Saturday, November 3, 2012

சின்மயிக்கு ஞானியின் திறந்த மடல்


Gnani's Open Letter to Chinmayi - EMPHASIS  by Bruno via email



அன்புள்ள சின்மயிக்கு,


வணக்கம்.


நாம் ஒரே ஒரு முறைதான் சந்தித்திருக்கிறோம். எந்திரன் பட வெளியீடு சமயத்தில் ரஜினியின் பிம்பம் பற்றிய ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் நாம் பங்கேற்றோம். எதிரெதிர் அணியில் இருந்தோம் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. நீங்கள் எந்திரன் படத்தில் பங்கேற்றவர். நான் எப்போதும் விமர்சகன்.


பின்னர் அண்மையில் என் சிநேகிதி பத்மாவும் நீங்களும் பங்கேற்ற ஒரு சமூக மேம்பாட்டு நிகழ்ச்சியில்இளம் மாணவிகளுக்கு உற்சாகமும் தன்னம்பிக்கையும் ஏற்படும் விதத்தில் நீங்கள் பேசியதாக அவர் எனக்குச் சொன்னார். சிறு வயதில் தந்தையால் கைவிடப்பட்டபோதும் தாயின் உறுதியான மனமும் கடும் உழைப்பும் உங்களை வாழ்க்கையில் முன்னேறச் செய்ததைப் பற்றி நீங்கள் பேசி அந்தச் சிறுமிகளுக்கு வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடுவதற்கான உத்வேகத்தை அளித்ததை அறிய. மகிழ்ச்சியாக இருந்தது. பொதுவாக சினிமா பிரபலங்கள் தங்கள் இளமைக் காலக் கசப்புகளை பேசுவதோ ஒப்புக் கொள்வதோ அவற்றிலிருந்து கற்றுக் கொண்டதைப் பகிர்வதோ அரிது.


அதன்பின் இணைய உலகில் டிவிட்டர் தளத்தில் உங்களுக்கும் உங்கள் அம்மாவுக்கும் எதிராக பாலியல் அவதூறுகளை செய்வதாக சிலரைக் குற்றம் சாட்டி நீங்கள் காவல் துறையில் புகார் செய்ததால் இருவர் கைதான செய்திகளைப் பார்த்ததும்இது தொடர்பான டிவிட்டுகளைத் தேடிப் படித்தேன். எல்லாம் கிடைக்கவில்லை. கிடைத்த வரை படித்தேன்.

முதலில் உங்கள் ட்விட்டுகளைப் பற்றிப் பேசிவிடுவோம். இட ஒதுக்கீட்டுக்கு எதிரான உங்கள் குமுறல் அதில் முக்கியமானது. தாழ்ந்த மனிதர் என்று யாரும் இல்லை. உங்கள் சம்மதம் இல்லாமல் உங்களை யாரும் தாழ்த்தப்பட்டவர்களாக வைத்திருக்கமுடியாது என்று நீங்கள் சொல்வது மிகச் சரி. அப்படி யாரேனும் தாழ்த்தி வைக்க முயன்றால்அடங்க மறுஅத்துமீறுபோராடு என்றுதான் இன்று தலித் தலைவர்களும் சொல்கிறார்கள். இதைத்தான் அம்பேத்கரும் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் சொன்னார். ஆனால் அவர் அதைச் சொல்வதற்கு முன்னால் நிலைமை அப்படி இருக்கவில்லை என்பதை நீங்கள் அறியவேண்டும். தலித்துகளின் சம்மதம் இல்லாமலேதான் அவர்கள் தாழ்த்தி வைக்கப்பட்டிருந்தார்கள்.


உங்கள் அறிக்கையில் உங்கள் கொள்ளுப் பாட்டனார்கள் தமிழறிஞர்கள் மு.ராகவைய்யங்காரையும் ரா.ராகவைய்யாங்காரையும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இருவரும் தமிழர் வரலாற்றில் மறக்கக் கூடாத மாமேதைகள் என்று நண்பர் ஆய்வாளர் பொ.வேலுசாமி நெகிழ்ச்சியுடன் சொல்கிறார். எனவே வரலாறு முக்கியம் என்று உங்களுக்குத் தெரிந்திருப்பதால்தான் உங்களுடைய தமிழ்ப் பாரம்பரியத்தை வரலாற்றிலிருந்து தூசு தட்டி எடுத்துச் சொல்கிறீர்கள். வரலாறு முக்கியம். மிக மிக முக்கியம். ஆனால் முழு வரலாறும் முக்கியம். அதில் ஏதோ ஒரு பகுதி மட்டும் அல்ல.


