Thursday, December 16, 2010

கர்நாடக இசை தமிழிசையிலிருந்து திருடப்பட்டதா - பொ. வேல்சாமி


பொற்காலங்களும் இருண்ட காலங்களும் எனும் தொகுப்பிலிருந்து:

இருபதாம் நூற்றாண்டிலிருந்துதான் தமிழகத்துக்கு வரலாறு தொடங்குகிறது. ஏன் அதற்கு முன்னர் வரலாறு இல்லையா என்ற ஐயம் எழுவது இயல்புதான்.அதற்கு முந்தைய காலங்களில் வரலாறும் புராணங்களும் செவிவழிச்செய்திகளும் ஒன்றாகக் கலக்கப்பட்டுக் கர்ண பரம்பரைக் கதைகள்தான்வழக்கிலிருந்தன. இதனால் கரிகால் சோழனுக்கு இளங்கோவடிகள் பேரனானார்.*1 ஒளவையாரும் புகழேந்திப் புலவரும் நூற்றாண்டுகள் தோறும்அவதரித்தனர். திருவள்ளுவர் நக்கீரரோடு இணைக்கப்பட்டார்.*2 பேராசிரியர் உரை எது, நச்சினார்க்கினியர் உரை எது, பரிமேலழகர் உரை எதுஎன்னும் வேறுபாடு தெரியாமல் எல்லோரும் ஒன்றாகப் போட்டுக் குழப்பப்பட்டனர். தமிழ்நாட்டில்தான் இந்த அவல நிலை இருந்ததாகக்கொள்ளவேண்டியதில்லை. இந்தியா முழுமையிலும் இதே நிலைதான். இருபதாம் நூற்றாண்டில் இத்தகைய செய்திகள் தொகுத்துப் பகுத்து ஆராயப்பட்டு,முறைப்படுத்திய வரலாற்று நூல்கள் வெளிவரத் தொடங்கின. இத்தகைய வரலாற்றுப் புரிதலுக்கு அடித்தளமிட்டவர்கள் ஐரோப்பியர்களான வெள்ளையர்களே.வெள்ளையர்களால் எழுதப்பட்ட இந்திய-தமிழக வரலாற்றுக் குறிப்புகள், வெள்ளையர் கண்ணோட்டத்தின்படி ஐரோப்பியர்களைப் பகுத்தறிவுஉள்ளவர்களாகவும் மற்றவர்களை பழங்குடியினராகவும் நாகரிகம் குறைந்தவர்களாகவும் படைத்துக் காட்டின.


பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய முறையில் கல்வியறிவு பெற்ற தமிழர்களான பார்ப்பனர்களும் முதலியார், வெள்ளாளர் போன்றஉயர் சாதிச் சூத்திரர்களும்தான் முன்னணியில் இருந்தனர். குறிப்பாகப் பார்ப்பனர்கள், வெள்ளையர்களின் நிர்வாக அமைப்பில் முதல் இடத்தைப் பிடித்துவிட்டனர்.கடந்த கால வரலாற்றில் உயர் சாதிச் சூத்திரர்களாகிய தங்களுடன் சேர்ந்து கொண்டு அதிகாரத்தை அனுபவித்த பார்ப்பனர்கள், நிகழ்காலத்தில் தங்களைவிட்டுவிட்டு ஆங்கிலேயர்களை அண்டி அதிகாரத்தில் பங்கெடுத்தது கண்டு சூத்திர உயர் சாதியினர் கொதிப்படைந்திருந்தனர். இந்த வகையான நட்பும் பகையும்பூண்ட பார்ப்பன, சூத்திர உயர் சாதித் தமிழர்களால்தான் தமிழக வரலாற்றுப் புனைவுகள் முதன்முதலில் உருவாக்கப்பட்டன.



