Friday, December 23, 2016

சாதியப் பிரச்சினையும், மார்க்சியமும் – தொடரும் விவாதம்

“பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலைநிறுத்தப்பட்டு வருகிறது.  சீர்திருத்தங்கள், மேம்பாடுகள் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இதை உணராத வரையில் பழைய அமைப்பு முறையின் பாதுகாவலர்கள் அவர்களை என்றென்றும் முட்டாள்களாக்கிக் கொண்டேயிருப்பார்கள். இந்த வர்க்கங்களின் எதிர்ப்பைத் தகர்த்து ஒழிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு.  அது என்ன? பழைமையைத் துடைத்தெறியவும் புதுமையைப் படைக்கவும் திறன் பெற்றவையும் சமுதாயத்தில் தங்களுக்குள்ள நிலையின் காரணமாக அப்படிப் படைத்துத் தீரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறவையுமான சக்திகளை நம்மைச் சூழ்ந்துள்ள இதே சமுதயாத்திற்குள்ளேயே நாம் கண்டுபிடித்து, அந்தச் சக்திகளுக்கு அறிவொளியூட்டிப் போராட்டத்திற்கு ஒழுங்கமைத்துத் திரட்ட வேண்டும். இது ஒன்றே தான் வழி.

மார்க்ஸின் தத்துவஞானப் பொருள்முதல்வாதம் ஒன்றுதான் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களெல்லாம் அதுவரை உழன்று கொண்டிருந்த ஆன்மீக அடிமைத்தனத்திலிருந்து வெளியேறும் வழியைப் பாட்டாளி வர்க்கத்திற்குக் காட்டியிருக்கிறது.  மர்க்ஸின் பெருளாதாரத் தத்துவம் ஒன்றுதான் பொதுவான முதலாளித்துவ அமைப்பு முறையில் பாட்டாளி வர்க்கத்தின் உண்மை நிலையை விளக்கியுள்ளது.” - வி.இ. லெனின், 1913.

கம்யூனிஸ்டுகள் சாதியமைப்பின் கட்டமைப்பை அடிக்கட்டுமானம் மேற்கட்டுமானம் என்னும் மார்க்சிய உருவகத்தைச் சொல்லி விளக்கினால் ஏற்றுக்கொள்ளாமல், மார்க்சியத்தை எதிர்மறையாகச் சித்தரிப்பதும் அல்லது மார்க்சியத்தில் சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு இல்லை (இன்ன பிற அடையாளம் சார்ந்த பிரச்சினைகளுக்கும்) என்று சொல்லி அடையாள அரசியலை முன்னெடுப்பதென்பதும் உழைக்கும் வர்க்க ஒற்றுமைக்கு எதிரானப் போக்காகும்.
கடந்த தசாப்தங்களில் சாதியப் பிரச்சினை குறித்து மார்க்சியக் கண்ணோட்டத்தில் பல்வேறு ஆய்வுகள் நடந்துள்ளன. மானுட விடுதலையில் ஆர்வம் உள்ளவர்கள் அவற்றை கற்றறிய வேண்டும். அந்த வரிசையில், நம் சமகாலத்தில், அதாவது 2014இல் நடந்த ஒரு முக்கியமான கருத்தரங்கில் சமர்க்கிப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக அரவிந்த் நினைவு அறக்கட்டளை வெளியிட்டுள்ள சாதியப் பிரச்சினையும், மார்க்சியமும் என்னும் நூலை வாசிக்க நேர்ந்தது. அனைத்து கட்டுரைகளுமே நாம் பதில் தேட நினைக்கும் சாதியப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இருப்பினும், அரவிந்த் மார்க்சியக் கல்வியகம் குழுவாக மேற்கொண்ட ஆய்வுக் கட்டுரையை மட்டும் நான் மொழிபெயர்த்துள்ளேன்.
அரவிந்த் மார்க்சியக் கல்வியக ஆய்வுக் குழுவினர் சாதியமைப்பின் வரலாற்று வளர்ச்சியை மார்க்சியக் கண்ணோட்டத்தில் விளக்கி, சாதி ஒழிப்பு அரசியலில் முக்கிய பங்காற்றிய தலைவர்கள் பற்றிய ஆய்வுகளையும் முன்வைத்து பின்னர் மார்க்சியக் கண்ணோட்டத்தில் சாதியமைப்பு பற்றிய தங்களது பார்வைகளை முன்வைத்திருக்கின்றனர். சாதி ஒழிப்பை உள்ளடக்கிய வர்க்கப் போராட்டத்திற்கான செயல்திட்டம் என்னவாக இருக்கலாம் என்பதையும் பரிந்துரைத்துள்ளனர்.

சாதியப் பிரச்சினையும், மார்க்சியமும் – தொடரும் விவாதம் என்னும் இந்த நூலில் சாதியப் பிரச்சினையும் அதற்கான தீர்மானங்களும்: ஒரு மார்க்சியக் கண்ணோட்டம் என்னும் கட்டுரையும் அதன் தொடர்ச்சியாக சாதிய பிரச்சினைக்கான தீர்வு… நூலைத் தொடர்ந்து வந்த விமர்சனங்களுக்கு ரங்கநாயகம்மா அளித்த பதில்களின் தொகுப்பாக வந்த சாதி மற்றும் வர்க்கம்: மார்க்சியக் கண்ணோட்டம், விவாதக் கட்டுரைகளின் தொகுப்பு என்னும் நூலிலிருந்து சில கட்டுரைகளை, சில பகுதிகளை மொழிபெயர்த்துள்ளேன். மேலும், சாதியமைப்பு பற்றிய மார்க்ஸின் கருத்துரு*: ஒரு புனரமைப்பு என்னும் தலைப்பில் பி.ஆர். பாபுஜி எழுதிய ஆய்வுக் கட்டுரையும் பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

அதனோடு, முகநூல் விவாதங்களுக்கு நான் அளித்த பதில்களைத் தொகுத்தும், விரிவுபடுத்தியும் பின்னிணைப்பாகக் கொடுத்துள்ளேன். இறுதியாக மார்க்சியம் மற்றும் அம்பேத்கர் சிந்தனைகளை ஆய்வு செய்ய விரும்பும் தொடக்கக்கட்ட ஆர்வலர்களுக்காக சில கேள்விகளையும் கொடுத்துள்ளேன். அக்கேள்விகளுக்கு தாமாக ஆய்வு செய்து பதில் தேடி, சீர்தூக்கிப் பார்த்து சாதியப் பிரச்சினைக்கான தீர்வுகளைக் கொண்டிருக்கும் பாதை எதுவென சம்பந்தப்பட்டவர்கள் கண்டறியலாம்.