Saturday, November 3, 2012

சின்மயிக்கு ஞானியின் திறந்த மடல்


Gnani's Open Letter to Chinmayi - EMPHASIS  by Bruno via emailஅன்புள்ள சின்மயிக்கு,


வணக்கம்.


நாம் ஒரே ஒரு முறைதான் சந்தித்திருக்கிறோம். எந்திரன் பட வெளியீடு சமயத்தில் ரஜினியின் பிம்பம் பற்றிய ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் நாம் பங்கேற்றோம். எதிரெதிர் அணியில் இருந்தோம் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. நீங்கள் எந்திரன் படத்தில் பங்கேற்றவர். நான் எப்போதும் விமர்சகன்.


பின்னர் அண்மையில் என் சிநேகிதி பத்மாவும் நீங்களும் பங்கேற்ற ஒரு சமூக மேம்பாட்டு நிகழ்ச்சியில்இளம் மாணவிகளுக்கு உற்சாகமும் தன்னம்பிக்கையும் ஏற்படும் விதத்தில் நீங்கள் பேசியதாக அவர் எனக்குச் சொன்னார். சிறு வயதில் தந்தையால் கைவிடப்பட்டபோதும் தாயின் உறுதியான மனமும் கடும் உழைப்பும் உங்களை வாழ்க்கையில் முன்னேறச் செய்ததைப் பற்றி நீங்கள் பேசி அந்தச் சிறுமிகளுக்கு வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடுவதற்கான உத்வேகத்தை அளித்ததை அறிய. மகிழ்ச்சியாக இருந்தது. பொதுவாக சினிமா பிரபலங்கள் தங்கள் இளமைக் காலக் கசப்புகளை பேசுவதோ ஒப்புக் கொள்வதோ அவற்றிலிருந்து கற்றுக் கொண்டதைப் பகிர்வதோ அரிது.


அதன்பின் இணைய உலகில் டிவிட்டர் தளத்தில் உங்களுக்கும் உங்கள் அம்மாவுக்கும் எதிராக பாலியல் அவதூறுகளை செய்வதாக சிலரைக் குற்றம் சாட்டி நீங்கள் காவல் துறையில் புகார் செய்ததால் இருவர் கைதான செய்திகளைப் பார்த்ததும்இது தொடர்பான டிவிட்டுகளைத் தேடிப் படித்தேன். எல்லாம் கிடைக்கவில்லை. கிடைத்த வரை படித்தேன்.

முதலில் உங்கள் ட்விட்டுகளைப் பற்றிப் பேசிவிடுவோம். இட ஒதுக்கீட்டுக்கு எதிரான உங்கள் குமுறல் அதில் முக்கியமானது. தாழ்ந்த மனிதர் என்று யாரும் இல்லை. உங்கள் சம்மதம் இல்லாமல் உங்களை யாரும் தாழ்த்தப்பட்டவர்களாக வைத்திருக்கமுடியாது என்று நீங்கள் சொல்வது மிகச் சரி. அப்படி யாரேனும் தாழ்த்தி வைக்க முயன்றால்அடங்க மறுஅத்துமீறுபோராடு என்றுதான் இன்று தலித் தலைவர்களும் சொல்கிறார்கள். இதைத்தான் அம்பேத்கரும் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் சொன்னார். ஆனால் அவர் அதைச் சொல்வதற்கு முன்னால் நிலைமை அப்படி இருக்கவில்லை என்பதை நீங்கள் அறியவேண்டும். தலித்துகளின் சம்மதம் இல்லாமலேதான் அவர்கள் தாழ்த்தி வைக்கப்பட்டிருந்தார்கள்.


உங்கள் அறிக்கையில் உங்கள் கொள்ளுப் பாட்டனார்கள் தமிழறிஞர்கள் மு.ராகவைய்யங்காரையும் ரா.ராகவைய்யாங்காரையும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இருவரும் தமிழர் வரலாற்றில் மறக்கக் கூடாத மாமேதைகள் என்று நண்பர் ஆய்வாளர் பொ.வேலுசாமி நெகிழ்ச்சியுடன் சொல்கிறார். எனவே வரலாறு முக்கியம் என்று உங்களுக்குத் தெரிந்திருப்பதால்தான் உங்களுடைய தமிழ்ப் பாரம்பரியத்தை வரலாற்றிலிருந்து தூசு தட்டி எடுத்துச் சொல்கிறீர்கள். வரலாறு முக்கியம். மிக மிக முக்கியம். ஆனால் முழு வரலாறும் முக்கியம். அதில் ஏதோ ஒரு பகுதி மட்டும் அல்ல.


ராகவைய்யங்கார்களின் சம கால மேதைதான் கணித அறிஞர் ராமானுஜம். மூவருமே உங்கள் டிவிட்டர் பாஷையில் ஹையங்கார்கள்தான். ராமானுஜத்தைஅன்றைய உங்கள் ஜாதி வைதீகர்கள் ஜாதிப்பிரஷ்டம் செய்தார்கள். பாரதியாவது கலகக்காரன். வைதீகர்களுக்குப் பிடிக்காததில் வியப்பில்லை. ஆனால் ராமானுஜம் அவர்களை எதிர்க்காமல்தன் கணக்கிலேயே மூழ்கிக் கிடந்தவர். அவரை விலக்கக் காரணம், ‘சாஸ்திர விரோதமாக’ அவர் கடல் கடந்து போய் வந்ததுதான். அவர் செத்தபோது சம்பிரதாயமான இறுதிச் சடங்குகளைச் செய்ய மறுத்தார்கள். அன்றைய ஹிந்து இதழ் ஆசிரியரின் முயற்சியால் ஒருவர் சடங்கு செய்ய முன்வந்தார். மொத்தமாகவே ஆறேழு பேர்தான் சுடுகாடு வரை சென்றார்கள்.