இத்தகைய சூழ்நிலையில்தான் தமிழக வரலாறு தொடர்பான எழுத்துகள் வர ஆரம்பித்தன. வரலாற்றுப் புனைவாளர்கள் இயல்பாகச் செய்யக்கூடியதைப்போன்று தங்களுக்குச் சாதகமான செய்திகளை வரிசைப்படுத்தி வரலாறாகத் தொகுத்த இவர்கள், பாதகமான ஒரு காரணத்தையும் கற்பித்தனர். நவீன தமிழ்வரலாற்றில் இத்தகைய கற்பிதங்கள் ஏராளம் உண்டு. அவை பொற்காலங்கள், இருண்ட காலங்கள், நாகரிகமற்றவர்களின் ஆக்கிரமிப்புகள் போன்றபல. சூத்திர மேல் சாதியினருக்குச் சங்க காலம் பொற்காலமாக மாறியது. ஏனென்றால் பார்ப்பனர்கள், சூத்திரர்களை அண்டியிருந்த காலம் அதுதான்.பார்ப்பன உயர்சாதிச் சூத்திரர்களுக்கு இருண்ட காலம் என்பது களப்பிரர் காலம். ஏனென்றால் பழங்குடித் தமிழ் மக்களின் நிலங்களைக் கைப்பற்றும் முயற்சியில்தோல்வியடைந்து இந்தப் பார்ப்பன சூத்திரக் கூட்டு ஒடுங்கியிருந்த காலம் இது. இசுலாமியர் வருகையினால் இந்தக் கூட்டின் கொடுங்கோன்மையிலிருந்துஒடுக்கப்பட்ட மக்கள் தற்காலிகமாக விடுபட்டிருந்த காலம் இது. குறிப்பாகத் தங்கள் அதிகாரம் ஓங்கிய காலங்களை இந்தக் கூட்டாளிகள்பொற்காலம் என்று எழுதுவார்கள். தங்கள் அதிகாரத்தைச் செயல்படுத்த முடியாத காலங்களை இவர்கள் இருண்ட காலம் என்பார்கள். நாம் கேட்கவேண்டிய கேள்வி, யாருக்குப் பொற்காலம்? யாருக்கு இருண்ட காலம்? கடந்த காலப் புனைவுகள் என்பன சில தலைமுறைகள் கடந்தவுடன் பொதுக்கருத்தியலில் திராவிடக் கருத்தியலின் ஊடாக இயல்பான உண்மைகள் போன்று உருப்பெறுகின்றன. இந்த உருவாக்கம் அனைத்து மக்களுக்கும்பொதுவானது என்ற மாயக் கருத்தையும் வலுவாக விதைத்துவிடுகின்றது. இதனால் சுஜாதா போன்ற பார்ப்பனர்கள், (3) மு. அருணாச்சலம் போன்றசூத்திர சாதி ஆராய்ச்சியாளர்கள், (4) சமீப காலங்களில் தமிழிசைப் பற்றி (5) பல நல்ல கட்டுரைகளை எழுதிவரும் ந. மம்முது போன்றவர்கள் ஒரே குரலில்பேசும் நிலை ஏற்படுகிறது.


உண்மையில் அந்தக் காலகட்டம் எப்படி இருந்தது என்பதைக் கொஞ்சம் பார்ப்போம். இந்தியாவுக்கும் அதாவது தமிழ் நாட்டிற்கும் மேற்குநாடுகளாகிய அரேபியா, கிரேக்கம், ரோம் போன்ற நாடுகளுக்குமான வர்த்தகம் கொடிகட்டிப் பறந்த காலம் இதுதான். இதற்கான சான்றுகள்தமிழகமெங்கும் காணப்படுவதை இன்றைய அகழ்வாய்வுகள் வெளிப்படுத்துகின்றன. அரிக்கமேடு, கரூர், கொற்கை போன்ற பல இடங்களில் குவியல்குவியலாக ரோமானியப் பொற்காசுகள் கிடைத்திருக்கின்றன. இந்தக் காலத்தைச் சேர்ந்த சிலப்பதிகாரத்தில் மதுரை நகர் பற்றிய வருணனையும்மதுரைக் காஞ்சியில் வருகின்ற மதுரை நகரத்தைப் பற்றிய வருணனை போன்ற பகுதிகளும் இந்திய மொழி இலக்கியங்கள் எதிலும்காணக்கிடக்கவில்லை என்று வரலாற்று அறிஞர் அ.ஃ . பசாம் தன்னுடைய வியத்தகு இந்தியா (The wonder that was India) நூலில்குறிப்பிடுகின்றார்.(6)


