர்கள் அல்லது இசை நாடகம்சார்ந்த கலைஞர்களின் பயிற்சி முறையும் காரணம் ஆகும்.


சுமார் ஆறு, ஏழு வயதில் பயிற்சிக்குள் நுழையும் இவர்கள் இருபது வயதுக்குப் பின்னர் அரங்கத்துக்கு வருகின்றனர்.இடைப்பட்ட அவ்வளவு காலமும் இவர்கள் இசை நாடக நாட்டியப் பயிற்சி தவிர கல்விப் பயிற்சி பெறவே வாய்ப்பில்லாதவாழ்க்கையைப் பெற்றுவிடுகின்றனர். ஆகவே இத்தகைய கலைஞர்கள் கலைகளில் மேம்பட்டு விளங்கினாலும் நூல் கல்வியைப்பொருத்தமட்டில் தற்குறிகளாகவே இருந்து விட்டனர். இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய ஜி.என். பாலசுப்ரமணியம்என்பவர்தான் இசைக்கலைஞர்களுள் முதலில் பி.ஏ. பட்டம் பெற்ற பட்டதாரி (8) இத்தகைய பின்புலம் ஒருபுறமென்றால்,மறுபுறத்தில் நாட்டியத்தில் தேர்ந்த பெண்மணிகள் தேவதாசிகள் என்று பெயர் சூட்டப்பட்டுப் பரத்தையர்களாகக்குறிக்கப்பட்டனர். இவர்களுடைய நாட்டிய நிகழ்ச்சி சதிர் என்று இழிவாகக் குறிக்கப்பட்டது. முத்துப் பழனி போன்றபதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் பெண்கவிஞர், வடமொழி, தென்மொழிகளில் வல்லவர், நாட்டியத்தில் அந்தக்காலகட்டத்தில் தலைசிறந்தவர் என்று போற்றப்பட்டவர். அவர் கூடப் பிரதாப சிம்மன் என்ற தஞ்சை மராட்டிய மன்னனுக்குவைப்பாட்டியாகத்தான் வரலாற்றில் குறிக்கப்படுகிறார். இத்தகைய பெண்கள் சோழர் காலத்திலிருந்தே நாட்டியம் சார்ந்தவிபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்காக மராட்டியர் காலம் வரை விற்பனை செய்யப்பட்டதற்கு ஏராளமான சான்றுகள் தமிழகவரலாற்றில் குவிந்துள்ளன.

இத்தகைய இழி நிலைக்குச் சூத்திர தமிழர்களால் ஆட்படுத்தப்பட்ட மக்கள் எப்படித் தமிழ் இசையையும் நாட்டியத்தையும்மரியாதையுடன் போற்றியிருக்க முடியும்? வயிற்றுப் பிழைப்புக்குத்தான் இந்தக் கலைகள் அவர்களுக்குப் பயன்பட்டன.இருபதாம் நூற்றாண்டில் இந்தக் கலைகள் தம் கையிலிருந்தால் தமக்குப் பெருமை கிடைக்கும் என்பதை உணர்ந்த பார்ப்பனர்கள்கைவசப்படுத்திக் கொண்டனர். அதற்குக் கர்நாடக சங்கீதம் என்று புனிதப் பெயருமிட்டனர்.

இதுபோன்று சூத்திர உயர் சாதித் தமிழர்களால் புறக்கணிக்கப்பட்டவை நுண்கலைகள் மட்டுமல்ல, நம்முடைய தமிழ்நூல்கள் பலஇன்றும் ஐரோப்பிய நாடுகளின் பழம்பொருட்சாலைகளில் தூங்கிக்கொண்டுள்ளன. சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்னர்தொல்காப்பிய சொல்லதிகார குறிப்பு என்று பி.ச. சுப்ரமணிய சாஸ்திரியால் எழுதப்பட்ட நூல் தமிழ்மொழியின் சொல்லிலக்கணம்அனைத்தும் வடமொழியான சமஸ்கிருதத்திலிருந்து தான் உருவானது என்று விவாதித்தது. அந்நூலை அதேகாலத்தில்தன்னுடைய ஆய்வினூடாக கடுமையாக விமர்சித்து தமிழ் தனித்துவமுடையது என்பதை விஞ்ஞானப்பூர்வமாக நிலைநாட்டிபெருந்தமிழ் இலக்கண அறிஞரும் போலிஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டருமான மன்னார்குடி சோமசுந்தரம்பிள்ளை அவர்கள் எழுதியகட்டுரைகள் எந்தத் தமிழனுக்கும் தெரியாது. தொல்காப்பியம்-பொருளதிகாரத்திற்கான பேராசிரியர் உரைக்கு இவரால்ஆராய்ச்சிக் குறிப்பு எழுதப்பட்டு சுமார் அறுநூறு பக்கங்களாக வெளியிடப்பட்ட நூல் தமிழர்களால் இன்று மறக்கப்பட்டநூல்களில் ஒன்று. இந்நூல் பிரிட்டிஷ் மியூசியத்திலுள்ளது. நம்முடைய ஐம்பொன் சிற்பங்கள், தமிழ்க்கலை வரலாறு பற்றிய குறிப்புகள் போன்ற எதுவும் தமிழர்களால் இன்றுவரைகண்டுகொள்ளப்படவில்லை. 21ம் நூற்றாண்டிலும் இந்நிலை தொடர்கிறது. தமிழை வளர்ப்போம், தமிழரை வளர்ப்போம் என்றுஆர்ப்பாட்ட அரசியலை நடத்தியவர்களை நம்பி பின்சென்ற தமிழர்கள் இன்று பேச்சுத்தமிழையும் கூட தம் பிள்ளைகளுக்குஒழுங்காக கையளிக்கும் நிலையிலில்லை என்ற கசப்பான உண்மையும் உளம்கொளத்தக்கது. பாரம்பரியமாக சாதிப்பெருமைபேசி தமக்குள் சுருங்கிக்கொண்ட சாதித்தமிழர்கள் அரசியல் அதிகாரம் பெறுவதற்காக மக்கள் மத்தியில் வீசிவிட்ட சிலபொருளற்ற வார்த்தைகளில் ஒன்றுதான் தமிழிசையை களவாடிவிட்டதானக் கதையும் ஆகும்.