சொந்த ஜாதிக்காரனையே கடல் கடந்த குற்றத்துக்காக இப்படி நடத்திய வைதீகர்கள் அன்று தங்கள் பார்வையில் கீழ் ஜாதி என்று கருதப்பட்டவர்களை எப்படி நடத்தியிருப்பார்கள் என்று யோசியுங்கள். அந்த வரலாற்றையும் நீங்கள் தேடிப் பிடித்து படிக்க வேண்டும். ராகவைய்யங்கார்கள் ஏட்டுச் சுவடிகளைப் படித்து ரசித்து தமிழமுதில் இன்புற்றிருந்த வேளையில்இருளாண்டிகளும் அஞ்சலைகளும் என்ன நிலையில் இருந்தார்கள் என்பதும் வரலாற்றில் இருக்கிறது. உங்கள் நண்பர் ’ இயக்குநர் ராஜமௌலி டிவிட்டில் தவறாகச் சொல்வது போல அந்த நிலை தொழிலால் வந்ததல்ல. பிறப்பால் சுமத்தப்பட்டதுதான். அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக நடத்தப்படுவதற்கு அவர்களுடைய சம்மதத்தை யாரும் கேட்டது இல்லை. எதிர்த்தவர்களுக்கு சாணிப்பால் அபிஷேகமும் கசையடி அர்ச்சனையும்தான் கிடைத்தன. அந்த வரலாறுகளைத் தேடிப் பிடித்துப் படித்தால்தான்அந்த இடைவெளியை நிரப்பவே இன்றிருக்கும் இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது என்பது உங்களுக்குப் புரியமுடியும்.


மறவர் சீமைப் பொண்ணு நான்’ என்று பெருமைப்படுகிறீர்கள். உங்கள் கொள்ளுப் பாட்டனார் காலத்தில் அந்த மறவரெல்லாம் குற்றப் பரம்பரையினர் என்று அரசாங்கத்தால் முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப்பட்ட வரலாற்றையும் சேர்த்துப் படித்தால்தான்ஏன் இன்று மறவருக்கும் இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது என்பது புரியும்.


ட்விட்டரில்பேஸ்புக்கில் எல்லாம் எவரும் தங்களுக்கு ஆழமாக நேரடியாக தெரிந்திராத இட ஒதுக்கீடு போன்ற விஷயங்களைப் பற்றி டைனிங் டேபிளில் போகிற போக்கில் கமெண்ட் அடிப்பது போல எழுதும் பொறுப்பற்ற சுதந்திரம் இருப்பதே பிரச்சினை. இந்த விஷயங்களில் உங்களுக்கோ பிறருக்கோ அக்கறை இருப்பதை நான் நிச்சயம் வரவேற்கிறேன். 99.9 மதிப்பெண் வாங்கிய பிராமணப் பெண்ணுக்கு சீட் கிடைக்காத பிரச்சினைக்கும் தீர்வு தேவைதான். ஆனால் தீர்வைத் தடுப்பது இட ஒதுக்கீடு அல்ல என்பது புரியநீங்கள் நிறைய படிக்க வேண்டும். பல மொழிகளைப் படித்துத் தேர்ந்துள்ள உங்களால் இது முடியாதது அல்ல. தேவைப்படுவது நிஜமான தேடலும் ஜாதிகளுக்கு அப்பால் எல்லா சக மனிதர்கள் மீதான அன்பும் அக்கறையும்தான்.


இனி உங்கள் புகாரால் கைதாகியும் கைதை எதிர்நோக்கியும் இருக்கும் சக ட்விட்டர்களின் நடத்தையைப் பார்ப்போம். அதில் ஒருவரை நான் நேரடியாகவே அறிவேன். நான் நடத்தும் கேணி இலக்கிய கூட்டங்களுக்குத் தொடர்ந்து வருபவர். ஓராண்டாக சிறப்பாக வெளிவரும் தமிழின் அருமையான ஒரு சிற்றிதழுக்குப் பங்காற்றுபவர். உங்களுடன் சண்டையிட்ட ட்விட்டர்கள் பலர் இட ஒதுக்கீடுமீனவர் நலன் இவற்றில் எல்லாம் அக்கறையும் உணர்ச்சிப் பூர்வமான ஈடுபாடும் உடையவர்கள். உங்களுடைய சில கருத்துகள் அவர்களுக்கு எரிச்சலாகத்தான் இருக்கும்.


ஆனால் அதற்காக பாலியல் சார்ந்த அவதூறுகளை கேலிகளை அவர்களில் யார் எழுதுவதையும் யாருக்கு எதிராக எழுதுவதையும் நான் நிச்சயம் ஏற்கவில்லை. கடுமையாகக் கண்டிக்கிறேன். நீங்களோ வேறு யாரோ இட ஒதுக்கீடு பற்றியோதாழ்த்தப்பட்டவர்கள் பற்றியோமீனவர் கொலைகள் பற்றியோ புரிந்தோ புரியாமலோ எவ்வளவு அபத்தமாகப் பேசினாலும்அவையெல்லாம் எப்படி அபத்தம் என்றுதான் புரிய வைக்க முயற்சிக்கலாம். அதற்கான பொறுமை இல்லாவிட்டால் உங்களை அலட்சியம் செய்துவிட்டுப் போகலாம். ஆனால் ஒருபோதும் யார் மீதும் பாலியல் வக்கிர அவதூறுகள்கேலிகள் செய்வது நிச்சயம் தவறு.