இந்தியத் தத்துவ வரலாற்றில் தலைசிறந்தவராகக் குறிக்கப்படுகின்ற தர்மகீர்த்தி, சீனாவிலும் ஜப்பானிலும் பெளத்த மதத்தைப்பரப்பி, அவர்கள் மத்தியில் இன்றுவரை புகழ்பெற்று விளங்கும் போதி தர்மர், இலங்கையில் மகாயான பெளத்தத்தைப் பரப்பிசிங்கள மொழியிலும் பாலி மொழியிலும் பல நூல்களை எழுதிய சங்கமித்தரர் போன்ற நூற்றுக்கணக்கான ஜைன பெளத்தஅறிஞர்களும் துறவிகளம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதைமுதலிய தமிழில் தோன்றிய முதல் காவிய நூல்களும் பல்வேறுபட்ட யாப்பு நூல்களும் இசை நுணுக்கம், இந்திரகாளியம் போன்றஇசை நூல்களும் திருக்குறள், நாலடியார் போன்ற நீதி நூல்களும் தமிழில் தோன்றிப் புகழ் பரப்பியதும் இந்தக்காலம்தான்.இத்தகைய தன்மைகள் நிறைந்த இக்கால கட்டத்தை இருண்ட காலம் என்று சொல்லத் துணிபவர் குருடர்களாகத்தானே இருக்கமுடியும். உயர்சாதிக் குருடர்கள் இப்படிக் கூறுவதை விட்டுவிடுவோம். மம்முது போன்ற இசைத் துறை ஆராய்ச்சியாளர் ஒருவர்தமிழ் இசைக்குக் கேடு உண்டாக்கியவர்கள் ஜைனர்களும் பெளத்தர்களும் களப்பிரர்களும் என்று கூறுவது தமிழக வரலாற்றைச்சரியாகக் கவனிக்காததால் வந்த பிழையெனக் கருதலமா?


சமணர்களாலும் பெளத்தர்களாலும் இசை நூல்கள் அதாவது தமிழிசை நூல்கள் அழிக்கப்பட்டிருந்தால் தமிழிசை, நாடகம்போன்றவற்றைப் பேசும் நூல்களான இசை நுணுக்கம், இந்திர காளியம், பஞ்ச மரபு, பரத சேனாதிபதியம், மதிவாணர் நாடகத்தமிழ் நூல் போன்றவற்றை அடியார்க்கு நல்லார் 600 ஆண்டுகளுக்குப் பின் தன்னுடைய உரையில் எவ்விதம் கையாண்டிருக்கமுடியும்? இன்றைய நிலையிலும் பழந்தமிழ் இசைபற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் அதற்கான ஆதாரங்களைச் சமண, பெளத்தநூல்களான சிலப்பதிகாரம், பெருங்கதை, சீவகசிந்தாமணி, யசோதர காவியம், போன்ற நூல்களிலிருந்துதானே பெறுகின்றனர்.இந்த வெளிப்படையான உண்மை புரியாமல் போனது ஏன்? ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் போன்றவர்களின் பதிகங்களுக்கானஇசை வடிவங்கள் இந்தப் பதிகங்களைத் திருமுறைகளாகத் தொகுக்கும்போது காணாமல் போனதாகக் கதை வருகிறதே, அதுஎப்படி? அப்படிக் காணாமல் போன இசைப் பகுதிகளைப் பாணர் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணிதான் மீள்வார்ப்பு செய்துகொடுத்ததாகக் கதை இருக்கிறதே(7) இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்றுவாய்க்கு வந்ததைச் சொல்லுவது ஏன்?


உண்மையில் இந்தப் பிரச்சினைகள் சமணர்களும் பெளத்தர்களும் சம்மந்தப்பட்டவை அல்ல. இது சாதி சார்ந்த பிரச்சினை. உயர்சாதியினர் வரலாறு எழுதியதால் இத்தகைய பகுதிகளை மறைத்து விட்டுச் சமணர்கள், பெளத்தர்கள், களப்பிரர்கள் என்று கதைகட்டினர். ஏனென்றால் இசையைப் போற்றி வளர்த்த தமிழர்கள், பார்ப்பன சூத்திரக் கூட்டு ஆதிக்கத்தின் கீழ் தமிழகம் வந்தபோதுதாழ்த்தப்பட்டவர்களாக்கப்பட்டனர். பழந்தமிழ் நூல்களில் குறிக்கப்படும் இசைவாணர்களான பாணர், பறையர், கடம்பர், துடியர்(புறம்.335) போன்றவர்கள் பின்னாளில் தீண்டத்த தகாதவராக்கப்பட்டனர். இவர்களுக்குப் பொதுக்களம் மறுக்கப்பட்டது.இவர்களுடைய இசைக் கருவிகள் இழிவுபடுத்தப்பட்டன. திருநீலகண்ட யாழ்ப்பாணர் கதையில் ஞானசம்பந்தர் இவரைக்கோவிலுக்குள் அழைத்துச் செல்வது கூடத் திருநீலகண்டரின் இசைப் புலமைக்காகத்தானே தவிர ஞானசம்பந்தருக்குச் சாதி ஒழியவேண்டும் என்ற சிந்தனையால் அல்ல என்பதை உளம் கொள்ள வேண்டும். இதற்கு இந்த இசைவாணர்கள் அல்லது இசை நாடகம்சார்ந்த கலைஞர்களின் பயிற்சி முறையும் காரணம் ஆகும்.