ராகவைய்யங்கார்களின் சம கால மேதைதான் கணித அறிஞர் ராமானுஜம். மூவருமே உங்கள் டிவிட்டர் பாஷையில் ஹையங்கார்கள்தான். ராமானுஜத்தைஅன்றைய உங்கள் ஜாதி வைதீகர்கள் ஜாதிப்பிரஷ்டம் செய்தார்கள். பாரதியாவது கலகக்காரன். வைதீகர்களுக்குப் பிடிக்காததில் வியப்பில்லை. ஆனால் ராமானுஜம் அவர்களை எதிர்க்காமல்தன் கணக்கிலேயே மூழ்கிக் கிடந்தவர். அவரை விலக்கக் காரணம், ‘சாஸ்திர விரோதமாக’ அவர் கடல் கடந்து போய் வந்ததுதான். அவர் செத்தபோது சம்பிரதாயமான இறுதிச் சடங்குகளைச் செய்ய மறுத்தார்கள். அன்றைய ஹிந்து இதழ் ஆசிரியரின் முயற்சியால் ஒருவர் சடங்கு செய்ய முன்வந்தார். மொத்தமாகவே ஆறேழு பேர்தான் சுடுகாடு வரை சென்றார்கள்.


சொந்த ஜாதிக்காரனையே கடல் கடந்த குற்றத்துக்காக இப்படி நடத்திய வைதீகர்கள் அன்று தங்கள் பார்வையில் கீழ் ஜாதி என்று கருதப்பட்டவர்களை எப்படி நடத்தியிருப்பார்கள் என்று யோசியுங்கள். அந்த வரலாற்றையும் நீங்கள் தேடிப் பிடித்து படிக்க வேண்டும். ராகவைய்யங்கார்கள் ஏட்டுச் சுவடிகளைப் படித்து ரசித்து தமிழமுதில் இன்புற்றிருந்த வேளையில்இருளாண்டிகளும் அஞ்சலைகளும் என்ன நிலையில் இருந்தார்கள் என்பதும் வரலாற்றில் இருக்கிறது. உங்கள் நண்பர் ’ இயக்குநர் ராஜமௌலி டிவிட்டில் தவறாகச் சொல்வது போல அந்த நிலை தொழிலால் வந்ததல்ல. பிறப்பால் சுமத்தப்பட்டதுதான். அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக நடத்தப்படுவதற்கு அவர்களுடைய சம்மதத்தை யாரும் கேட்டது இல்லை. எதிர்த்தவர்களுக்கு சாணிப்பால் அபிஷேகமும் கசையடி அர்ச்சனையும்தான் கிடைத்தன. அந்த வரலாறுகளைத் தேடிப் பிடித்துப் படித்தால்தான்அந்த இடைவெளியை நிரப்பவே இன்றிருக்கும் இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது என்பது உங்களுக்குப் புரியமுடியும்.


மறவர் சீமைப் பொண்ணு நான்’ என்று பெருமைப்படுகிறீர்கள். உங்கள் கொள்ளுப் பாட்டனார் காலத்தில் அந்த மறவரெல்லாம் குற்றப் பரம்பரையினர் என்று அரசாங்கத்தால் முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப்பட்ட வரலாற்றையும் சேர்த்துப் படித்தால்தான்ஏன் இன்று மறவருக்கும் இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது என்பது புரியும்.


ட்விட்டரில்பேஸ்புக்கில் எல்லாம் எவரும் தங்களுக்கு ஆழமாக நேரடியாக தெரிந்திராத இட ஒதுக்கீடு போன்ற விஷயங்களைப் பற்றி டைனிங் டேபிளில் போகிற போக்கில் கமெண்ட் அடிப்பது போல எழுதும் பொறுப்பற்ற சுதந்திரம் இருப்பதே பிரச்சினை. இந்த விஷயங்களில் உங்களுக்கோ பிறருக்கோ அக்கறை இருப்பதை நான் நிச்சயம் வரவேற்கிறேன். 99.9 மதிப்பெண் வாங்கிய பிராமணப் பெண்ணுக்கு சீட் கிடைக்காத பிரச்சினைக்கும் தீர்வு தேவைதான். ஆனால் தீர்வைத் தடுப்பது இட ஒதுக்கீடு அல்ல என்பது புரியநீங்கள் நிறைய படிக்க வேண்டும். பல மொழிகளைப் படித்துத் தேர்ந்துள்ள உங்களால் இது முடியாதது அல்ல. தேவைப்படுவது நிஜமான தேடலும் ஜாதிகளுக்கு அப்பால் எல்லா சக மனிதர்கள் மீதான அன்பும் அக்கறையும்தான்.