இங்கே நான் கவலையும் கவனமும் கொள்ள விரும்பும் இரண்டு பிரச்சினைகள் இருக்கின்றன. இவற்றை நிச்சயம் சட்டத்தால் தீர்க்கமுடியாது. .

அறிவுக் கூர்மையும் திறமையும் கடும் உழைப்பும் தன்னம்பிக்கையும் உடைய உங்களைப் போன்ற பலர் இதே சமூகத்தில் வாழும் கோடிக்கணக்கான சாதாரண மக்களின் பிரச்சினைகளைஅவற்றின் வேர்களைப் பற்றி அறிந்துகொள்ளும் உழைப்பே இல்லாமல் ஒரு முழு வாழ்க்கையை இன்றைய சமூகத்தில் வாழ்ந்து முடித்துவிட முடியும். புகழும் செல்வாக்கும் தரும் வசதியில் அந்தப் பிரச்சினைகளைப் பற்றி குழப்பமான மேம்போக்கான கருத்துகளைச் சொல்லவும் முடியும். ராகவைய்யங்கார் முத்தொள்ளாயிரத்தைப் பதிப்பிக்கும்போது ஒரு பாட்டில் தனக்கு ஒரு விஷயம் இன்னும் ஆழமாகத் தெரியவில்லை என்றால் எவ்வளவு தயங்கியிருப்பார்எவ்வளவு தேடியிருப்பார்.. தேடிப் பிடித்து படிக்காமல் அவசரப்பட்டு முடிவைச் சொல்லியிருந்தால் அவரை ஆய்வுலகம் கொண்டாடியிருக்குமா ?


மறுபக்கம் இந்த பிரச்சினைகளில் உணர்வுப் பூர்வமான ஈடுபாட்டுடன் அவற்றிற்குத் தீர்வு வரவேண்டுமென்ற ஆர்வமும் கொண்டு பல்வேறு சமூக சித்தாந்தங்களில் ஓரளவு பரிச்சயமும் உடைய மிகச் சிலராக இன்று ஒரு புதிய தலைமுறை துடிப்புடன் உருவாகி வந்துள்ளது. சோகம் என்னவென்றால்அதில் சிலர்கூடவே பாலியல் வக்கிர மனசும் உடைய டாக்டர் ஜெக்கில் அண்ட் மிஸ்டர் ஹைடாக விளங்குகிறார்கள்.. உங்களை பகடி செய்த ட்விட்டர்களின் விரல்கள் கம்ப்யூட்டர் பட்டன்களில் பாலியல் வக்கிரத்தை தட்டும்போதுஅவர்கள் படித்த பெரியாரோஅம்பேத்கரோமார்க்சோசேகுவேராவோ ஏன் அவர்களுடைய தலைக்குள்ளிருந்து ஒரு எதிர்த் தட்டு தட்டமுடியாமல் போகிறது என்பதே என் இன்னொரு கவலை.


இன்றைய மீடியா சூழல்தான் காரணம். நீங்களும் சரிஉங்கள் டிவிட்டர் எதிரிகளும் சரிட்விட்டரில் எழுதிய பல வரிகளை ஒரு போதும் அச்சுப் பத்திரிகைகளில் எழுதமுடியாது. பத்திரிகை ஆசிரியர் தடுத்துவிடுவார். இணையம் தரும் சுதந்திரம் கட்டற்றது. ஆனால் அதைப் பயன்படுத்துவோருக்கு சுய கட்டுப்பாடும் பொறுப்பும் சொல்வதில் தெளிவும் தேவை. அது இல்லாத இருபிரிவினரிடையே நடக்கும் சண்டைதான் இந்த விவகாரம். இதனால் இணைய சுதந்திரத்துக்கே ஆபத்து.


உலக மகா அரசியல் சித்தாந்தங்களுடனெல்லாம் பரிச்சயம் கொண்டவர்களுக்குஅடிமனதில் பெண் மீதான பாலியல் வக்கிரம் மட்டும் ஏன் நீறு பூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டே இருக்கிறது மீடியாதான் காரணம். எத்தனை அறிவார்ந்த நூல்களைப் படித்தாலும் கேட்டாலும்சினிமாவும் டி.வியும் காமப் பிசாசுகளை உசுப்பி விடும் வேலையையே பெரும்பாலும் செய்து கொண்டிருக்கின்றன. அதனால்தான் மற்றபடி நல்லவர்களாக தெரிபவர்கள் கூட இணைய முகமூடி மாட்டியதும் நிர்வாணக் குத்தாட்டம் ஆடுகிறார்கள். அவர்கள் தலைக்குள்நீங்கள் பணி புரியும் வணிக சினிமா துறை விதைத்த காமவித்துகள்குத்தும் கூரிய முட்களோடு தழைத்துக் கொண்டே இருக்கின்றன.