சுமார் ஆறு, ஏழு வயதில் பயிற்சிக்குள் நுழையும் இவர்கள் இருபது வயதுக்குப் பின்னர் அரங்கத்துக்கு வருகின்றனர்.இடைப்பட்ட அவ்வளவு காலமும் இவர்கள் இசை நாடக நாட்டியப் பயிற்சி தவிர கல்விப் பயிற்சி பெறவே வாய்ப்பில்லாதவாழ்க்கையைப் பெற்றுவிடுகின்றனர். ஆகவே இத்தகைய கலைஞர்கள் கலைகளில் மேம்பட்டு விளங்கினாலும் நூல் கல்வியைப்பொருத்தமட்டில் தற்குறிகளாகவே இருந்து விட்டனர். இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய ஜி.என். பாலசுப்ரமணியம்என்பவர்தான் இசைக்கலைஞர்களுள் முதலில் பி.ஏ. பட்டம் பெற்ற பட்டதாரி (8) இத்தகைய பின்புலம் ஒருபுறமென்றால்,மறுபுறத்தில் நாட்டியத்தில் தேர்ந்த பெண்மணிகள் தேவதாசிகள் என்று பெயர் சூட்டப்பட்டுப் பரத்தையர்களாகக்குறிக்கப்பட்டனர். இவர்களுடைய நாட்டிய நிகழ்ச்சி சதிர் என்று இழிவாகக் குறிக்கப்பட்டது. முத்துப் பழனி போன்றபதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் பெண்கவிஞர், வடமொழி, தென்மொழிகளில் வல்லவர், நாட்டியத்தில் அந்தக்காலகட்டத்தில் தலைசிறந்தவர் என்று போற்றப்பட்டவர். அவர் கூடப் பிரதாப சிம்மன் என்ற தஞ்சை மராட்டிய மன்னனுக்குவைப்பாட்டியாகத்தான் வரலாற்றில் குறிக்கப்படுகிறார். இத்தகைய பெண்கள் சோழர் காலத்திலிருந்தே நாட்டியம் சார்ந்தவிபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்காக மராட்டியர் காலம் வரை விற்பனை செய்யப்பட்டதற்கு ஏராளமான சான்றுகள் தமிழகவரலாற்றில் குவிந்துள்ளன.

இத்தகைய இழி நிலைக்குச் சூத்திர தமிழர்களால் ஆட்படுத்தப்பட்ட மக்கள் எப்படித் தமிழ் இசையையும் நாட்டியத்தையும்மரியாதையுடன் போற்றியிருக்க முடியும்? வயிற்றுப் பிழைப்புக்குத்தான் இந்தக் கலைகள் அவர்களுக்குப் பயன்பட்டன.இருபதாம் நூற்றாண்டில் இந்தக் கலைகள் தம் கையிலிருந்தால் தமக்குப் பெருமை கிடைக்கும் என்பதை உணர்ந்த பார்ப்பனர்கள்கைவசப்படுத்திக் கொண்டனர். அதற்குக் கர்நாடக சங்கீதம் என்று புனிதப் பெயருமிட்டனர்.

