Showing posts with label kotravai. Show all posts
Showing posts with label kotravai. Show all posts

Sunday, December 2, 2018

"உழைக்கும் மகளிர்” - நூல் வெளீடு


வணக்கம் தோழர்களே,

எவ்வளவு வன்மத்தை இந்த சமூக ஊடகம் (சமூகமும்) அள்ளித் தெளித்தாலும், அதன் நேர் எதிர் திசையில் உலகெங்கிலும் இருந்து முகமறியா நபர்கள் மற்றும் நண்பர்கள், தோழர்களிடமிருந்து கிடைக்கும் அன்பும் எல்லாவற்றுக்கும் மேலாக பாட்டாளி வர்க்கப் புரட்சியின் மீதான அலாதியான நம்பிக்கையும் காதலும் என்னை தொடர்ந்து எழுத்தின் வாயிலாக இயங்கச் செய்துகொண்டே இருக்கிறது J

மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் இப்படித்தான் நிகழ்ந்தது. இப்போது நான்காவதாக ஒரு சிறு நூல் ஒன்றை மொழிபெயர்த்துள்ளேன்.  சிந்தன் பதிப்பக வெளியீடாக இந்நூல் வெளிவர இருக்கிறது. 

உழைக்கும் மகளிர்” – தோழர் ந.கா. க்ரூப்ஸ்கயா எழுதி, தோழர் மிக் கொஸ்த்தெலொ அவர்களின் மொழிபெயர்ப்பில் மேனிஃபெஸ்டோ ப்ரெஸ் (இங்கிலாந்து) வெளீடாக வந்த இந்நூல் உரிமம் பெற்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

வரும் 9ஆம் தேதி மாலை நான்கு மணிக்கு #கூகை நூலகத்தில் வெளீட்டு நிகழ்வை திட்டமிட்டிருக்கிறோம். அதுகுறித்தான விவரங்கள் விரைவில் பகிர்கிறேன். கால அவகாசம் குறைவாக உள்ளதால் உங்கள் அனைவரின் நாட்காட்டியில் இந்த நாளையும் நேரத்தையும் குறித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இதை எனது நேரடியான அழைப்பாக்க் கருதி நிகழ்வுக்கு வந்து சிறப்பிக்குமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

பாட்டாளி வர்க்கப் புரட்சி ஓங்குக! மார்க்சியமே சமூக விடுதலையின் ஒளிவிளக்கு. 

க்ருப்ஸ்கயாவும் உழைக்கும் மகளிர்நூலும்

நதேழ்தா கான்ஸ்டாண்டினோவா க்ரூப்ஸ்கயா (1869 – 1939), லெனின் என்னும் ஆளுமை மீதான பரவலான ஈர்ப்பால் மற்றுமொரு ஒரு புரட்சியாளர், கட்டுரையாளர் என்று குறைத்து மதிப்பிடப்பட்டதோடு துரதிர்ஷ்டவசமாக பலராலும்லெனினின் மனைவிஎன்று மட்டுமே அறியப்பட்டவர்.

கல்வியாளராக அவர் ஒரு தனித்துவமான ஆளுமை என்றபோதும் க்ரூப்ஸ்கயாவின் எழுத்துகள் இதுவரை ஆங்கிலத்தில் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளன. புரட்சியின் முதல் நாளிலிருந்தே அவர் தன்னை புரட்சிகர பணிகளில் இணைத்துக்கொண்டார்….