குறிப்புகள்

1. A.L. பசாம், வியத்தகு இந்தியா, இலங்கை அரசாங்க வெளியீடு, முதற்பதிப்பு 1963, பக்.606


2. கி.சு.வி. லட்சுமி அம்மணி ( ஜமீன்தாரிணி, மங்காபுரி) திருக்குறள் தீபாலங்காரம் ( வெளியீட்டு விபரம் தெரியவில்லை)முதற்பதிப்பு 1928, ப.கரு ( திருவள்ளுவ நாயனார் சரிதம் )


3. சுஜாதா, ஆனந்த விகடன்


4. மு.அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு பதிமூன்றாம் நூற்றாண்டு, காந்தி வித்தியாலயம், திருச்சிற்றம்பலம்,1970, ப.363


5. ந.மம்முது, புதிய பார்வை, டிசம்பர் 11.5,2004, பக்.26


6. A.L. பசாம், வியத்தகு இந்தியா, இலங்கை அரசாங்க வெளியீடு, முதற்பதிப்பு 1963,பக்.287


7. க. வெள்ளைவாரனன், பன்னிரு திருமுறை வரலாறு( முதற்பகுதி), அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மறுபதிப்பு 1994


8. இசையை வாழ்க்கையாகக் கொண்டவர்கள் அநேகமாகப் பள்ளிப்படிப்பு விசயத்தில் அத்தனை அக்கறைக்காட்டவில்லை.ஒன்று அவர்களுக்குப் பள்ளிப்படிப்பில் நாட்டம் செல்லவில்லை. அல்லது படிப்பு அவர்களுக்கு வரவில்லை.பள்ளிப்படிப்பைவிட அனுபவப்படிப்பையே அவர்கள் அதிகம் நம்பினார்கள். ஆனால் சங்கீத வித்வான் ஸ்ரீமான் ஜி.என்.பாலசுப்ரமணியம் பி.ஏ., ஹானர்ஸ்( லிட்டரேச்சர்) முதல் சில ஆண்டுகளில் அவருடைய கச்சேரிகளைப்பற்றிய அறிவிப்புகளில்இப்படித்தான் நீளமாய் போடுவார்கள் பட்டதாரி கலைஞராகவே அறிமுகமானார். (சு.ரா., இருபதாம் நூற்றாண்டின் சங்கீத மேதைகள், அல்லையன்ஸ் கம்பெனி, முதல்பதிப்பு1987,பக்.113) -


புதுவிசையில், ஏப்ரல் - ஜீன் 2005 இல் பொ. வேல்சாமி அவர்கள் எழுதியக் கட்டுரை பொற்காலங்களும் இருண்ட காலங்களும் எனும் தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது.


Monday, November 15, 2010

அனைவருக்குமான விடுதலை


இறவாமையோடு
பிரிக்கமுடியாத சுழல்காற்றோடு
விடுதலைக்கான அனைவரும்
ஒன்று சேருங்கள் - அவ்வழியே

மக்கள் அன்னப்பறவையின் இறகை கொண்டிருந்தனர்
சுருட்டப்பட்ட
கடுமையான உழைப்பின் செந்நிறக் கொடிகளை இன்று விரிக்கின்றனர்
ஆவேசமாக விடுதலையின் கண்களை எரிக்கின்றனர்
கொழுந்து விட்டு எரியும் நெருப்பு
ஒற்றுமையால் உறைந்து நிற்கிறது
பிம்பங்கள் விழுகிறது - அவர்கள் பொய்களை பேசட்டும்
பசி
நமக்கு புதுமுகங்களை வர்ணம் தீட்டட்டும்

எழுச்சியூட்டும் பாடல்களை நோக்கி ஒன்றாக அணி வகுப்போம்
விடுதலைக்கான அனைவரும் - முன்னேறுங்கள்!
நாம் அழித்தொழிப்பவர்களாக வேண்டுமா
நாம் மீள்வோம்.
ஒவ்வொருவருக்கும் மீண்டும் ஓர் வாய்ப்பு உள்ளது

நமக்காக காத்திருக்கும் தூரங்களை மாயங்களால் நிரப்புவோம்
அணிவகுக்கும் கால்களே - பெருகும் ஒலிகளைக் கூர்ந்துக் கேளுங்கள்
மேலும் கடவுளர்களும் விலங்கிடப்பட்டிருந்தால்
அவர்களுக்கும் சேர்த்து விடுதலையை வழங்குவோம்.

- Velemir Khlebnikov (1885-1922), Russian Federation, Translated in english by Alex Miller. தமிழில், கொற்றவை.

S P A R R O W - Sound and Picture Archives for Research on Women


SPARROW is:

• A trust set up in 1988 [Register Number E-11958] in Mumbai to build a national archives for women with print, oral history and pictorial material.

• A live archives reaching out to schools, colleges, women's groups and other organisations.

• An active agent of change.

• A forum for discussions.

• An interactive space

• A daring flight into unexplored areas of experience and expression.

SPARROW believes:

• That recording, reviewing, recollecting and reflecting on women's history and life and communicating this information in various ways is an important activity in development.

• That positive change is possible with knowledge and awareness of women's lives, history and struggles for self-respect and human dignity.

http://www.sparrowonline.org/index.htm


Monday, November 8, 2010

ஆப்பிள் புகையாவதுபோல்.....


நான் வருந்துவதில்லை நான் அழுவதோ அழைப்பதோ இல்லை
ஆப்பிள் மலர்ந்து புகையாவது போல் எல்லாம் கடந்து செல்லும்
என் ஆத்மா
இலையுதிர்கால தங்கச் சாயலைக் கொண்டிருக்கிறது
மேலும்
என் இளமையை திரும்பப்பெற இயலாது

ஏற்கணவே குளிரால் கலங்கும் என் இதயம்
கிளர்ந்திருக்கிற துடிப்பை வைத்திருக்கப்போவதில்லை
அது
பூச்சைக்காடுகளின் அதிசய உலகம்
என் வெறுமைக் கால்கள் அழுந்தி நடந்திட வசீகரிக்கப்போவதில்லை

அமைதியற்ற என் ஆவி சிறிது, சிறுது எப்போதாவது
கட்டுக்கடங்காத என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த தூண்டியது
கிளர்ச்சி மடிந்துவிட்டது, உணர்ச்சி துடித்துடிப்பு மென்மையாகிவிட்டது
மேலும் பசுமையான உணர்ச்சிகள் நீண்ட காலமாய் செலவாகிறது