நீங்கள் ஆபாசப் பாடல்களைப் பாடியிருப்பதால்,உங்களுக்கு எதிராக ஆபாசமாக எழுதினால் என்ன தப்பு என்ற அராஜகமான வாதத்தை நிச்சயம் நான் ஏற்க மாட்டேன். ஆனால் அறிவுக்கூர்மைமொழிப் புலமை எவ்வளவு இருந்தாலும்என்ன பாடுகிறோம் என்பதை முடிவு செய்யும் தேர்வைக் கறாராக செய்யாமல் வாய்ப்புபணம்புகழ் என்ற அளவுகோல்களை மட்டுமே பயன்படுத்தி நீங்கள் பாடிக் கொண்டிருக்கும் சினிமா பாடல்களின் விளைவுகள் என்ன என்ற கேள்வியை நீங்கள் புறக்கணிக்க முடியாது.


ஐந்தடி வளர்ந்த ஆட்டுச்செடி நான். என்னை மேய்ந்துவிடு மொத்தம்” என்று ஒரு பெண் பாடுவது ஆண் மனதில் என்ன உணர்ச்சியை எழுப்பும் ? ‘உன்னுள்ளே நுழைஞ்சதாரோபையக் குழைஞ்சதாரோ ?’ என்ற வரிகளை எழுதியவருக்கு பெரும் பணமும் சமூக அந்தஸ்தும் தரும் இதே சமூகம்அந்த வரிகளின் அர்த்தத்தை ஒருவர் ட்விட்டரில் எழுதினால் கழுத்தில் கை வைத்து சைபர் கிரைமுக்கு அல்லவா தள்ளிக் கொண்டு போகும் ? ‘தினம் ஆடை சண்டையிலே முதலில் தோற்பவள்‘ என்று தன்னைப் பற்றி பாடும் பாத்திரம் அதே பாட்டில் நீ இடம் சுட்டிப் பொருள் விளக்கு’ என்று சொல்லும்போது எந்த இடத்தைஎன்ன பொருளைச் சொல்கிறாள் என்ற சூட்சுமம் ஆபாசமாக எழுதும் ட்விட்டர்களுக்குத் தானே அல்வாவாக இனிக்கும். அது ராகவைய்யங்கார்கள் படித்த தமிழ் இலக்கணத்திற்கு அப்பாற்பட்டதல்லவா?


இந்தப் பாடல்களைக் கேட்டு வளரக் கூடிய ஒரு சிறுவன்நாளை க்வாண்ட்டம் பிசிக்ஸ் படித்து ஐஎஸ்ஆர்ஓ விஞ்ஞானியானாலும் அவன் அடிமனதில் பதிந்துவிட்ட பாலியல் வக்கிரம்வேறொரு சின்மயியுடன் சண்டை வரும்போது வெளிப்படத்தான் செய்யும். பாடுவது என் தொழில். கொடுப்பதைப் பாடுகிறேன் ‘ என்று வாதாட இடமில்லை. அந்தப் பாட்டுஅதைக் கேட்கும் மனங்களை இழிவான மனநிலைக்கு அழைத்துப் போனால்அதற்கான பொறுப்பில் உங்கள் பங்கும் இருக்கிறது. ஒருவரின் சம்மதம் இல்லாமல் அவரை யாரும் தாழ்த்தப்பட்டவராக்கிவிடமுடியாது என்பது போலவேஉங்கள் சம்மதமில்லாமல் யாரும் உங்களை இழிவான பாடலகளைப் பாட வைத்துவிடமுடியாது. அப்படிப் பாட மறுத்ததால் வாய்ப்புகளை இழந்த உன்னிகிருஷ்ணன் ஒன்றும் நலிவுற்று ஓய்வூதியம் வாங்கவேண்டிய நிலைக்குப் போய்விடவில்லை.


சமூகத்தில் நாம் ஒவ்வொருவரும் மறைமுகமாகவோ நேரடியாகவோ இன்னொருவர் வாழ்க்கையோடு சம்பந்தப் பட்டிருக்கிறோம். அந்தப் பொறுப்பை நாம் உதறிவிடமுடியாது. உங்கள் மீது பாலியல் அவதூறுகளை வீசுபவர்களின் மன வக்கிரங்கள்காலம் காலமாக நம் ஊடகங்களால் விதைக்கப்பட்டவை. அதற்காக நியாயமாகவே பதறும் நீங்கள்அறிந்தோ அறியாமலோ அதே விஷ விதைகளை தூவிக் கொண்டிருக்கிறீர்கள். அவை விருட்சங்களாகும்போது உங்கள் மகளை அழைத்துக் கொண்டு நீங்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கும் நிலை வரலாம். அல்லது உங்கள் மகன் மீது வேறொரு தாய் புகார் கொண்டு வரலாம்.


இந்தப் பிரச்சினைகளை நாம் சட்டத்தால் மட்டும் திருத்திவிடமுடியாது. ஒருவரோடொருவர் விவாதிப்பதன் மூலம் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அடுத்த பாட்டைப் பாடும் முன்பு வரிகளின் அர்த்தத்தை யோசியுங்கள். அவற்றுக்கு என்ன மாதிரி காட்சி அமைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று யோசியுங்கள். அது உங்களுக்கு உடன்பாடானதுதானா என்று யோசியுங்கள். அடுத்த ட்விட்டை எழுதும் முன்பு அந்த விஷயம் பற்றிய உங்கள் புரிதல் முழுமையானதுதானா என்று யோசியுங்கள். இல்லையென்றால் முதலில் புரிந்துகொண்டு அப்புறம் விமர்சியுங்கள். நீங்கள் மட்டுமல்லஉங்களையும் இன்னும் பலரையும் கீழ்த்தரமாக பகடி செய்த பதிவர்களும் கூடதாங்கள் படித்த பெரியாரும் மார்க்சும் அம்பேத்கரும் ஏன் தங்கள் மூளைக்குள் பதிந்தார்களே ஒழிய மனங்களில் படியவில்லை என்பதை யோசிக்கவேண்டும் என்றே வேண்டுகிறேன். நாம் எல்லாரும் வெறும் செராக்ஸ் மெஷின்களல்ல.