…. 1896இல் லெனினோடு கைது செய்யப்பட்டு சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டு பின்னர் ஷூசென்ஸ்கொயேவில் மூன்றாண்டுகள் உள்நாட்டு சிறைத் தண்டனையை அனுபவித்த போது க்ரூப்ஸ்கயா முதல் முதலாக எழுதியதேஉழைக்கும் மகளிர்என்னும் சிறு பிரசுரம்.
…. ருஷியப் பெண்களின் நிலை குறித்து வெளியான முதல் மார்க்சியப் படைப்பு என்னும் முக்கியத்துவம் வாய்ந்தது இச்சிறு பிரசுரம். ஜாரிசத்தின் கீழ் பெண்களின் உரிமையற்ற நிலையை ஆசிரியர் மிகவும் ஆழமாக ஆய்வு செய்கிறார். ஆண் உழைப்பாளர்களுக்கு நிகராக, சமமாகவும், மேலான வாழக்கைக்காகவும் போராடுபவர்களின் அணியில் சேரும்படி அவர் பெண்களுக்கு அழைப்பு விடுக்கிறார். “உழைக்கும் மகளிரும் உழைக்கும் வர்க்கத்தின் உறுப்பினர்களே. அவர்களது நலன்களும் அவ்வர்க்கத்தின் நலன்களோடு நெருக்கமாகப் பிணைந்துள்ளன.”

இந்தச் சிற்றேடு க்ரூப்ஸ்கயா விளக்கும் விடுதலைக்கான பாதையை விரிவாக ஆய்வு செய்ய முற்படுகிறது. அவர் காலத்தில் வாழ்ந்த பெண் உழைப்பாளர்களின் நிலைமைகளை விளக்கி வந்த இந்நூல் க்ரூப்ஸ்கயாவின் மார்க்சியக் கண்ணோட்டத்தைச் சிறப்பாக வெளிக்காட்டுகிறது. இதில் அவர் குறிப்பிடும் நிலைமைகள் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிக்கால ரஷ்யாவைப் பற்றிய வரலாற்றாசிரியர்களுக்கான ஆய்வுகளுக்காக மட்டுமின்றி இன்றைய உலகின் நிலைமைகளுக்கும் பெருமளவில் பொருந்திப் போகிறது. எவ்வித மாற்றங்களுமின்றி 26 வருடங்கள் கழித்து அப்படியே இந்நுல் வெளியாகிறது என்பதே அதன் பொருத்தப்பாட்டிற்கான சான்றாகும்.

தொழிலாளர்களின் நலனுக்காக பெண்கள் தோளோடு தோள் நின்று போராடினால் மட்டுமேசுதந்திரமான இன்பகரமான வாழ்க்கைக்கான சாவியைபெண்கள் கண்டுபிடிக்க முடியும்.

ஓவியம்: மணிவண்ணன்

நான் நன்றி சொல்ல வேண்டிய தோழர்களின் பட்டியல் நீண்டது. நிகழ்வில் சந்திப்போம் J


Friday, December 23, 2016

சாதியப் பிரச்சினையும், மார்க்சியமும் – தொடரும் விவாதம்

“பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலைநிறுத்தப்பட்டு வருகிறது.  சீர்திருத்தங்கள், மேம்பாடுகள் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இதை உணராத வரையில் பழைய அமைப்பு முறையின் பாதுகாவலர்கள் அவர்களை என்றென்றும் முட்டாள்களாக்கிக் கொண்டேயிருப்பார்கள். இந்த வர்க்கங்களின் எதிர்ப்பைத் தகர்த்து ஒழிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு.  அது என்ன? பழைமையைத் துடைத்தெறியவும் புதுமையைப் படைக்கவும் திறன் பெற்றவையும் சமுதாயத்தில் தங்களுக்குள்ள நிலையின் காரணமாக அப்படிப் படைத்துத் தீரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறவையுமான சக்திகளை நம்மைச் சூழ்ந்துள்ள இதே சமுதயாத்திற்குள்ளேயே நாம் கண்டுபிடித்து, அந்தச் சக்திகளுக்கு அறிவொளியூட்டிப் போராட்டத்திற்கு ஒழுங்கமைத்துத் திரட்ட வேண்டும். இது ஒன்றே தான் வழி.