வேட்கைகள் இப்போது என்னை சற்று விட்டுவைத்திருக்கிறது
நான் வாழ்க்கையை கணவுக் கண்டேனா அல்லது உண்மையாகவே வாழ்ந்தேனா?
இளவேனிற் பருவத்தின் அதிகாலையில்
மணிச்சத்தம் கூடிய காற்றில் அழகான இளஞ்சிவப்பு குதிரையின் மீதேரி
நான்கு கால் பாய்ச்சலில் கடந்துவிட்டேன் போலும்

இவ்வுலகில் எல்லோரும் மறிக்ககூடியவர்களே
பலம் குன்றிப்போன நம்பிக்கைகளை வளரச்செய்யும் வரம் தர
மேப்பில் மரத்திலிருந்து
இப்போதும் கூட
செம்பு மென்மையாக வழிகிறது

இப்பொழுதும் எப்பொழுதும்
என் விதி
வாழ்த்துக்குரியதாகும்



- கவிதை மூலம் SERGEI YESININ (1895- 1925) russian federation, ரஷ்யனிலிருந்து ஆங்கிலத்திற்கு OLGA SHARTSE தமிழில் கொற்றவை.

நூல் - land of the soviets in verse and prose.

Thursday, October 21, 2010

அன்புள்ள டாக்டர் மார்க்ஸ்.........


அன்புள்ள டாக்டர் மார்க்ஸ் – ஒரு சோசலிசப் பெண்ணிலையாளரின் கடிதம், வ. கீதா, எஸ்.வி. ராஜதுரை, விடியல் பதிப்பகம். (1999)

அன்னெத் தெவ்ரு எனும் கற்பனைக் கதாபாத்திரம், 1851இல் மார்க்ஸிற்க்கு எழுதும் கடிதமாக வரைந்திருக்கிறார் ஷீலா ரௌபாத்தம். அதில் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைப் பட்டியல் பின் வருமாறு:

”ஆகாயத்தில் கோட்டை கட்டுவது, உங்களுக்குப் பிடிக்காது என்று எனக்குத் தெரியும். எனவே, எங்களது செயல்பாடுகளின் அடிப்படைகள், நாங்கள் உருவாக்கியுள்ள கோரிக்கைகளின் பட்டியலை இங்கு தந்து என் கடிதத்தை முடித்துக்கொள்கிறேன்.

  • பெண்களுக்கு சரிசமமான குடிமை உரிமைகள், அரசியல் உரிமைகள்.
  • தொழிலாளர் குழுக்களில் பெண்களுக்குச் சம பங்கேற்பு.
  • பெண்களுக்குச் சம ஊதியம்; பெண்களுக்கு குறைந்த ஊதியம் தரப்படும் பழக்கத்தை நிறுத்துதல்; நீண்ட வேலை நேரத்தைக் குறைத்தல்; சில தொழில்களைச் செய்வதிலிருந்து பெண்களை விலக்கி வைத்தலை நிறுத்துதல்.
  • வீட்டில் வேலை செய்யும் பெண்களுக்குத் தொழிற்கூடங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குத் தரப்படும் அதே விகிதத்தில் ஊதியம் வழங்குதல்.
  • வேலையில்லாத் திண்டாட்டம் உள்ள காலங்களில் வேலையைப் பகிர்ந்து கொள்ளுதல்.
  • விலைமாதருக்கு மாற்று வேலை வாய்ப்பு.
  • வேலை செய்யும் இடங்கள் எல்லாவற்றிலும் உணவு விடுதிகள், குழந்தைக் காப்பகங்கள்.
  • மருத்துவச்சிகள் உட்பட அணைத்துப் பெண்களுக்கும் பயிற்சி மையங்கள்.
  • வீட்டு வேலை செய்யும் பணியாட்கள் சந்திக்கவும் ஒழுங்கமைத்துக் கொள்ளவும் மையங்கள் ஏற்படுத்துதல்.
  • பெண் தொழிலாளர்கள், ஆண் தொழிலாளர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து (தொழில் தொடங்க) மூலதனம் பெறுவதற்காகச் சங்கங்களை உருவாக்குதல்.
  • நல்ல வேலை நிலைமைகள்.
  • கடினமான காலங்களில் உழைப்பைக் கொடுத்து, அதற்குப் பதிலாக உணவையும் பாதுகாப்பையும் பெறுவதற்கான வழிமுறைகள்; இலக்கியம், கலை ஆகிய துறைகளில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களுக்கு உதவும் பொருட்டும், கலைகளில் ஈடுபாட்டை வளர்க்கவும் இலக்கிய, கலைச் சங்கத்தை உருவாக்குதல்; வேலையில்லாப் பெண்களுக்கு ம் கூட ஒரு சங்கத்தை உருவாக்குதல்.
  • குழந்தைகள் உள்ள குடும்பங்கள், குழந்தைகளோடு தனியாக வாழும் தாய்மார்கள் அல்லது தந்தைமார்கள் வாழ்வதற்கேற்ற தோட்டமுள்ள, பெரிய, காற்றோட்டமான, பொது சமையல் அறைகள் உள்ள வீடுகள்.
  • பொது உணவு விடுதிகள், குளியல் அறைகள், கூட்டம் கூடுவதற்கான பொது அறைகள், பொது நூலகங்கள், பொது குழந்தைக் காப்பகங்கள், பொழுதுபோக்குக்கான பொது இடங்கள்.
  • பெண் குழந்தைகள் உட்பட அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசமான பொதுக் கல்வியும் பயிற்சியும்.
  • ஏழைக் கர்பிணிப் பெண்களை மரியாதையுடன் நடத்தும் ஒரு சமூக நலத்திட்டம்.
  • இலவசமான மருத்துவச் சேவை. மருத்துவச்சிகளுக்கு அரசு ஊதியம் வழங்குதல்.
  • ஆண்களைச் சார்ந்துதான் பெண்கள் இருக்க வேண்டும் என்ற நிலைமையைப் போக்கும் வகையில் பெண்களுக்கு நிதியுதவி செய்கிற ஒரு சமூக நிதியம்.
  • விருப்பப்படால் மட்டுமே பெண்கள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல்.
--------- ………………. சென்ற ஆண்டின் கோடைக் காலத்தில் நடந்த அமெரிக்கப் பெண்கள் மாநாட்டிற்கு போலின் ரோலானும் ழான் தெர்வானும் எழுதிய கடிதம் எனக்கு உற்சாகமூட்டுவதாக உள்ளது: “அமெரிக்கச் சகோதரிகளே! குடிமைச் சமத்துவம், அரசியல் சமத்துவம் ஆகியவற்றுக்கான பெண்களின் உரிமைகளின் நியாத்தை உயர்த்திப் பிடிப்பதில் பிரான்சிலுள்ள உங்களுடைய சோசலிசச் சகோதரிகள் உங்களோடு ஒன்றுபட்டுள்ளனர். ஒருமைப்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்படும் கூட்டுறவின் வலிமையின் மூலமாகத்தான் – அதாவது உழைப்பை ஒழுங்கமைப்பதில் உழைக்கும் வர்க்கங்களைச் சேர்ந்த ஆண், பெண் ஆகிய இரு பாலாரும் உருவாக்கும் சங்கத்தின் மூலமாகத்தான் சமத்துவத்தையும், பெண்களின் குடிமை மற்றும் அரசியல் சமத்துவத்தையும், அணைவரது சமூக உரிமையையும் முழுமையாகவும் அமைதி வழியிலும் பெற முடியும் என்று நாங்கள் ஆழமாக நம்புகிறோம்.:

’விடுதலைக்கான போராட்டத்தில்

உங்களுடன் உண்மையாக நிற்கும்

அன்னெத் தெவ்ரு

Saturday, October 2, 2010

யாமே அசுரர்...


கலை நிர்வாகம் பற்றிய ஒரு பட்டயப் படிப்பின் போது, பல்வேறு கலாச்சாரத் தலைப்புகளில் ஆய்வு மேற்கொள்ளும் அவசியம் எனக்கு ஏற்பட்டது. குறிப்பாக இந்தியச் சிற்பக் கலை. அதன் தொடர்சியாக இந்தியக் கலாச்சாரப் பாடத்திற்காக தாய்த்தெய்வ வழிபாடு குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டேன். அதற்காக மேற்கத்தியக் கலைப் பாடத்தில் பண்டையக் கலை வரலாறும் கற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. அப்பாடத்திற்கு நான் எடுத்துக் கொண்டது எகிப்தியக் கலையில் காகிதச் சுருள்’. இந்தியக் கலைப் பாடத்தில் பௌத்தக் கலை – அமராவதி ஸ்தூபா. ஆய்வுக்காக பல வல்லுனர்களின் புத்தகங்களை படிக்க நேர்ந்த்து. கடவுள் நம்பிக்கையற்ற எனக்கு, தொடக்க காலத்தில் கலை பக்தி வடிவமாகவே இருந்ததின் மூலம் வெளிப்படும் குறியீடுகள் என்ன என்பதிலேயே எனது தேடுதல் இருந்தது. ஒரு பக்கம் சிற்பக் கலையில் புராணக் கதைகளும், கதாப்பத்திரங்களின் குணங்களும் நன்மைத் தீமைக்கான சண்டை என்று பார்பனியக் கதைகளைக் கேட்டுக்கொண்டிருந்தேன். மறு பக்கம், கலாச்சாரப் பாடத்தில் மதத் தோற்றம், அதன் வளர்ச்சி, பண்டையப் பொருளாதாரம் எனக் கற்றுக்கொண்டிருந்தேன்.

ஒன்றோடு ஒன்று தொடர்புப் படுத்திப் பார்க்கும் பொழுது, சைவ வைணவப் போர், பக்தி இயக்கத்தின் தோற்றம், பௌத்தத்தின் வீழ்ச்சி, இசுலாமியப் படையெடுப்பில் அழிக்கப்பட்ட இந்துக் கோயில்கள் ஆகியன பற்றிய வரலாற்றுப் பாடங்கள் எனக்கு சமாதானத்துக்குறிய எத்தகவல்களையும் தரவில்லை. கேள்விகள் எழுந்துக் கொண்டே இருந்தது. குறிப்பாக சிந்து சமவெளி நாகரீகம் பற்றிய வரலாறு. அது பண்பட்ட நாகரீகம் என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால் அம்மக்கள் யார், எவ்வழித் தோன்றியவர்கள் என்பது சர்சையாக உள்ளது ஏனென்றால் கண்டெடுக்கப்பட்ட்ட முத்திரைகளில் உள்ள மொழி, குறியீடு ஆகியவற்றை இன்னும் பொருள் பிரிக்க முடியவில்லை (decipher) என்று கூறுகின்றனர். அதே சமயம், எகிப்திய இரகசியக் குறியீட்டு பதிவுகளை “hieroglyphs” பொருள் கண்டுபிடித்துவிட்டார்கள். அவர் ஒரு ஆங்கிலேயர்.

நம் நாட்டில் அகழ்வாராச்சிகளை மேற்கொள்பவர்கள் பெரும்பாலும், பார்பனர்களே, கண்டுபிடிக்கப்படும் பெரும்பான்மையான தொல்பொருள் சான்றுகள் பார்ப்பனிய சான்றுகளே. அதை நாம் சந்தேகங்கொள்ள வேண்டியிருக்கிறது.

சிந்துச்சமவெளி சமூகத்தில் நிலவிய யோனி வழிபாடு, தாய் தெய்வ வழிபாடு, பற்றிய குறிப்புகளின் பொருள் கண்டுவிட்டால், ஆரியர் / பார்ப்பனர் எப்படி விவசாயப் பொருளாதரத்தில் நிலத்தைப் போல் பெண்ணையும் வழிபட்ட முறைகளை சீர் குலைத்து, வயிற்றுப் பிழைப்பிற்காக பல்வேறு மூட நம்பிக்கைகளை புகுத்தி, ஆநிரைகளின் மூலம் செல்வத்தை கணக்கிடும் முறையை புகுத்தி, ஆணாதிக்கத்தை ஏற்றிவைத்தனர் என்பதற்கான உண்மைகள் சான்றுகளுடன் வெளிப்படும். இது குழந்தைத்தனமான பேச்சு போல் இருக்கலாம். ஆரியப் பித்தலாட்டம் பற்றியும், பண்டைய வரலாறு பற்றியும் பல்வேறு ஆய்வுகள் பார்ப்பனர் அல்லாதவரால் (பார்ப்பனக் குலத்தில் பிறந்து, அக்கொள்கைகளை எதிர்ப்பவர்களை பார்ப்பனர் அல்லாதார் என்று கூறலாம்) வெளிவந்திருக்கிறது, குறிப்பாக கோசாம்பி, சட்டோப்பாத்தியா போன்றோரின் ஆய்வுகள் நமக்கு விடிவெள்ளி.