இனி உங்கள் புகாரால் கைதாகியும் கைதை எதிர்நோக்கியும் இருக்கும் சக ட்விட்டர்களின் நடத்தையைப் பார்ப்போம். அதில் ஒருவரை நான் நேரடியாகவே அறிவேன். நான் நடத்தும் கேணி இலக்கிய கூட்டங்களுக்குத் தொடர்ந்து வருபவர். ஓராண்டாக சிறப்பாக வெளிவரும் தமிழின் அருமையான ஒரு சிற்றிதழுக்குப் பங்காற்றுபவர். உங்களுடன் சண்டையிட்ட ட்விட்டர்கள் பலர் இட ஒதுக்கீடுமீனவர் நலன் இவற்றில் எல்லாம் அக்கறையும் உணர்ச்சிப் பூர்வமான ஈடுபாடும் உடையவர்கள். உங்களுடைய சில கருத்துகள் அவர்களுக்கு எரிச்சலாகத்தான் இருக்கும்.


ஆனால் அதற்காக பாலியல் சார்ந்த அவதூறுகளை கேலிகளை அவர்களில் யார் எழுதுவதையும் யாருக்கு எதிராக எழுதுவதையும் நான் நிச்சயம் ஏற்கவில்லை. கடுமையாகக் கண்டிக்கிறேன். நீங்களோ வேறு யாரோ இட ஒதுக்கீடு பற்றியோதாழ்த்தப்பட்டவர்கள் பற்றியோமீனவர் கொலைகள் பற்றியோ புரிந்தோ புரியாமலோ எவ்வளவு அபத்தமாகப் பேசினாலும்அவையெல்லாம் எப்படி அபத்தம் என்றுதான் புரிய வைக்க முயற்சிக்கலாம். அதற்கான பொறுமை இல்லாவிட்டால் உங்களை அலட்சியம் செய்துவிட்டுப் போகலாம். ஆனால் ஒருபோதும் யார் மீதும் பாலியல் வக்கிர அவதூறுகள்கேலிகள் செய்வது நிச்சயம் தவறு.

இங்கே நான் கவலையும் கவனமும் கொள்ள விரும்பும் இரண்டு பிரச்சினைகள் இருக்கின்றன. இவற்றை நிச்சயம் சட்டத்தால் தீர்க்கமுடியாது. .

அறிவுக் கூர்மையும் திறமையும் கடும் உழைப்பும் தன்னம்பிக்கையும் உடைய உங்களைப் போன்ற பலர் இதே சமூகத்தில் வாழும் கோடிக்கணக்கான சாதாரண மக்களின் பிரச்சினைகளைஅவற்றின் வேர்களைப் பற்றி அறிந்துகொள்ளும் உழைப்பே இல்லாமல் ஒரு முழு வாழ்க்கையை இன்றைய சமூகத்தில் வாழ்ந்து முடித்துவிட முடியும். புகழும் செல்வாக்கும் தரும் வசதியில் அந்தப் பிரச்சினைகளைப் பற்றி குழப்பமான மேம்போக்கான கருத்துகளைச் சொல்லவும் முடியும். ராகவைய்யங்கார் முத்தொள்ளாயிரத்தைப் பதிப்பிக்கும்போது ஒரு பாட்டில் தனக்கு ஒரு விஷயம் இன்னும் ஆழமாகத் தெரியவில்லை என்றால் எவ்வளவு தயங்கியிருப்பார்எவ்வளவு தேடியிருப்பார்.. தேடிப் பிடித்து படிக்காமல் அவசரப்பட்டு முடிவைச் சொல்லியிருந்தால் அவரை ஆய்வுலகம் கொண்டாடியிருக்குமா ?