மார்க்ஸின் தத்துவஞானப் பொருள்முதல்வாதம் ஒன்றுதான் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களெல்லாம் அதுவரை உழன்று கொண்டிருந்த ஆன்மீக அடிமைத்தனத்திலிருந்து வெளியேறும் வழியைப் பாட்டாளி வர்க்கத்திற்குக் காட்டியிருக்கிறது.  மர்க்ஸின் பெருளாதாரத் தத்துவம் ஒன்றுதான் பொதுவான முதலாளித்துவ அமைப்பு முறையில் பாட்டாளி வர்க்கத்தின் உண்மை நிலையை விளக்கியுள்ளது.” - வி.இ. லெனின், 1913.

கம்யூனிஸ்டுகள் சாதியமைப்பின் கட்டமைப்பை அடிக்கட்டுமானம் மேற்கட்டுமானம் என்னும் மார்க்சிய உருவகத்தைச் சொல்லி விளக்கினால் ஏற்றுக்கொள்ளாமல், மார்க்சியத்தை எதிர்மறையாகச் சித்தரிப்பதும் அல்லது மார்க்சியத்தில் சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு இல்லை (இன்ன பிற அடையாளம் சார்ந்த பிரச்சினைகளுக்கும்) என்று சொல்லி அடையாள அரசியலை முன்னெடுப்பதென்பதும் உழைக்கும் வர்க்க ஒற்றுமைக்கு எதிரானப் போக்காகும்.
கடந்த தசாப்தங்களில் சாதியப் பிரச்சினை குறித்து மார்க்சியக் கண்ணோட்டத்தில் பல்வேறு ஆய்வுகள் நடந்துள்ளன. மானுட விடுதலையில் ஆர்வம் உள்ளவர்கள் அவற்றை கற்றறிய வேண்டும். அந்த வரிசையில், நம் சமகாலத்தில், அதாவது 2014இல் நடந்த ஒரு முக்கியமான கருத்தரங்கில் சமர்க்கிப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக அரவிந்த் நினைவு அறக்கட்டளை வெளியிட்டுள்ள சாதியப் பிரச்சினையும், மார்க்சியமும் என்னும் நூலை வாசிக்க நேர்ந்தது. அனைத்து கட்டுரைகளுமே நாம் பதில் தேட நினைக்கும் சாதியப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இருப்பினும், அரவிந்த் மார்க்சியக் கல்வியகம் குழுவாக மேற்கொண்ட ஆய்வுக் கட்டுரையை மட்டும் நான் மொழிபெயர்த்துள்ளேன்.
அரவிந்த் மார்க்சியக் கல்வியக ஆய்வுக் குழுவினர் சாதியமைப்பின் வரலாற்று வளர்ச்சியை மார்க்சியக் கண்ணோட்டத்தில் விளக்கி, சாதி ஒழிப்பு அரசியலில் முக்கிய பங்காற்றிய தலைவர்கள் பற்றிய ஆய்வுகளையும் முன்வைத்து பின்னர் மார்க்சியக் கண்ணோட்டத்தில் சாதியமைப்பு பற்றிய தங்களது பார்வைகளை முன்வைத்திருக்கின்றனர். சாதி ஒழிப்பை உள்ளடக்கிய வர்க்கப் போராட்டத்திற்கான செயல்திட்டம் என்னவாக இருக்கலாம் என்பதையும் பரிந்துரைத்துள்ளனர்.