இப்படி நான் குழம்பிக் கொண்டிருக்கையில், நம் புராணக்கதைகளில் வரும் அசுரர்கள், தேவர்கள் பற்றிய கேள்வி, மற்றும் பெண் கடவுள்களின் சித்தரிப்பு (எப்பொழுதும் ஆண் கடவுளைத் தொழுவது, அல்லது சாபம் பெறுவது), ரிஷி பத்தினிகள் கடந்த பதிவிரதை சோதனைக் கதைகள், அரசர், பார்ப்பனர், கோயில் தொடர்பு ஆகியவை பல்லாயிரம் கேள்விகளை எழுப்பிக்கொண்டேயிருந்த்து. அசுரர், தேவர், முனிகள் ஆகியோரெல்லாம் வெறும் நன்மை தீமை பற்றியக் குறியீடுகளாய் மட்டும் இருக்கக் கூடும் என்று என்னால் சமாதானம் கொள்ளமுடியவில்லை. ஏன் தேவர்கள் அனைவரும் பார்பனியத் தோற்றமும், அசுரர்கள் பழங்குடியினரின் தோற்றமாகவும் இருக்கக்கூடாது என்று தோன்றியது. தசாவதாரக் கதையை சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது என் மகள் கேட்டாள் “கடல் என்பது பூமியில் ஒரு பங்காக இருக்கும்பொழுது, அதை எப்படி கடலுக்குள் அசுரர்கள் ஒளித்து வைக்கமுடியும்”?. (குழந்தைகள் எதையும் நேரடியாக அணுகிவிடுகிறார்கள்) எல்லாம் பார்ப்பனிய வேலை என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது. உருவகம், சாதிய அரசியல், அரசர்களைக் கைக்குள் போட்டுக்கொள்ளும் வித்தை, சைவ வைணப் போர் என்று எல்லாம் தகவல்கள் கிடைத்தாலும், இதோ உண்மை என்று இரண்டுப் புத்தகங்கள் தோலுரித்துக்காட்டியது. ஆம் எவரெல்லாம் பார்ப்பனரில்லையோ, எவரெல்லாம் பார்ப்பனியத்தை எதிர்கிறார்களோ அவர்களெல்லாம் அசுரர், பழங்குடியினர் அசுரர். இதை பார்ப்பனிய எதிர்ப்பாளர்கள் படித்து அறிந்திருக்கலாம், யூகித்திருக்கலாம்.

கொங்கனி அகராதியின் பின்இணைப்பில், தேவர்கள், ரிஷி முனிவர்கள் பற்றியக் குறிப்புகள் பெரும் அதிர்வை ஏற்படுத்துகிறது. உரிய அனுமதியுடன் அவற்றை தமிழில் மொழிபெயர்க்கலாம்.

படைப்புக் கடவுளிடமிருந்து துவங்குவோம.

பிரம்மா படைப்புக் கடவுள் என்றும், வருணன் கடலின் கடவுள் என்றும் கூறுகிறோம். ஒரு பிரம்மா, ஒரு வருணன் தான் இருக்ககூடும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். அது உண்மையிலிருந்து விலகியிருப்பதற்கு சமமானது. பழங்கால செல்வந்தர்கள் எத்தனைப் பேர் இருந்தார்களோ அத்தனை பிரம்மாக்கள் இருந்தார்கள். எத்தனை நீர்வழிப் பாதை சுங்கச் சாவடிகள் இருந்தததோ அத்தனை வருணர்கள் இருந்தார்கள். பழம் பெரும் பணக்காரர்கள் யாகங்களை ஏற்பாடு செய்து வளமான இளம் ஆண், பெண் ஆகியோரை யாகங்களுக்கழைத்து தன் மேற்பார்வையில் உடலுறவுக் கொள்ளச் செய்து அவர்கள் மூலம் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான குழந்தைகளை உற்பத்தி செய்வார். அவரே பிரம்மா. இது மாபெரும் சமூகச் சேவை, ஆரியவம்சத்தின் குடியேற்றத்திற்கும், விரிவாக்கத்துக்கும் போரின்றி, இரத்தமின்றி உதவிய சேவை. இதுபோல் பல பிரம்மாக்கள், பல காலங்களில், இடங்களில் இருந்தனர். காஸ்யபன், புலஸ்தியன், தக்‌ஷன் இவ்வாறே பிரம்மாக்கள் ஆனர். கலவி நடக்கும் இடத்தில் இவர்கள் நேரடியாக இல்லாமல், ஏற்பாடு மட்டும் செய்து கொடுத்தால், அவர்கள் மனதைக் கொடுத்ததாக்க் கருதி, அவற்றின் போது பிறக்கும் பிள்ளைகள் பிரம்மனின் மனதிலிருந்து பிறந்ததாக கூறப்பட்டனர். (உ.ம் நாரதர்)

வருணனுக்கு வருவோம். பண்டைய ஆறுகளை ஒட்டி வளம் கொழிக்கும் வாணிபம் பெருகிக் கொண்டிருந்தது. வாடிக்கையாளர்கள் அச்சுறும் ஆஜானுபாகுவான தோற்றம் கொண்டவர், ரவுடிகள் படை, அதி வேகப் படகுகள் கொண்டு சட்டங்களை இயற்றி, சுங்க வரி வசூலிக்கும் கஸ்டம்ஸ் அதிகாரி வருணர் ஆவார். பணத்தை விட பொருளாகவே வரியை பெருவார். உ.ம் வசிஷ்தாவின் தந்தையான ஒரு வருணன் வரியாக குதிரைகளைப் பெற்றார். அவரிடம் மிக அரிதான பஞ்ச கல்யானி எனும் வகை குதிரைகளை இனப் பெருக்கம் செய்ய ஒரு குதிரை லாயம் வைத்திருந்தார். ஆனால் வருணரின் புகழும் செல்வமும் மங்கத் துவங்கியது, அதற்கு காரணம் மது மற்றும் மாது மீதான மோகம். செல்வந்தராகிய பல வருணர்கள், புகழ் பெற்ற ரிஷிகளின் அறியாத தந்தையாக இருந்தனர் (உ.ம். சப்த ரிஷிகள்). வருணன் குடியிருப்புக்கருகில் உள்ள ஆற்றங்கரைக்கு குளிக்கச் செல்லும் அழகிய பெண்களுகு பாதுகாப்பற்ற சூழல் நிலவியது. உ.ம் மமதா..அவள் கணவன் உதத்யா. அவரும் நாரத முனியும் பல அச்சுறுத்தல்களை கொடுத்தே அவளை மீட்க முடிந்தது. (இப்படி போய்க்கொண்டே இருக்கிறது)..

