Monday, September 20, 2010

பெண் பால்..


ஆண் பிள்ளை - ஆண் குழந்தை, கெட்டிக்காரன், தலைவன், மனிதன், ஆண்பிள்ளை சிங்கம், வீரன்

பெண் பிள்ளை - சிறுமி, பெண், மணவாட்டி

ஆண் - ஆண்பாற்பொது, ஆண்மகன், தலைமை

பெண் - கற்றாழை, ஸ்த்ரி, மனைவி, விலங்கின் பெண் பொது.

அகராதியில் பெண்போகம் என்று ஒரு சொல் இருக்கிறது, ஆண் போகம் என்று காணமுடியவில்லை.....

ஆண் என்றால் ஆண்பாற்பொதுவாம்...பெண் என்றால் விலங்கின் பெண் பொதுவாம்....

மனு ஸ்மிருதி, பெண்ணை சூத்திரனுக்கு இணையானவள் என்கிறது..அவளுக்கு நரகமே கிட்டுமாம்...சொர்கம் வேண்டுமெனில் அவள் கடும் தவங்கள் புரிந்து, பத்தினியாய் செயல்பட்டு...ஆணைத் தொழுது, ஆண் கடவுள்களை திருப்தி செய்து அடுத்த பிறவியில் ஆணாய் பிறந்தால் சொர்கத்திற்கு வாய்ப்பிருக்கிறதாம்...

(சூத்திரன் என்ற சொல்லை / பிறப்பை நான் இழிவாக கருதவில்லை. அப்பகுப்புகளை / சொல்லை பெரியார் ஐய்யா வழியிலேயே நின்று நானும் எதிர்கிறேன். )

பெண் விடுதலைக்கு குரல் கொடுத்த நம் பாரதியார் கூட காணி நிலம் வேண்டும் என்ற பாடலில் பாட்டுக் கலந்திடவே அங்கேயொரு பத்தினிப் பெண்வேணும்” என்றல்லவா கேட்கிறார்?

பத்தினி என்பதற்கு மனைவி / இல்லாள் என்றொரு பொருள் இருப்பதாகவும், அவர் அப்பொருளில் கூறுவதாக வியாக்யானம் செய்யலாம்.....ஆனால் அவர் ஏன் பத்தினிப் பெண் என்று குறிப்பிடுகிறார். அவர் பார்வையில் பத்தினிப் பெண் என்பவள் யார்?

அதே அகராதியில்...பத்தினி என்றால் கற்புடையவள் என்றும் பொருள் கூறப்பட்டிருக்கிறது.......

(*நா. கதிர்வேற் பிள்ளையின் தமிழ் மொழி அகராதி)


Wednesday, September 15, 2010

இம்மனித காலத்தை பசி வெறியுடன் விழுங்குவேன்...நான் மாகாளி.


எனக்கு
கருணை முகமில்லை.
எனது நடனம் கொடூரம்
அந்நடனத்தால் உலகங்கள் அழியும்.
நட்சத்திரங்கள் வெளியில் எறியப்படும்
பூமி பிளந்து சுழலும்.

என்
இடை நெளிவுகள்
ஜலப் பிரளயத்திற்கு அழைப்பு விடுக்கிறது
என்
பாதயிழைகளோ
ஆண்களின் அரசாங்கத்தை சாய்க்கும்
என்
கைகளின் கடைசி சைகை
ஒரு பரம்பரையின்
சிசுக்களைனைத்தையும்
மரித்தே பிறக்கச் செய்யும்.

கபால மாலையணிந்த
என் கணவனின் உடல் மேல் களிநடனம் புரிவேன்.
அடங்கா வெறியுடன் கொலை புரிவேன்,

என் செந்நாக்கு
அரக்கர்களின் உதிரத்தை உருஞ்சும்.
இவ்வுலகத்தின் காலத்தை தளர்த்த
ஆவேச வெறியுடன் அழித்தலை
நான் புரிவேன்
ஆம்
என் கண்களை உற்று நோக்குங்கள்
காண்பீர்கள்
கடந்த காலம்
எதிர்காலம்
மற்றும்
பொருளற்ற சூனியத்தையும்.