சாதியப் பிரச்சினையும், மார்க்சியமும் – தொடரும் விவாதம் என்னும் இந்த நூலில் சாதியப் பிரச்சினையும் அதற்கான தீர்மானங்களும்: ஒரு மார்க்சியக் கண்ணோட்டம் என்னும் கட்டுரையும் அதன் தொடர்ச்சியாக சாதிய பிரச்சினைக்கான தீர்வு… நூலைத் தொடர்ந்து வந்த விமர்சனங்களுக்கு ரங்கநாயகம்மா அளித்த பதில்களின் தொகுப்பாக வந்த சாதி மற்றும் வர்க்கம்: மார்க்சியக் கண்ணோட்டம், விவாதக் கட்டுரைகளின் தொகுப்பு என்னும் நூலிலிருந்து சில கட்டுரைகளை, சில பகுதிகளை மொழிபெயர்த்துள்ளேன். மேலும், சாதியமைப்பு பற்றிய மார்க்ஸின் கருத்துரு*: ஒரு புனரமைப்பு என்னும் தலைப்பில் பி.ஆர். பாபுஜி எழுதிய ஆய்வுக் கட்டுரையும் பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

அதனோடு, முகநூல் விவாதங்களுக்கு நான் அளித்த பதில்களைத் தொகுத்தும், விரிவுபடுத்தியும் பின்னிணைப்பாகக் கொடுத்துள்ளேன். இறுதியாக மார்க்சியம் மற்றும் அம்பேத்கர் சிந்தனைகளை ஆய்வு செய்ய விரும்பும் தொடக்கக்கட்ட ஆர்வலர்களுக்காக சில கேள்விகளையும் கொடுத்துள்ளேன். அக்கேள்விகளுக்கு தாமாக ஆய்வு செய்து பதில் தேடி, சீர்தூக்கிப் பார்த்து சாதியப் பிரச்சினைக்கான தீர்வுகளைக் கொண்டிருக்கும் பாதை எதுவென சம்பந்தப்பட்டவர்கள் கண்டறியலாம்.




Monday, November 8, 2010

ஆப்பிள் புகையாவதுபோல்.....


நான் வருந்துவதில்லை நான் அழுவதோ அழைப்பதோ இல்லை
ஆப்பிள் மலர்ந்து புகையாவது போல் எல்லாம் கடந்து செல்லும்
என் ஆத்மா
இலையுதிர்கால தங்கச் சாயலைக் கொண்டிருக்கிறது
மேலும்
என் இளமையை திரும்பப்பெற இயலாது

ஏற்கணவே குளிரால் கலங்கும் என் இதயம்
கிளர்ந்திருக்கிற துடிப்பை வைத்திருக்கப்போவதில்லை
அது
பூச்சைக்காடுகளின் அதிசய உலகம்
என் வெறுமைக் கால்கள் அழுந்தி நடந்திட வசீகரிக்கப்போவதில்லை

அமைதியற்ற என் ஆவி சிறிது, சிறுது எப்போதாவது
கட்டுக்கடங்காத என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த தூண்டியது
கிளர்ச்சி மடிந்துவிட்டது, உணர்ச்சி துடித்துடிப்பு மென்மையாகிவிட்டது
மேலும் பசுமையான உணர்ச்சிகள் நீண்ட காலமாய் செலவாகிறது

வேட்கைகள் இப்போது என்னை சற்று விட்டுவைத்திருக்கிறது
நான் வாழ்க்கையை கணவுக் கண்டேனா அல்லது உண்மையாகவே வாழ்ந்தேனா?
இளவேனிற் பருவத்தின் அதிகாலையில்
மணிச்சத்தம் கூடிய காற்றில் அழகான இளஞ்சிவப்பு குதிரையின் மீதேரி
நான்கு கால் பாய்ச்சலில் கடந்துவிட்டேன் போலும்

இவ்வுலகில் எல்லோரும் மறிக்ககூடியவர்களே
பலம் குன்றிப்போன நம்பிக்கைகளை வளரச்செய்யும் வரம் தர
மேப்பில் மரத்திலிருந்து
இப்போதும் கூட
செம்பு மென்மையாக வழிகிறது

இப்பொழுதும் எப்பொழுதும்
என் விதி
வாழ்த்துக்குரியதாகும்



- கவிதை மூலம் SERGEI YESININ (1895- 1925) russian federation, ரஷ்யனிலிருந்து ஆங்கிலத்திற்கு OLGA SHARTSE தமிழில் கொற்றவை.