குபேரன் இலங்கையில் வருணனாக செயல் பட்டவன். அவன் கடன் கொடுப்பவன்.

வானரா (வான நரா) என்பது ஒரு பழங்குடி இனம், ராமனும் ஒரு பழங்குடியினத் தலைவன். குபேரன் வானரப் படையை பராமரிக்கும் பொருட்டு ராமனுக்கு கடன் வழங்கியவன். (இலங்கையைச் சுற்றி இருந்தவர்கள்).

ஆரிய-மங்கோலிய கலப்புக் குடி – ராக்‌ஷசர்

அனுமனின் தாய் அஞ்ஜனை கேசரியின் மனைவியாய் இருந்தாலும், இந்திரனின் (அவன் ஒரு இனத் தலைவன், சற்று பெரிய அரசாங்கம் கொண்டவன்) அரசவையில் நடனப் பெண். இந்திரனின் தம்பி (தம்பி உறவு) மாருத் அவள் மீது மயக்கங்கொண்டு 30 நாட்கள் திருட்டுத்தனமாக அவளுடன் உறவு வைத்துக்கொள்கிறான் (விரதம் என்ற பெயரில்). ஆரியக் கலப்பு குறித்து வான நர படைகள் பெருமிதம் கொள்கின்றன. உண்மையில் அனுமன் கைசரியாக (அஞ்சனையின் கணவர் கேசரி அவருக்குப் பிறந்திருந்தால் அனுமன் கைசரி என்று பெயர் பெற்றிருப்பார்.) இருந்திருக்க வேண்டும், மாருத்திற்கு பிறந்ததால் மாருதி.

நாரத முனி – உண்மையை மட்டுமே பேசுபவர், அவர் அன்றைய செய்தித்தாள்களுக்குச் சமம். மலை, காடு இவைகளைக் கடந்து வீணையை மீட்டிக்கொண்டு பாட்டுப் பாடிக்கொண்டு திரிபவர். மக்களுக்கு பயனுள்ள செய்திகளை ஊர் ஊராக கொண்டு செல்வார், எவருக்கும் பயப்படாதவர். நல்ல இசை ஞானி. வால்மீகி, வயாசர், சுக மஹா முனிகளின் குரு இவர்.

இப்படி 146 பேர்கள் பற்றிய தகவல்கள் அவ்வகராதியில் இடம் பெறுகிறது.

அசுரர் பற்றிய குறிப்புகள் உலகாயதம் புத்தகத்திலிருந்து:

அசிரியாவிலிருந்து குடி பெயர்ந்தவர்கள் அசுரர்கள், ஆரியர்களுக்கு முன்னரே இந்தியாவில் குடியேரியவர்கள். சிந்து சமவெளி நாகரீகத்தை உருவாக்கியவர்கள் அசிரியர்களே. சதபத பிராமணத்தின் படி, மகதம் அல்லது தென் பீஹாரில் அசுரர்களது குடியிருப்பு இருந்ததைக் குறிப்பிடுகிறது. அசுரர் எனும் சொல் ஒரு உயர்ந்த நாகரீகத்திலிருந்து கடன் பெறப்பட்டது.

அசுர மதம் சொல் பழங்கால இந்தோ-ஈரானிய சமூகத்தின் நாகரீகப் பிரிவினர். அசுரர் என்பது அசிரியாவிலிருந்த ஒரு துணைக்கடவுளின் பெயர். அசிரியர்களுடன் இந்தோ ஈரானியர்கள் உறவு கொண்டு எழுந்த வம்சாவழிப் பெயர்.

“மூர்க்கத்தனமான காட்டுமிராண்டி மக்களான ஆரியர்கள் இந்தியாவில் படையெடுத்தபோது பதிலுக்கு அவர்களைத் தாக்கியவர்களை அசுரர்கள் என்று அழைத்தனர். ஆரியர்கள் விரட்டியடித்து அவர்களை அழித்தனர். சோட்டாநாக்புரி பகுதியில் வசிக்கும் அசுரர்கள் ஆரியர்களை எதிர்த்த அசுரர்களின் வழித்தோன்றல்கள். தானா அல்லது மிர்சாப்பூர் மாவட்டத்தில் இப்பொழுதும் காணப்படும் நீர்நிலைகளில் அணை கட்டியவர்கள் இவ்வசுரர்களின் வழித்தோன்றல்களா என்பது வெளிப்படையானதொரு கேள்வி. இருப்பினும் இத்தகைய அனுமானங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதில்லை”.

அசுரர்கள், தைத்தியர்கள், தானவர்கள், நாகர்கள் ஆகியவை வெவ்வேறு கலாச்சார மட்டத்திலிருந்த மக்களைக் குறிக்கும் சொற்களாகும். இவர்கள் அநாகரீகமான ஆதிவாசிகள், அரைகுறை நாகரீக இனங்கள் ஆவர். இவர்கள் ஆரிய கலாச்சாரம் பரவுவதைத் தடுத்தனர். புராணக் குறிப்புகளில் இவர்களை ஆரம்பத்தில் மனிதர்களாக்க் குறிப்பிட்டனர். பின்னர் எதிரிகள் என்கின்றனர். பின்னர் பூதாகரமான உருவங்களோடும் பூதங்களோடும் இணைக்கப்பட்டிருக்கின்றனர்.

பெரும்பாலான அசுரர்கள்தான் சிந்து சமவெளி நாகரீகத்தை உருவாக்கியவர்கள். (பல்வேறு சூத்திரங்கள், வேத நூல்கள், பிராமணங்கள், உபநிடதங்கள், அவற்றை ஆராய்ந்த மாமேதைகளான தாஸ்குப்தா, பானர்ஜி, சாஸ்திரி, பி.கே.கோஷ் இன்னும் பிற மேலைநாட்டு ஆய்வுகளைத் தொகுத்தே சட்டோபாத்தியா இம்முடிவுகளை வெளியிடுகிறார்).

அமராவதி நதிக்கரையில் ஒரு பழங்கால நகரத்தை அகழ்வாளர்கள் தோண்டி வெளிக்கொண்டு வந்துள்ளனர். ரிக்வேத ஆதாரப்படி, இதனை அசுரர்களின் நகரம் என்றும் நாம் கருதலாம். இது ஹரப்பா என்று நமக்குத் தெரியும்.