உலகின் மிகச் சிறந்த நீதிமன்றம் நம் மனசாட்சிதான். அதையே உங்களுக்கும் சரவணகுமாருக்கும் ராஜனுக்கும் இன்னபிறருக்கும் பரிந்துரைக்கிறேன். இந்த மோசமான சூழலிலிருந்து நீங்கள் அனைவரும் மீண்டு வர வாழ்த்துகிறேன்.


அன்புடன் ஞாநி

கல்கி 3-11-2012Saturday, September 17, 2011

மாமிசம் - விர்ஜிலியோ பினோரா

நான் அ-புனைவு (non-fiction) என்று வகைப்படுத்தப்படும் நூல்களையே விரும்பி வாசிப்பேன். வரலாற்று சம்பவங்களை, அரசியல் செயல்பாடுகளை, மனித துயரங்களை உண்மை நிகழ்வுகளோடு விவரிக்கும் அவ்வகைப் புத்தகங்களில் இருந்தே அறிவைப் பெருக்கிக்கொள்ள முடியும், அவற்றைக் கொண்டே சமூக மேம்பாட்டிற்கான வழிமுறைகளைக் கண்டடையமுடியும் எனும் ஒரு வகையான பிடிவாதப்போக்கு என்றும் சொல்லலாம். அப்பிடிவாதப்போக்கை அவ்வப்போது கேள்விக்குட்படுத்தியும், அசைத்தும் பார்ப்பன் எனது தோழன் வசுமித்ர. எனது நிலைப்பாட்டை மாற்றக்கூடிய சில புனைவு இலக்கியப்புத்தகங்களிலிருந்து தேர்ந்தெடுத்த சிலப் பத்திகளை வாசித்தோ அல்லது அதை எழுதிய எழுத்தாளர் பற்றியக் குறிப்புகளையோ எடுத்துச் சொல்லி ஆர்வத்தை தூண்டிவிடுவான். அதன் பயனாக அவ்வப்போது சில புனைவு நூல்களை வாசிப்பதுண்டு. அந்தவகையில் சில புனைவுக் கதைகள், தொகுப்புகள் மனதை உலுக்குவதாக அமைந்துள்ளது. ஆனால் அவை எல்லாவற்றையும் மிஞ்சக்கூடிய ஒருவித அதிர்ச்சியுணர்வை ஏற்படுத்திய, தத்துவார்த்தக் கேள்விகளை எழுப்பிய ஒரு தொகுப்பு ரவிக்குமார் மொழிபெயர்ப்பில் 2003ல் வெளிவந்த வெளிச்சமும் தண்ணீர் மாதிரிதான் எனும் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் தொகுப்பு.

எட்டு கதைகள் இடம்பெற்றிருக்கும் இத்தொகுப்பில் முதல் கதையே மனதை உலுக்குவதாகத்தான் இருக்கிறது. மனித வாழ்க்கையின் துயர்களை, இயலாமையை, வறுமையின் வன்முறையை வெறும் நான்கு பக்கங்களில் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் கியூப எழுத்தாளர் விர்ஜிலியோ பினோரா. முதலாளித்துவம் நம் சதைகளையே பிய்த்து நமக்கே உணவாகத் தருகிறது எனும் உட்பொருளை இக்கதை எனக்கு உணர்த்துகிறது, அத்தோடு எவ்வளவுதான் மனிதன் தன்னிடம் உள்ளவற்றைக் கொண்டே வாழ்ந்துவிட முயற்சித்தாலும் அது மற்றவரின் வாழ்வாதாரத்தைப் பறிக்கக்கூடியதாக இருக்கிறது. மேலும் விரும்பியோ, விரும்பாமலோ சமூகத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை சார்ந்தே இருக்கின்றனர் எனும் நிதர்சனமும் விளங்குகிறது. எளிய மக்களின் மரணங்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை, சுவடுகள் ஏதுமின்றி தாங்களாகவே தங்களை துடைதெரிந்துவிடுவதற்கான தயாரிப்பை ஆதிக்க வர்க்கம் செய்து தருகிறது என்பதையும் இக்கதை உணர்த்த தவரவில்லை. தத்துவார்த்தக் கோட்பாடுகளை மேற்கோளாக காட்டி புலமை பாணியில் கதை சொல்லாமல் எளிய விவரணையாகவே இருப்பது இக்கதையின் சிறப்புக்குறிய அம்சமாகும். மொழி உணர்ச்சிவசப்பட்டால் ஆசிரியன் தோற்றுவிடுகிறான் என்று அடிக்கடி வசுமித்ர சொல்வான், அது எவ்வளவு உண்மை என்பது மொழிபெயர்ப்புக் கதைகளை படிக்கும் பொழுது தெரிகிறது. காம்யூவின் அந்நியனாக இருக்கட்டும், அங்கிள் சாமுக்கு மாண்டோவின் கடிதங்களாக இருக்கட்டும், அய்ஃபர் டுன்ஷின் அசீஸ் பே சம்பவமாக இருக்கட்டும் எழுத்துக்கள் சொற்சிக்கனத்தோடு வாழ்க்கையின் குரூரங்களை விவரிக்கின்றன, அங்கு படிக்கும் வாசக மனமே உணர்ச்சிவயப்படும் சூழலுக்கு இழுத்துக் செல்லப்படுகிறது. அப்படி ஏற்பட்ட ஒரு உணர்ச்சியின் பிடியிலிருந்து மீளமுடியாமல் இக்கதையை இங்குப் பதிவு செய்கிறேன்.