நூல் - land of the soviets in verse and prose.

Wednesday, September 15, 2010

இம்மனித காலத்தை பசி வெறியுடன் விழுங்குவேன்...நான் மாகாளி.


எனக்கு
கருணை முகமில்லை.
எனது நடனம் கொடூரம்
அந்நடனத்தால் உலகங்கள் அழியும்.
நட்சத்திரங்கள் வெளியில் எறியப்படும்
பூமி பிளந்து சுழலும்.

என்
இடை நெளிவுகள்
ஜலப் பிரளயத்திற்கு அழைப்பு விடுக்கிறது
என்
பாதயிழைகளோ
ஆண்களின் அரசாங்கத்தை சாய்க்கும்
என்
கைகளின் கடைசி சைகை
ஒரு பரம்பரையின்
சிசுக்களைனைத்தையும்
மரித்தே பிறக்கச் செய்யும்.

கபால மாலையணிந்த
என் கணவனின் உடல் மேல் களிநடனம் புரிவேன்.
அடங்கா வெறியுடன் கொலை புரிவேன்,

என் செந்நாக்கு
அரக்கர்களின் உதிரத்தை உருஞ்சும்.
இவ்வுலகத்தின் காலத்தை தளர்த்த
ஆவேச வெறியுடன் அழித்தலை
நான் புரிவேன்
ஆம்
என் கண்களை உற்று நோக்குங்கள்
காண்பீர்கள்
கடந்த காலம்
எதிர்காலம்
மற்றும்
பொருளற்ற சூனியத்தையும்.

நானே
கருமை
ஈரப்பதம் நிறந்த சுடுகாட்டின் கருமை,
மின்னல் தாக்கியதொரு
கருகிய மரத்தின் கருமை,
நுழையமுடியாத குகையில்
பிறக்கும் கண்களற்ற ஜீவராசிகளுக்கொத்த கருமை,
நொருங்கும் பெருங்கடலின் கருமை,
இந்நிலாவும்
நட்சத்திரங்களும் ஜனிப்பதற்கு
முன்னே இருந்த அவ்வானின் கருமை
முதலும்
கடைசியுமான
கருமை


நீங்கள் முழுமையானவர்களென்றால்
ஆத்மார்த்தமான
காதலன் காதலி போல்
உங்களுக்குள்
என்னை வரவேற்பீர்களாக

கொலைக்கள வாசத்தை
மல்லிகையின் நறுமணமாக சுவாசிக்கவேண்டும்
சாம்பல் நிறைந்த
கபாலங்களை
ரோஜா நிரவிய படுக்கையென துயில வேண்டும்
நகைக்கும் மண்டையோடுக்களைக் கண்டு
கருணையுடன் புன்னகைக்க வேண்டும்

ஏனென்றால்
வாழ்வைவிட மரணம் புனிதமானது
தொடங்குவதெல்லாம்
முடிந்தே தீரும்.





தாலியா (thalia) என்ற வெளிநாட்டு பெண் உலகில் உள்ள பெண் தெய்வங்கள் பற்றி எழுதியிருக்கிறார். தாய் வழிச்சமூகத்தின் வேராகவும், மூலக்கடவுளாகவும் காளி இருந்தாள் எனக் குறிப்பிடுகிறார். காளி பற்றின இக்கவியை அவர் எங்கிருந்து எடுத்தார் எனத் தெரியவில்லை.

ஆணாதிக்கமானது பெண்களிடத்தில் மட்டுமல்லாது பெண்கடவுளர்கள் மீதும் ஏற்றி வைத்திருக்கும் கருணை பாசம், தாய்மை, கனிவு என அனைத்திற்கும் மாகாளி சங்கு ஊதுவது போல் இக்கவிதை அமைந்துள்ளது.

மொழிபெயர்த்திருக்கிறேன்.