ரிக்வேதத்தில் அசுரக்னா என்ற சொல்லும், வரசிகா என்ற சொல்லும் உள்ளது. இந்திரன் வரசிகாவையும் அவன் குலத்தையும் முற்றிலுமாக அழித்தான். அசுரக்னா என்ற பாத்திரத்தில் இருந்து இதைச் செய்தான். வரசிகா என்பது ஒரு அசுரனுடையப் பெயர் (சாயனார் கூறுகிறார்). அவர்களது நகரம் ஹரியுபியாகும், அதாவது சிந்து வெளியின் ஹரப்பா...பல்வேறு நூல்களின் ஆய்விலிருந்து சிந்து வெளியின் நாகரீகத்தை தோற்றுவித்தவர்கள் அசிரியாவிலிருந்து என்று பானர்ஜியும் சாஸ்த்ரியும் கருதினர். இக்கருத்தை சமகால அகழ்வாராய்ச்சி உறுதிப்படுத்த வேண்டியுள்ளது என்று சட்டோபாத்தியா குறிப்பிடுகிறார்.

வருணாசரமத்தைத் தோற்றுவித்து இன்று பல்வேறு பிரிவினைகளுக்கும், கலாச்சார, சாதிய பூசல்களுக்கும் ஆரிய-பார்ப்பனியர் புனைந்த கதைகளே காரணம். இந்திரன் போன்ற அரசனைப் போற்றி, யாசகம் பெற பாடிய துதிப்பாடல்களை வேதங்கள் என்று செருகல் செய்து அக்கால பழங்குடியினரை அசுரர்களாக்கி, ஆரிய இனப்பெருக்கத்திற்காக கூட்டுக்கலவிகளை யாகங்களின் முன் நிகழ்த்தி அவ்வாறு பிறக்கும் குழந்தைகளை தேவக்குமாரர்களாக்கி எதிர்ப்புகளை சமாளிக்க முடியாதபோது மற்றவர்களின் வழிபாட்டு நம்பிக்கைகளை உள்வாங்கி அவற்றையும் சாஸ்திரங்களாக்கி, அரசர்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு பக்தி இலக்கியங்கள் தோற்றுவித்து மக்களை பல்லாயிரம் ஆண்டுகளாக அடிமைகளாக்கி வைத்து வருகின்றது பார்ப்பனியம். அதுவே பெண் அடிமைத்தனத்திற்கு பெரிதும் (ஏன் முழுதும்) வித்திட்டது.

காரல் மார்க்ஸ் மூலதனத்தை எல்லாக் கேடுகளுக்கும் மூலமாய் கூறுகிறார். பிந்தையக் காலங்களில் பொருளாதாரத்தின் பங்கு பெரிதும் இருக்கிறது என்பது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருந்தாலும். இந்தியாவைப் பொருத்த வரை, ஆதி காலத்தில் பணம், பொருள், அதிகாரம் எல்லாவற்றிகும் பேராசைப் பட்டு மக்களை மூடர்களாக்கி, கடவுளின் பெயரால் அச்சுறுத்தி, வருணாசிரமத்தை தோற்றுவித்து சர்வ நாசம் செய்தவர்கள் பார்ப்பனர்களே. ஆங்கிலேய படையெடுப்பின் போது கூட அவர்களுடன் கூட்டு வைத்துக்கொண்டது அவர்களே. அவர்கள் தோற்றுவித்த வரலாறும், கதைகளுமே பள்ளிகளில் பாடமாக கற்றுத்தரப்படுகிறது. மறைக்கப்பட்ட வரலாறானது எதிர்புக் கொள்கைக் கொண்டவர்கள் தேடிப்போய் படிப்பதால் மட்டுமே கிட்டுகிறது.

குறிப்புகள்:

இந்திய வரலாற்றில் பகவத் கீதை – பிரேம்நாத் பஸாஸ். விடியல் பதிப்பகம்.

மனு தர்ம சாஸ்திரம்- மொழிபெயர்ப்பு திரிலோக சீதாராம். அலைகள் வெளியீடு

கொங்கனி அகராதி- பண்டிட் பி.பி.ஜனார்தன்.

உலகாயதம் – தேவி பிரசாத் சட்டோபாத்யாயா.

Monday, September 20, 2010

பெண் பால்..


ஆண் பிள்ளை - ஆண் குழந்தை, கெட்டிக்காரன், தலைவன், மனிதன், ஆண்பிள்ளை சிங்கம், வீரன்

பெண் பிள்ளை - சிறுமி, பெண், மணவாட்டி

ஆண் - ஆண்பாற்பொது, ஆண்மகன், தலைமை

பெண் - கற்றாழை, ஸ்த்ரி, மனைவி, விலங்கின் பெண் பொது.

அகராதியில் பெண்போகம் என்று ஒரு சொல் இருக்கிறது, ஆண் போகம் என்று காணமுடியவில்லை.....

ஆண் என்றால் ஆண்பாற்பொதுவாம்...பெண் என்றால் விலங்கின் பெண் பொதுவாம்....

மனு ஸ்மிருதி, பெண்ணை சூத்திரனுக்கு இணையானவள் என்கிறது..அவளுக்கு நரகமே கிட்டுமாம்...சொர்கம் வேண்டுமெனில் அவள் கடும் தவங்கள் புரிந்து, பத்தினியாய் செயல்பட்டு...ஆணைத் தொழுது, ஆண் கடவுள்களை திருப்தி செய்து அடுத்த பிறவியில் ஆணாய் பிறந்தால் சொர்கத்திற்கு வாய்ப்பிருக்கிறதாம்...

(சூத்திரன் என்ற சொல்லை / பிறப்பை நான் இழிவாக கருதவில்லை. அப்பகுப்புகளை / சொல்லை பெரியார் ஐய்யா வழியிலேயே நின்று நானும் எதிர்கிறேன். )

பெண் விடுதலைக்கு குரல் கொடுத்த நம் பாரதியார் கூட காணி நிலம் வேண்டும் என்ற பாடலில் பாட்டுக் கலந்திடவே அங்கேயொரு பத்தினிப் பெண்வேணும்” என்றல்லவா கேட்கிறார்?

பத்தினி என்பதற்கு மனைவி / இல்லாள் என்றொரு பொருள் இருப்பதாகவும், அவர் அப்பொருளில் கூறுவதாக வியாக்யானம் செய்யலாம்.....ஆனால் அவர் ஏன் பத்தினிப் பெண் என்று குறிப்பிடுகிறார். அவர் பார்வையில் பத்தினிப் பெண் என்பவள் யார்?