மறுபக்கம் இந்த பிரச்சினைகளில் உணர்வுப் பூர்வமான ஈடுபாட்டுடன் அவற்றிற்குத் தீர்வு வரவேண்டுமென்ற ஆர்வமும் கொண்டு பல்வேறு சமூக சித்தாந்தங்களில் ஓரளவு பரிச்சயமும் உடைய மிகச் சிலராக இன்று ஒரு புதிய தலைமுறை துடிப்புடன் உருவாகி வந்துள்ளது. சோகம் என்னவென்றால்அதில் சிலர்கூடவே பாலியல் வக்கிர மனசும் உடைய டாக்டர் ஜெக்கில் அண்ட் மிஸ்டர் ஹைடாக விளங்குகிறார்கள்.. உங்களை பகடி செய்த ட்விட்டர்களின் விரல்கள் கம்ப்யூட்டர் பட்டன்களில் பாலியல் வக்கிரத்தை தட்டும்போதுஅவர்கள் படித்த பெரியாரோஅம்பேத்கரோமார்க்சோசேகுவேராவோ ஏன் அவர்களுடைய தலைக்குள்ளிருந்து ஒரு எதிர்த் தட்டு தட்டமுடியாமல் போகிறது என்பதே என் இன்னொரு கவலை.


இன்றைய மீடியா சூழல்தான் காரணம். நீங்களும் சரிஉங்கள் டிவிட்டர் எதிரிகளும் சரிட்விட்டரில் எழுதிய பல வரிகளை ஒரு போதும் அச்சுப் பத்திரிகைகளில் எழுதமுடியாது. பத்திரிகை ஆசிரியர் தடுத்துவிடுவார். இணையம் தரும் சுதந்திரம் கட்டற்றது. ஆனால் அதைப் பயன்படுத்துவோருக்கு சுய கட்டுப்பாடும் பொறுப்பும் சொல்வதில் தெளிவும் தேவை. அது இல்லாத இருபிரிவினரிடையே நடக்கும் சண்டைதான் இந்த விவகாரம். இதனால் இணைய சுதந்திரத்துக்கே ஆபத்து.


உலக மகா அரசியல் சித்தாந்தங்களுடனெல்லாம் பரிச்சயம் கொண்டவர்களுக்குஅடிமனதில் பெண் மீதான பாலியல் வக்கிரம் மட்டும் ஏன் நீறு பூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டே இருக்கிறது மீடியாதான் காரணம். எத்தனை அறிவார்ந்த நூல்களைப் படித்தாலும் கேட்டாலும்சினிமாவும் டி.வியும் காமப் பிசாசுகளை உசுப்பி விடும் வேலையையே பெரும்பாலும் செய்து கொண்டிருக்கின்றன. அதனால்தான் மற்றபடி நல்லவர்களாக தெரிபவர்கள் கூட இணைய முகமூடி மாட்டியதும் நிர்வாணக் குத்தாட்டம் ஆடுகிறார்கள். அவர்கள் தலைக்குள்நீங்கள் பணி புரியும் வணிக சினிமா துறை விதைத்த காமவித்துகள்குத்தும் கூரிய முட்களோடு தழைத்துக் கொண்டே இருக்கின்றன.


நீங்கள் ஆபாசப் பாடல்களைப் பாடியிருப்பதால்,உங்களுக்கு எதிராக ஆபாசமாக எழுதினால் என்ன தப்பு என்ற அராஜகமான வாதத்தை நிச்சயம் நான் ஏற்க மாட்டேன். ஆனால் அறிவுக்கூர்மைமொழிப் புலமை எவ்வளவு இருந்தாலும்என்ன பாடுகிறோம் என்பதை முடிவு செய்யும் தேர்வைக் கறாராக செய்யாமல் வாய்ப்புபணம்புகழ் என்ற அளவுகோல்களை மட்டுமே பயன்படுத்தி நீங்கள் பாடிக் கொண்டிருக்கும் சினிமா பாடல்களின் விளைவுகள் என்ன என்ற கேள்வியை நீங்கள் புறக்கணிக்க முடியாது.