காப்புரிமை விதிகளை நான் மதிக்கிறேன். இன்று வாசிப்பு என்பதை ஒரு அறிவுஜீவி பழக்கமாக நினைத்துக்கொண்டு, அடையாளச் சிக்கலுக்காக பெரும்பாலும் இணையத்தை மட்டுமே நம்பி வலம் வந்துக் கொண்டிருக்கும் ஒரு தரப்பினருக்கு இத்தகைய புத்தகங்களை அறிமுகம் செய்துவைப்பது பயனளிக்கும் என்ற எண்ணமே அந்த முக்கியமான தொகுப்பிலிருந்து ஒரு கதையை முழுமையாக பதிவு செய்யத் தூண்டியது. ரவிக்குமார், அ.மார்க்ஸ், பொ. வேல்சாமி ஆகிய மூவரின் கூட்டனி வெளியிட்டுவந்த நிறப்பிரிகை இதழ் நிறுத்தப்பட்டது தமிழ் இலக்கியச் சூழலில் ஓர் இழப்பே. இருந்தாலும் மூவரும் தனித்தனியே தங்கள் படைப்புகளை சமூகத்திற்கு அளித்துவருகிறார்கள் என்பது ஆறுதலான ஒரு விசயமே.

மொழிபெயர்ப்புத்தரம், தேர்வு அகியவற்றைப் பற்றி இந்நூலின் முன்னுரையில் அரவிந்தன் எழுப்பும் கேள்விகள் முக்கியமானவை.

மாமிசம்

- விர்ஜிலியோ பினோரா

அது சாதாரணமாகத்தான் நடந்தது, எந்தப் பாவனையுமில்லாமல். அந்த நகரம் இறைச்சிப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருந்தது, அதற்கான காரணங்களை இங்கே விவரிக்கத் தேவையில்லை. எல்லோரும் கலவரப்பட்டார்கள், மிக மோசமான விமர்சனங்கள் காதில் விழுந்தன. பழி வாங்கப் போவதாகவும் பேசப்பட்டது. ஆனால், வழக்கம்போல மிரட்டல்களைத் தாண்டி எதிர்ப்பு வளரவில்லை, பாதிக்கப்பட்ட அந்த நகரத்தின் மக்கள் வெகுசீக்கிரமாகவே, பலதரப்பட்ட காய்கறிகளையும் தின்பதில் ருசிகண்டு விட்டார்கள்.

திரு. அன்சால்டோ மட்டும்தான் அந்த நகரத்தில் விதிவிலக்கு. எந்தக் கலக்கமும் இல்லாமல் ஒரு பெரிய கத்தியை அவன் தீட்டிக்கொண்டிருந்தான். பிறகு தனது பேண்ட்டை முழங்கால் வரை கீழே தள்ர்த்திவிட்டான். தனது இடதுபுற பிருஷ்டத்திலிருந்து ஒரு துண்டுக் கறியை வெட்டி எடுத்தான். உப்பும் வினிகரும் போட்டு அந்தக் கறியைச் சுத்தம்செய்து அதை ப்ராய்லரில் வைத்து வதக்கினான். ஞாயிற்றுக்கிழமைகளில் சமைப்பதற்குப் பயன்படுத்தும் வாணலியில் அந்தக் கறியைப் போட்டு வறுத்தான். மேசையில் அமர்ந்து தனது கறியைச் சுவைத்துச் சாப்பிட ஆரம்பித்தான். அந்தச் சமயம் பார்த்துக் கதவை யாரோ தட்டுகிற சப்தம் கேட்டது. தட்டியவர் அன்சால்டோவின் பக்கத்து வீட்டில் வசிப்பவர். அவர் தனது மனக்குறையை அன்சால்டோவிடம் சொல்வதற்காக வந்தார். அன்சால்டோ மிகவும் சினேக பாவத்தோடு அந்த இறைச்சித் துண்டை அவரிடம் காண்பித்தான். அதைப் பற்றி அவர் கேட்டபோது தனது இடது பக்க பிருஷ்டத்தை அவருக்கு அன்சால்டோ காண்பித்தான். உண்மை பட்டவர்த்தனமாக இருந்தது. அவர் மிகவும் நெகிழ்ந்துபோனார், ஒரு வார்த்தையும் பேசாமல் வெளியே சென்று சற்று நேரத்தில் அந்த நகரத்தின் மேயரை அழைத்துக்கொண்டு திரும்பி வந்தார். அந்த நகரத்தின் மக்கள் தங்கள் கையிருப்பில் வைத்திருக்கும் இறைச்சியை அதாவது தங்களின் சொந்த மாமிசத்தைக் கொண்டு தங்களது பசியைத் தீர்த்துக்கொள்ளும்படி செய்யலாம் என்ற தனது ஆவலை அன்சால்டோவிடம் மேயர் தெரிவித்தார். அதிகம் படித்தவர்களின் எதிப்புக்குப் பிறகு, அன்சால்டோ அந்த நகரத்தின் மத்தியிலிருந்த சதுக்கத்துக்குச் சென்று வெகுமக்களுக்கான செய்முறை விளக்கத்தைச் செய்துகாட்டினான். அதன் பிறகு அந்தப் பிரச்ச்னை ஒரு முடிவுக்கு வந்தது.