அதே அகராதியில்...பத்தினி என்றால் கற்புடையவள் என்றும் பொருள் கூறப்பட்டிருக்கிறது.......

(*நா. கதிர்வேற் பிள்ளையின் தமிழ் மொழி அகராதி)


Wednesday, September 15, 2010

இம்மனித காலத்தை பசி வெறியுடன் விழுங்குவேன்...நான் மாகாளி.


எனக்கு
கருணை முகமில்லை.
எனது நடனம் கொடூரம்
அந்நடனத்தால் உலகங்கள் அழியும்.
நட்சத்திரங்கள் வெளியில் எறியப்படும்
பூமி பிளந்து சுழலும்.

என்
இடை நெளிவுகள்
ஜலப் பிரளயத்திற்கு அழைப்பு விடுக்கிறது
என்
பாதயிழைகளோ
ஆண்களின் அரசாங்கத்தை சாய்க்கும்
என்
கைகளின் கடைசி சைகை
ஒரு பரம்பரையின்
சிசுக்களைனைத்தையும்
மரித்தே பிறக்கச் செய்யும்.

கபால மாலையணிந்த
என் கணவனின் உடல் மேல் களிநடனம் புரிவேன்.
அடங்கா வெறியுடன் கொலை புரிவேன்,

என் செந்நாக்கு
அரக்கர்களின் உதிரத்தை உருஞ்சும்.
இவ்வுலகத்தின் காலத்தை தளர்த்த
ஆவேச வெறியுடன் அழித்தலை
நான் புரிவேன்
ஆம்
என் கண்களை உற்று நோக்குங்கள்
காண்பீர்கள்
கடந்த காலம்
எதிர்காலம்
மற்றும்
பொருளற்ற சூனியத்தையும்.

நானே
கருமை
ஈரப்பதம் நிறந்த சுடுகாட்டின் கருமை,
மின்னல் தாக்கியதொரு
கருகிய மரத்தின் கருமை,
நுழையமுடியாத குகையில்
பிறக்கும் கண்களற்ற ஜீவராசிகளுக்கொத்த கருமை,
நொருங்கும் பெருங்கடலின் கருமை,
இந்நிலாவும்
நட்சத்திரங்களும் ஜனிப்பதற்கு
முன்னே இருந்த அவ்வானின் கருமை
முதலும்
கடைசியுமான
கருமை


நீங்கள் முழுமையானவர்களென்றால்
ஆத்மார்த்தமான
காதலன் காதலி போல்
உங்களுக்குள்
என்னை வரவேற்பீர்களாக

கொலைக்கள வாசத்தை
மல்லிகையின் நறுமணமாக சுவாசிக்கவேண்டும்
சாம்பல் நிறைந்த
கபாலங்களை
ரோஜா நிரவிய படுக்கையென துயில வேண்டும்
நகைக்கும் மண்டையோடுக்களைக் கண்டு
கருணையுடன் புன்னகைக்க வேண்டும்

ஏனென்றால்
வாழ்வைவிட மரணம் புனிதமானது
தொடங்குவதெல்லாம்
முடிந்தே தீரும்.





தாலியா (thalia) என்ற வெளிநாட்டு பெண் உலகில் உள்ள பெண் தெய்வங்கள் பற்றி எழுதியிருக்கிறார். தாய் வழிச்சமூகத்தின் வேராகவும், மூலக்கடவுளாகவும் காளி இருந்தாள் எனக் குறிப்பிடுகிறார். காளி பற்றின இக்கவியை அவர் எங்கிருந்து எடுத்தார் எனத் தெரியவில்லை.

ஆணாதிக்கமானது பெண்களிடத்தில் மட்டுமல்லாது பெண்கடவுளர்கள் மீதும் ஏற்றி வைத்திருக்கும் கருணை பாசம், தாய்மை, கனிவு என அனைத்திற்கும் மாகாளி சங்கு ஊதுவது போல் இக்கவிதை அமைந்துள்ளது.

மொழிபெயர்த்திருக்கிறேன்.


Monday, September 13, 2010

ஒளவை.


நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே – (187)

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று கூறப்பட்ட உரைக்கு மாற்றுக்கருத்தாக தமிழண்ணல் எழுதி சாகித்ய அகாதெமி பதிப்பான ஒளவையார் நூலிலிருந்து.

நாடோ, காடோ, பள்ளமோ, மேடோ எதுவானாலும் அவற்றால் எல்லாம் நிலம் நல்லது, கெட்டது ஆவதில்லை. எங்கு ஆடவர்கள் நல்லவர்களாக உள்ளனரோ, அங்கு நிலனே நீயும் நல்லை! வாழிய!

இயற்கையால் நன்மைதான் விளையும். பெண்களாலும் உலகிற்கு நன்மையே உளதாகும். தம்மையும் கெடுத்துக்கொண்டு, பிறரையும் கெடுப்பவர்கள் ஆடவர்களே. அதனால் ஆடவர் நல்லவராய் இருந்தால் உலகம் நல்லதாக இருக்கும், அவர்கள் கெட்டவர்களானால் உலகமும் கெட்டழியும் !

இதற்கு ’மக்கள்’ எனப் பொதுவாகப் பொருள் கொண்டு, எங்கே மக்கள் நல்லவரோ அங்கே உலகமும் நல்லதாக இருக்கும் என பொருள் கொள்ளலாம். ஆயினும், பாடலில் ஆளும் உரிமையைக் கையில் எடுத்துக்கொண்டு வலிமையால் ஆட்டிப்படைக்கும் ஆடவரையே, அவர் நயமாக இடித்துப் பேசுகிறார்.

ஆடவர் என்பதற்கு வல்லமையுடையோர்- வெற்றியை ஆளும் திறனுடையோர்- என்று கொண்டால், காரணப்பெயராய் இரு சாராரிலும் தலைமை தாங்குவோரைக் குறிக்க வாய்ப்புள்ளது. ஒரு நாடு சிறந்த நாடென பெயர் பெறுவதற்கு, மக்களுக்கு வழிக்காட்டவல்ல காரணம் எனக் கருதலாம். எங்கனமாயினும் உலகளாவிய கருத்தரங்கொன்று வைத்துப் பலர் கூடி விவாதிப்பதற்குரிய ’செய்தியை’ ஒளவையார் நான்கே அடிகளில் கூறிச்சென்றுள்ளார்.