ஐந்தடி வளர்ந்த ஆட்டுச்செடி நான். என்னை மேய்ந்துவிடு மொத்தம்” என்று ஒரு பெண் பாடுவது ஆண் மனதில் என்ன உணர்ச்சியை எழுப்பும் ? ‘உன்னுள்ளே நுழைஞ்சதாரோபையக் குழைஞ்சதாரோ ?’ என்ற வரிகளை எழுதியவருக்கு பெரும் பணமும் சமூக அந்தஸ்தும் தரும் இதே சமூகம்அந்த வரிகளின் அர்த்தத்தை ஒருவர் ட்விட்டரில் எழுதினால் கழுத்தில் கை வைத்து சைபர் கிரைமுக்கு அல்லவா தள்ளிக் கொண்டு போகும் ? ‘தினம் ஆடை சண்டையிலே முதலில் தோற்பவள்‘ என்று தன்னைப் பற்றி பாடும் பாத்திரம் அதே பாட்டில் நீ இடம் சுட்டிப் பொருள் விளக்கு’ என்று சொல்லும்போது எந்த இடத்தைஎன்ன பொருளைச் சொல்கிறாள் என்ற சூட்சுமம் ஆபாசமாக எழுதும் ட்விட்டர்களுக்குத் தானே அல்வாவாக இனிக்கும். அது ராகவைய்யங்கார்கள் படித்த தமிழ் இலக்கணத்திற்கு அப்பாற்பட்டதல்லவா?


இந்தப் பாடல்களைக் கேட்டு வளரக் கூடிய ஒரு சிறுவன்நாளை க்வாண்ட்டம் பிசிக்ஸ் படித்து ஐஎஸ்ஆர்ஓ விஞ்ஞானியானாலும் அவன் அடிமனதில் பதிந்துவிட்ட பாலியல் வக்கிரம்வேறொரு சின்மயியுடன் சண்டை வரும்போது வெளிப்படத்தான் செய்யும். பாடுவது என் தொழில். கொடுப்பதைப் பாடுகிறேன் ‘ என்று வாதாட இடமில்லை. அந்தப் பாட்டுஅதைக் கேட்கும் மனங்களை இழிவான மனநிலைக்கு அழைத்துப் போனால்அதற்கான பொறுப்பில் உங்கள் பங்கும் இருக்கிறது. ஒருவரின் சம்மதம் இல்லாமல் அவரை யாரும் தாழ்த்தப்பட்டவராக்கிவிடமுடியாது என்பது போலவேஉங்கள் சம்மதமில்லாமல் யாரும் உங்களை இழிவான பாடலகளைப் பாட வைத்துவிடமுடியாது. அப்படிப் பாட மறுத்ததால் வாய்ப்புகளை இழந்த உன்னிகிருஷ்ணன் ஒன்றும் நலிவுற்று ஓய்வூதியம் வாங்கவேண்டிய நிலைக்குப் போய்விடவில்லை.


சமூகத்தில் நாம் ஒவ்வொருவரும் மறைமுகமாகவோ நேரடியாகவோ இன்னொருவர் வாழ்க்கையோடு சம்பந்தப் பட்டிருக்கிறோம். அந்தப் பொறுப்பை நாம் உதறிவிடமுடியாது. உங்கள் மீது பாலியல் அவதூறுகளை வீசுபவர்களின் மன வக்கிரங்கள்காலம் காலமாக நம் ஊடகங்களால் விதைக்கப்பட்டவை. அதற்காக நியாயமாகவே பதறும் நீங்கள்அறிந்தோ அறியாமலோ அதே விஷ விதைகளை தூவிக் கொண்டிருக்கிறீர்கள். அவை விருட்சங்களாகும்போது உங்கள் மகளை அழைத்துக் கொண்டு நீங்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கும் நிலை வரலாம். அல்லது உங்கள் மகன் மீது வேறொரு தாய் புகார் கொண்டு வரலாம்.


இந்தப் பிரச்சினைகளை நாம் சட்டத்தால் மட்டும் திருத்திவிடமுடியாது. ஒருவரோடொருவர் விவாதிப்பதன் மூலம் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அடுத்த பாட்டைப் பாடும் முன்பு வரிகளின் அர்த்தத்தை யோசியுங்கள். அவற்றுக்கு என்ன மாதிரி காட்சி அமைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று யோசியுங்கள். அது உங்களுக்கு உடன்பாடானதுதானா என்று யோசியுங்கள். அடுத்த ட்விட்டை எழுதும் முன்பு அந்த விஷயம் பற்றிய உங்கள் புரிதல் முழுமையானதுதானா என்று யோசியுங்கள். இல்லையென்றால் முதலில் புரிந்துகொண்டு அப்புறம் விமர்சியுங்கள். நீங்கள் மட்டுமல்லஉங்களையும் இன்னும் பலரையும் கீழ்த்தரமாக பகடி செய்த பதிவர்களும் கூடதாங்கள் படித்த பெரியாரும் மார்க்சும் அம்பேத்கரும் ஏன் தங்கள் மூளைக்குள் பதிந்தார்களே ஒழிய மனங்களில் படியவில்லை என்பதை யோசிக்கவேண்டும் என்றே வேண்டுகிறேன். நாம் எல்லாரும் வெறும் செராக்ஸ் மெஷின்களல்ல.


