Wednesday, September 15, 2010

இம்மனித காலத்தை பசி வெறியுடன் விழுங்குவேன்...நான் மாகாளி.


எனக்கு
கருணை முகமில்லை.
எனது நடனம் கொடூரம்
அந்நடனத்தால் உலகங்கள் அழியும்.
நட்சத்திரங்கள் வெளியில் எறியப்படும்
பூமி பிளந்து சுழலும்.

என்
இடை நெளிவுகள்
ஜலப் பிரளயத்திற்கு அழைப்பு விடுக்கிறது
என்
பாதயிழைகளோ
ஆண்களின் அரசாங்கத்தை சாய்க்கும்
என்
கைகளின் கடைசி சைகை
ஒரு பரம்பரையின்
சிசுக்களைனைத்தையும்
மரித்தே பிறக்கச் செய்யும்.

கபால மாலையணிந்த
என் கணவனின் உடல் மேல் களிநடனம் புரிவேன்.
அடங்கா வெறியுடன் கொலை புரிவேன்,

என் செந்நாக்கு
அரக்கர்களின் உதிரத்தை உருஞ்சும்.
இவ்வுலகத்தின் காலத்தை தளர்த்த
ஆவேச வெறியுடன் அழித்தலை
நான் புரிவேன்
ஆம்
என் கண்களை உற்று நோக்குங்கள்
காண்பீர்கள்
கடந்த காலம்
எதிர்காலம்
மற்றும்
பொருளற்ற சூனியத்தையும்.

நானே
கருமை
ஈரப்பதம் நிறந்த சுடுகாட்டின் கருமை,
மின்னல் தாக்கியதொரு
கருகிய மரத்தின் கருமை,
நுழையமுடியாத குகையில்
பிறக்கும் கண்களற்ற ஜீவராசிகளுக்கொத்த கருமை,
நொருங்கும் பெருங்கடலின் கருமை,
இந்நிலாவும்
நட்சத்திரங்களும் ஜனிப்பதற்கு
முன்னே இருந்த அவ்வானின் கருமை
முதலும்
கடைசியுமான
கருமை


நீங்கள் முழுமையானவர்களென்றால்
ஆத்மார்த்தமான
காதலன் காதலி போல்
உங்களுக்குள்
என்னை வரவேற்பீர்களாக

கொலைக்கள வாசத்தை
மல்லிகையின் நறுமணமாக சுவாசிக்கவேண்டும்
சாம்பல் நிறைந்த
கபாலங்களை
ரோஜா நிரவிய படுக்கையென துயில வேண்டும்
நகைக்கும் மண்டையோடுக்களைக் கண்டு
கருணையுடன் புன்னகைக்க வேண்டும்

ஏனென்றால்
வாழ்வைவிட மரணம் புனிதமானது
தொடங்குவதெல்லாம்
முடிந்தே தீரும்.





தாலியா (thalia) என்ற வெளிநாட்டு பெண் உலகில் உள்ள பெண் தெய்வங்கள் பற்றி எழுதியிருக்கிறார். தாய் வழிச்சமூகத்தின் வேராகவும், மூலக்கடவுளாகவும் காளி இருந்தாள் எனக் குறிப்பிடுகிறார். காளி பற்றின இக்கவியை அவர் எங்கிருந்து எடுத்தார் எனத் தெரியவில்லை.

ஆணாதிக்கமானது பெண்களிடத்தில் மட்டுமல்லாது பெண்கடவுளர்கள் மீதும் ஏற்றி வைத்திருக்கும் கருணை பாசம், தாய்மை, கனிவு என அனைத்திற்கும் மாகாளி சங்கு ஊதுவது போல் இக்கவிதை அமைந்துள்ளது.

மொழிபெயர்த்திருக்கிறேன்.


No comments:

Post a Comment