ஒவ்வொருத்தரும் தனது இடது பிருஷ்டத்திலிருந்து இரண்டு துண்டுகளை வெட்டி எடுப்பது எப்படி என்பதை ஒருமுறை அவன் செய்துகாட்டினான். ஒரு கொக்கியில் மாட்டப்பட்டிருந்த இறைச்சியின் நிறத்திலான ப்ளாஸ்டரால் செய்யப்பட்ட பொருளை அவன் பயன்படுத்தி அதை விளக்கினான். ஒன்று அல்லது இரண்டு துண்டு மாமிசத்தை வெட்டி எடுப்பது எப்படி என்பதைச் செய்து காட்டினான். இந்த விஷயங்கள் தெளிவு படுத்தப்பட்டதும் ஒவ்வொருத்தரும் தனது இடதுபக்க பிருஷ்டத்திலிருந்து இரண்டு துண்டு மாமிசத்தை வெட்டி எடுக்கத் தொடங்கிவிட்டனர். அது பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஆனால் அதைப்பற்றி விவரிக்கக் கூடாது எனச் சொல்லப்பட்டது. இப்படியாகப் பெறப்படும் மாமிசத்தைக்கொண்டு அந்த நகரத்தின் இறைச்சித் தேவையை எத்தனை நாட்களுக்குத் தீர்க்க முடியும் எனக் கணக்கிடப் பட்டது. நூறு பவுண்டு எடையுள்ள ஒரு நபர் குடல் போன்ற சாப்பிட முடியாத உறுப்புகளைத் தவிர்த்துப் பார்த்தால் ஒரு நாளைக்கு அரை பவுண்டு மாமிசம் வீதம் நூற்று நாற்பது நாட்களுக்குத் தன்னையே சாப்பிட முடியும் என ஒரு புகழ்பெற்ற மருத்துவர் தெரிவித்தார். இந்த கணக்கு ஏமாற்றம் தருவதாயிருந்தது. ஒவ்வொருவரும் தனது அழகிய மாமிசத்தைச் சாப்பிட முடிந்தது. திரு. அன்சால்டோவின் யோசனையைப் பெண்களெல்லாம் புகழ்ந்து பேசினார்கள். உதாரணமாக, தமது மார்பகங்களைத் தின்றுவிட்ட பெண்கள் தங்களது உடம்பின் மேல் பாகத்தை மூடத் தேவையில்லாமல் போய்விட்டது. அவர்களது உடை தொப்புளோடு நின்றுவிட்டது. சில பெண்கள் பேசுவதை நிறுத்திவிட்டனர், ஏனென்றால் அவர்கள் தமது நாக்குகளை விழுங்கிவிட்டார்கள் (அதுவரை அது அரச வம்சத்தினர் மட்டுமே அனுபவித்துவந்த விருந்தாக இருந்தது.) தெருக்களில் வினோதமான காட்சிகள் நிகழ்ந்தன. வெகுகாலமாக ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத இரண்டு பெண்கள் சந்தித்துக்கொண்டபோது அவர்களால் ஒருவரையொருவர் முத்தமிட்டுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் தமது உதடுகளைக்கொண்டு அருமையான குழம்பு ஒன்றைச் சமைத்துச் சாப்பிட்டுவிட்டார்கள். சிறை அதிகாரியால் ஒரு கைதியின் மரண தண்டனை உத்தரவில் கையெழுத்திட முடியவில்லை, ஏனென்றால் அவர் தனது விரல்களிலிருந்த சதையைத் தின்று தீர்த்துவிட்டார். ருசியாகச் சாப்பிடுவதில் வல்லவர்கள் அந்த அதிகாரியும் அதில் ஒருவர் இந்தப் பழக்கத்தை வைத்துதான் விரல் சூப்புவது நல்லது என்ற பழமொழியை உருவாக்கினார்கள்.

சிறிய அளவில் இதற்கு எதிர்ப்பும் இருக்கத்தான் செய்தது. பெண்களுக்கு ஆடை தயாரிக்கும் தொழிலாளர் யூனியனைச் சேர்ந்தவர்கள் உரிய அதிகாரிகளிடம் தமது முறையான எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். பெண்கள், தமது தையல்காரகளை மீண்டும் பராமரிக்க ஊக்குவிக்கும் முழக்கம் ஒன்றை உருவாக்க வேண்டுமென்ற அவர்களது கோரிக்கையை அந்த அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர். ஆனால் அந்த எதிர்ப்பு குறிப்பிடும்படியாக இல்லை, தங்களது மாமிசத்தைத் தாங்களே உண்ணும் அந்த நகரத்து மக்களின் நடைமுறையில் அது எந்த விதக் குறுக்கீட்டையும் செய்யவில்லை.