உலகின் மிகச் சிறந்த நீதிமன்றம் நம் மனசாட்சிதான். அதையே உங்களுக்கும் சரவணகுமாருக்கும் ராஜனுக்கும் இன்னபிறருக்கும் பரிந்துரைக்கிறேன். இந்த மோசமான சூழலிலிருந்து நீங்கள் அனைவரும் மீண்டு வர வாழ்த்துகிறேன்.


அன்புடன் ஞாநி

கல்கி 3-11-2012



4 comments:

  1. அப்படிப் பாட மறுத்ததால் வாய்ப்புகளை இழந்த உன்னிகிருஷ்ணன் ஒன்றும் நலிவுற்று ஓய்வூதியம் வாங்கவேண்டிய நிலைக்குப் போய்விடவில்லை.///

    இதோ உன்னி கிருஷ்ணன் பாடிய சில வரிகள்...

    எனது உதடுகள் உந்தன் மார்பில் போகும் ஊர்வலங்கள்
    நகங்கள் கீறியே முதிகில் எங்கும் நூறு ஓவியங்கள்...
    எங்கு தொடங்கி எங்கு முடிக்க
    எதனை விடுத்தது எதனை எடுக்க..
    -----
    இதழால் உன் இதழால் என் வெட்கம் துடைத்து விடுவாயா
    அங்கத்தில் வெக்கங்கள் எங்கெங்கு சொல்வாயா
    இன்பமா பேரின்பமா அது வேண்டுமா
    -----
    காமத்தின் வாதத்தில் நியாமில்லை
    பேரின்பம் காணாத பெண் ஒன்றும் பெண்ணில்லை
    -----
    காலையில் எழுந்தால் காபிக்கு பதிலாய் சிகேரட்டே தோன்றியதே
    கெட்ட கெட்ட சேனல் தேடி ரிமோட் பட்டன் தேய்கிறதே
    கான்வென்ட் பெண்கள் சாலையில் போக கண்கள் எங்கும் மேய்கிறதே
    ஆயிரத்தில் ஒருத்தியை அவளின் முகம் தோன்றியதே
    ஆயிரத்தி ஒன்றாய் அவளின் தங்கை இருக்கிறதே
    -----------------------------------------------------------------------------------------------------------

    ReplyDelete
  2. ஒன்றும் தெரியாமல் அரை குறையாக தெரிந்து கொண்டு தான் தோன்றி தனமாக பேசுபவர்கள் இக்கட்டுரையே நன்கு படித்து உணர்ந்து கொண்டால் சரி

    ReplyDelete
  3. சாதி இரண்டொழிய வேண்டும் என்ற இந்த 21 ஆம் நுற்றாண்டில் சாதி தனை முன்னிலை படுத்துபவர்கள் மனிதர்கள் தான.

    மேடும் பள்ளமுமாக உள்ள ஒரு நிலத்தினை பாகுபடுத்த மேட்டை வெட்டி பள்ளத்தில் போடுவது இல்லை, பள்ளத்தில் மண்நிறைத்து மேட்டிற்கு இணையாக சம நிலை படுத்துவது இதை விடுத்து மேட்டிருக்கும் பள்ளத்திற்கும் இணையாக மண் கொட்டினால் என்றுமே சம நிலைப்படாது.

    தயவு செய்து இட ஒதுக்கீட்டை ஆதரிக்கவில்லை என்றாலும் சரி அதை தவறு என்று ஒரு போதும் சொல்லி விட வேண்டாம் 1000 நன்றிகள்

    ReplyDelete
  4. I completely agree with the need for reservations considering the history of India. But since there is no economic threshold, reservations have been misused by the affluent among the socially backward community. I studied engineering in eighties and I have had several classmates who were very rich - mill owners and prominent businessman - that took advantage of the reservation. I was also very happy that many of my other class-mates that were beneficiaries of quota came from very poor background in addition to being socially backward. I sincerely hope reservations benefit truly under privileged. When MGR tried to institute an income limit for the socially backward, it was widely opposed and scrapped. Mr Gnani's analysis does not address this at all and he seems to be as blindsided and selective as Chinmayi and others. Let us also not forget that reservations have brought down the overall standards.

    ReplyDelete