நானே
கருமை
ஈரப்பதம் நிறந்த சுடுகாட்டின் கருமை,
மின்னல் தாக்கியதொரு
கருகிய மரத்தின் கருமை,
நுழையமுடியாத குகையில்
பிறக்கும் கண்களற்ற ஜீவராசிகளுக்கொத்த கருமை,
நொருங்கும் பெருங்கடலின் கருமை,
இந்நிலாவும்
நட்சத்திரங்களும் ஜனிப்பதற்கு
முன்னே இருந்த அவ்வானின் கருமை
முதலும்
கடைசியுமான
கருமை


நீங்கள் முழுமையானவர்களென்றால்
ஆத்மார்த்தமான
காதலன் காதலி போல்
உங்களுக்குள்
என்னை வரவேற்பீர்களாக

கொலைக்கள வாசத்தை
மல்லிகையின் நறுமணமாக சுவாசிக்கவேண்டும்
சாம்பல் நிறைந்த
கபாலங்களை
ரோஜா நிரவிய படுக்கையென துயில வேண்டும்
நகைக்கும் மண்டையோடுக்களைக் கண்டு
கருணையுடன் புன்னகைக்க வேண்டும்

ஏனென்றால்
வாழ்வைவிட மரணம் புனிதமானது
தொடங்குவதெல்லாம்
முடிந்தே தீரும்.

தாலியா (thalia) என்ற வெளிநாட்டு பெண் உலகில் உள்ள பெண் தெய்வங்கள் பற்றி எழுதியிருக்கிறார். தாய் வழிச்சமூகத்தின் வேராகவும், மூலக்கடவுளாகவும் காளி இருந்தாள் எனக் குறிப்பிடுகிறார். காளி பற்றின இக்கவியை அவர் எங்கிருந்து எடுத்தார் எனத் தெரியவில்லை.

ஆணாதிக்கமானது பெண்களிடத்தில் மட்டுமல்லாது பெண்கடவுளர்கள் மீதும் ஏற்றி வைத்திருக்கும் கருணை பாசம், தாய்மை, கனிவு என அனைத்திற்கும் மாகாளி சங்கு ஊதுவது போல் இக்கவிதை அமைந்துள்ளது.

மொழிபெயர்த்திருக்கிறேன்.


Monday, September 13, 2010

ஒளவை.


நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே – (187)

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று கூறப்பட்ட உரைக்கு மாற்றுக்கருத்தாக தமிழண்ணல் எழுதி சாகித்ய அகாதெமி பதிப்பான ஒளவையார் நூலிலிருந்து.

நாடோ, காடோ, பள்ளமோ, மேடோ எதுவானாலும் அவற்றால் எல்லாம் நிலம் நல்லது, கெட்டது ஆவதில்லை. எங்கு ஆடவர்கள் நல்லவர்களாக உள்ளனரோ, அங்கு நிலனே நீயும் நல்லை! வாழிய!

இயற்கையால் நன்மைதான் விளையும். பெண்களாலும் உலகிற்கு நன்மையே உளதாகும். தம்மையும் கெடுத்துக்கொண்டு, பிறரையும் கெடுப்பவர்கள் ஆடவர்களே. அதனால் ஆடவர் நல்லவராய் இருந்தால் உலகம் நல்லதாக இருக்கும், அவர்கள் கெட்டவர்களானால் உலகமும் கெட்டழியும் !

இதற்கு ’மக்கள்’ எனப் பொதுவாகப் பொருள் கொண்டு, எங்கே மக்கள் நல்லவரோ அங்கே உலகமும் நல்லதாக இருக்கும் என பொருள் கொள்ளலாம். ஆயினும், பாடலில் ஆளும் உரிமையைக் கையில் எடுத்துக்கொண்டு வலிமையால் ஆட்டிப்படைக்கும் ஆடவரையே, அவர் நயமாக இடித்துப் பேசுகிறார்.

ஆடவர் என்பதற்கு வல்லமையுடையோர்- வெற்றியை ஆளும் திறனுடையோர்- என்று கொண்டால், காரணப்பெயராய் இரு சாராரிலும் தலைமை தாங்குவோரைக் குறிக்க வாய்ப்புள்ளது. ஒரு நாடு சிறந்த நாடென பெயர் பெறுவதற்கு, மக்களுக்கு வழிக்காட்டவல்ல காரணம் எனக் கருதலாம். எங்கனமாயினும் உலகளாவிய கருத்தரங்கொன்று வைத்துப் பலர் கூடி விவாதிப்பதற்குரிய ’செய்தியை’ ஒளவையார் நான்கே அடிகளில் கூறிச்சென்றுள்ளார்.