அந்த விஷயத்தின் மிகவும் கவர்ச்சிகரமான நிகழ்ச்சி அந்த நகரத்தின் பாலே நடனக் கலைஞனின் கடைசித் துண்டு மாமிசம் வெட்டியெடுக்கப்பட்டதுதான். அவனது கலையின் மீதிருந்த மரியாதை காரணமாகத் தனது கால் பாதங்களின் முன் பகுதியைக் கடைசியாகச் சாப்பிடலாம் என அவன் விட்டு வைத்திருந்தான். பல நாட்களாக அவன் அமைதியின்றி இருந்ததை அவனது அக்கம்பக்கத்தினர் கவனித்துவந்தார்கள். கால் நுனியின் மாமிசம் மட்டுமே இப்போது மிச்சமிருந்தது. அந்தச் சமயத்தில் அவன் தனது நண்பர்களை அழைத்தான் கொடூரமான மௌனத்தின் மத்தியில் அந்தக் கடைசிப் பகுதியை அப்படியே அதை முன்பு அழகான வாயாக இருந்தது தற்போது ஒரு ஓட்டையாக மட்டுமே எஞ்சியிருக்கும் பகுதிக்குள் போட்டுக்கொண்டான். அங்கு இருந்தவர்கள் எல்லோரும் சட்டென்று இறுக்கமானார்கள்.

ஆனால், வாழ்க்கை நடந்துகொண்டிருந்தது. அதுதான் முக்கியமான விஷயம். அது அதிர்ஷ்டவசமாய் நடந்ததா? நினைவுக்கூரத்தக்க விஷயங்களுக்கான மியூசியத்தின் அறைகளில் ஒன்றில் அந்த நடனக் கலைஞனின் காலணிகள் காணப்படுவது இதனால்தானா? அந்த நகரத்தின் பருமனான நபர்களில் ஒருத்தர் (நானூறு பவுண்டுக்கு மேல் எடை உள்ளவர்) தனது கையிருப்பில் இருந்த மாமிசம் அத்தனையையும் பதினைந்தே நாளில் சாப்பிட்டு முடித்துவிட்டார்.(அவர் சிற்றுண்டி சாப்பிடுவதிலும் மாமிசம் தின்பதிலும் அதிக விருப்பம் உள்ளவர். அதுமட்டுமின்றி அவரது உடலமைப்பு, நிறையச் சாப்பிட வேண்டிய தேவையை ஏற்படுத்தியது.) கொஞ்ச காலத்துக்குப் பிறகு எவரும் அவரைப் பார்க்க முடியவில்லை. உண்மையில் அவர் ஒளிந்து வாழ்ந்துக்கொண்டிருந்தார். ஆனால் அப்படி ஒளிந்து வாழ்ந்தது அவர் மட்டுமல்ல, வேறு பலரும் அதே போலச் செய்துகொண்டிருந்தார்கள். இப்படியாக ஒருநாள் காலை திருமதி ஓர்ஃபிலா தனது மகனைக் கூப்பிட்டப்போது அவனிடமிருந்து பதிலெதுவும் வரவில்லை (அவன் தனது இடது காது மடலைச் தின்றுகொண்டிருந்தான்). காது இருந்த இடத்தில் வேறு எதையோ வைத்திருந்தான். கெஞ்சல்களோ மிரட்டல்களோ எதுவும் பயனளிக்கவில்லை. காணாமல்போனவர்களைக் கண்டுபிடிக்கும் நிபுணர் வரவழைக்கப்பட்டார். ஆனால், தான் விசாரித்துக்கொண்டிருந்தபோது தனது மகன் அமர்ந்திருந்ததாக திருமதி. ஓர்ஃபிலா சுட்டிக்கட்டிய இடத்திலிருந்து கொஞ்சம் கழிவுப் பொருள்களை மட்டுமே அந்த நிபுணரால் கண்டெடுக்க முடிந்தது. ஆனால், இப்படியான சிறுசிறு தொந்தரவுகள் அந்த நகரவாசிகளின் சந்தோஷத்தை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. தனது ஜீவாதாரத்துக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒரு நகரம் எப்படிக் குறை சொல்ல முடியும்? இறைச்சிப் பற்றாக்குறையால் பொது ஒழுங்குக்கு ஏற்பட்ட நெருக்கடி நிரந்தரமாகத் தீர்க்கப்பட்டாயிறு இல்லையா? நகரின் மக்கள்தொகை கண்ணுக்குத் தெரியாமல்போகும் அளவுக்கு வேகமாகக் குறைந்துகொண்டிருந்தது என்பது அந்த அடிப்படையான பிர்ச்சனைக்கு ஒரு பிற்சேற்கை. மக்கள் தமது வாழ்வாதாரத்தை அடைவதில் கொண்டுள்ள உறுதிப்பாட்டை அது எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. ஒவ்வொருவரிடமிருந்தும் எடுக்கப்பட்ட மாமிசத்துக்கான விலைதான் அந்தப் பிற்சேர்க்கையா? ஆனால், இப்படிப் பொருத்தமற்ற கேள்விகளைக் கேட்பது சில்லறைத்தனமான விஷயம் எனத் தோன்றக்குடும். இப்போது சிந்தனையாற்றல் நிரம்பிய அந்தச் சமூகம் நல்ல முறையில் போஷிக்கப்படுகிறது.

வெளிச்சமும் தண்ணீர் மாதிரிதான்

மொழிபெயர்ப்பு: ரவிகுமார்

தலித் வெள்யீடு, 2003.

விற்பனை உறிமை சுதர்சன் புக்ஸ், நாகர்கோயி. Ph; 04652-228445