இதுபோன்று சூத்திர உயர் சாதித் தமிழர்களால் புறக்கணிக்கப்பட்டவை நுண்கலைகள் மட்டுமல்ல, நம்முடைய தமிழ்நூல்கள் பலஇன்றும் ஐரோப்பிய நாடுகளின் பழம்பொருட்சாலைகளில் தூங்கிக்கொண்டுள்ளன. சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்னர்தொல்காப்பிய சொல்லதிகார குறிப்பு என்று பி.ச. சுப்ரமணிய சாஸ்திரியால் எழுதப்பட்ட நூல் தமிழ்மொழியின் சொல்லிலக்கணம்அனைத்தும் வடமொழியான சமஸ்கிருதத்திலிருந்து தான் உருவானது என்று விவாதித்தது. அந்நூலை அதேகாலத்தில்தன்னுடைய ஆய்வினூடாக கடுமையாக விமர்சித்து தமிழ் தனித்துவமுடையது என்பதை விஞ்ஞானப்பூர்வமாக நிலைநாட்டிபெருந்தமிழ் இலக்கண அறிஞரும் போலிஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டருமான மன்னார்குடி சோமசுந்தரம்பிள்ளை அவர்கள் எழுதியகட்டுரைகள் எந்தத் தமிழனுக்கும் தெரியாது. தொல்காப்பியம்-பொருளதிகாரத்திற்கான பேராசிரியர் உரைக்கு இவரால்ஆராய்ச்சிக் குறிப்பு எழுதப்பட்டு சுமார் அறுநூறு பக்கங்களாக வெளியிடப்பட்ட நூல் தமிழர்களால் இன்று மறக்கப்பட்டநூல்களில் ஒன்று. இந்நூல் பிரிட்டிஷ் மியூசியத்திலுள்ளது. நம்முடைய ஐம்பொன் சிற்பங்கள், தமிழ்க்கலை வரலாறு பற்றிய குறிப்புகள் போன்ற எதுவும் தமிழர்களால் இன்றுவரைகண்டுகொள்ளப்படவில்லை. 21ம் நூற்றாண்டிலும் இந்நிலை தொடர்கிறது. தமிழை வளர்ப்போம், தமிழரை வளர்ப்போம் என்றுஆர்ப்பாட்ட அரசியலை நடத்தியவர்களை நம்பி பின்சென்ற தமிழர்கள் இன்று பேச்சுத்தமிழையும் கூட தம் பிள்ளைகளுக்குஒழுங்காக கையளிக்கும் நிலையிலில்லை என்ற கசப்பான உண்மையும் உளம்கொளத்தக்கது. பாரம்பரியமாக சாதிப்பெருமைபேசி தமக்குள் சுருங்கிக்கொண்ட சாதித்தமிழர்கள் அரசியல் அதிகாரம் பெறுவதற்காக மக்கள் மத்தியில் வீசிவிட்ட சிலபொருளற்ற வார்த்தைகளில் ஒன்றுதான் தமிழிசையை களவாடிவிட்டதானக் கதையும் ஆகும்.


குறிப்புகள்

1. A.L. பசாம், வியத்தகு இந்தியா, இலங்கை அரசாங்க வெளியீடு, முதற்பதிப்பு 1963, பக்.606


2. கி.சு.வி. லட்சுமி அம்மணி ( ஜமீன்தாரிணி, மங்காபுரி) திருக்குறள் தீபாலங்காரம் ( வெளியீட்டு விபரம் தெரியவில்லை)முதற்பதிப்பு 1928, ப.கரு ( திருவள்ளுவ நாயனார் சரிதம் )


3. சுஜாதா, ஆனந்த விகடன்


4. மு.அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு பதிமூன்றாம் நூற்றாண்டு, காந்தி வித்தியாலயம், திருச்சிற்றம்பலம்,1970, ப.363


5. ந.மம்முது, புதிய பார்வை, டிசம்பர் 11.5,2004, பக்.26


6. A.L. பசாம், வியத்தகு இந்தியா, இலங்கை அரசாங்க வெளியீடு, முதற்பதிப்பு 1963,பக்.287


7. க. வெள்ளைவாரனன், பன்னிரு திருமுறை வரலாறு( முதற்பகுதி), அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மறுபதிப்பு 1994


8. இசையை வாழ்க்கையாகக் கொண்டவர்கள் அநேகமாகப் பள்ளிப்படிப்பு விசயத்தில் அத்தனை அக்கறைக்காட்டவில்லை.ஒன்று அவர்களுக்குப் பள்ளிப்படிப்பில் நாட்டம் செல்லவில்லை. அல்லது படிப்பு அவர்களுக்கு வரவில்லை.பள்ளிப்படிப்பைவிட அனுபவப்படிப்பையே அவர்கள் அதிகம் நம்பினார்கள். ஆனால் சங்கீத வித்வான் ஸ்ரீமான் ஜி.என்.பாலசுப்ரமணியம் பி.ஏ., ஹானர்ஸ்( லிட்டரேச்சர்) முதல் சில ஆண்டுகளில் அவருடைய கச்சேரிகளைப்பற்றிய அறிவிப்புகளில்இப்படித்தான் நீளமாய் போடுவார்கள் பட்டதாரி கலைஞராகவே அறிமுகமானார். (சு.ரா., இருபதாம் நூற்றாண்டின் சங்கீத மேதைகள், அல்லையன்ஸ் கம்பெனி, முதல்பதிப்பு1987,பக்.113) -


புதுவிசையில், ஏப்ரல் - ஜீன் 2005 இல் பொ. வேல்சாமி அவர்கள் எழுதியக் கட்டுரை பொற்காலங்களும் இருண்ட காலங்களும் எனும் தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது.


No comments:

Post a Comment