தேர்தல் செய்திகளோ, கிரிக்கெட் போட்டிகளோ இல்லாத நாள்களில் பரபரப்புச் செய்திகளுக்குப் பஞ்சம் வந்தால் என்ன செய்வது என்று தவித்துக்கொண்டிருந்த ஊடகங்களுக்கு இருக்கவே இருக்கிறார் என்.ஜி.ஓ காந்தியவாதி அண்ணா ஹசாரே எழுபத்துமூன்று வயதாகும் அவர் காந்தி இறக்கும்போது பத்து வயதுச் சிறுவனாக இருந்திருப்பார். எனவே, தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, சிறைசென்று சிப்பி ஏந்திய தியாகியாகியிருக்க வாய்ப்பில்லை. ‘இரண்டாவது சுதந்திர போராட்டம்’ என்று 1970களில் அழைக்கப்பட்டதும் இண்டிரா காந்தியால் அவசரனிலை பிரகடனப்படுத்தப்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக இருந்ததுமான ஜெயப்பிரகாஷ் நாராயணின் ‘ஊழல் எதிர்ப்புப் போராட்ட’த்திலும் அவர் கலந்துக்கொண்டதில்லை. அப்போதுதான் அவர் இந்திய இராணுவப் பணியிலிருந்து (ஜவான்) ஓய்வுபெற்று மகாராஷ்டிரத்திலுள்ள தனது கிராமத்துக்குத் திரும்பி வந்திருந்தார். அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கும் மது அருந்துபவர்களுக்கும் எதிரான ஓர் இயக்கத்தைத் தொடங்கினார். ‘மதுவிலக்கு’ என்னும் ஒரே குறிக்கோளில் மட்டுமே அவர் காந்தியின் பெயருடன் சம்பந்தப்பட்டிருக்கிறார். மர்றபடி, தனது குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு வன்முறையைப் பயன்படுத்தத் தயங்காதவராகவும் இருந்திருக்கிறார். ‘என்.ஜி.ஓ.னிதி’யுடன் தனது கிராமத்தை ‘முன்மாதிரி கிராமமாக’ ஆக்க முயன்றுகொண்டிருக்கும் அவர், கிராம சமுதாயத்திலுள்ள சாதிய, வர்க்க, பாலின ஏற்றத்தாழ்வுகளைச் சிறிதும் தட்டிக் கேட்டதில்லை.
அரசாங மட்டத்தில் இலஞ்சம் ஊழல் என்பது 1991ஆம் ஆண்டுவரை இந்திய ஊடகங்களால் மிகவும் முக்கியத்ஹ்டுவம் கொடுக்கப்பட்டு வந்தது. தொழில், வர்த்தகம், ஆகியவற்றைத் தொடங்க அன்று இந்திய அரசாங்கத்தால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த கொள்கைகளும் விதிமுறைகளும்தான் இலஞ்கமும் ஊழலும் பெருகியதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. ‘லைசென்ஸ் ராஜ்’ என்று அழைக்கப்பட்டு வந்த அரசியல்-பொருளாதார முறை ஒழிக்கப்பட்டுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்னும் கருத்து (சி. ராஜகோபாலாச்சாரியின் தலைமையிலிருந்த சுதந்திரக் கட்சி 1960களில் சொல்லி வந்த கருத்து) பரவலாக்கப்பட்டு வந்தது. அந்தக் கருத்தைக் கொண்டிருந்தவர்கள் மகிழும் வகையில் 1991இல் நரசிம்மராவ் அரசாங்கம் நவ-தாராளவாத புதிய பொருளாதாரக் கொள்கையைப் புகுத்தி உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் கொள்ளைக்காரர்களுக்கு இந்தியாவின் கதவுகளை அகலத்திறந்ஹ்டுவிடும் பணியைத் தொடங்கிவைத்தார். அந்தத் ‘டிருப்பணி’ இடையூறு இன்றி நடப்பதற்கு வேண்டி, தனது அரசாங்கத்திற்கு ‘காப்பு’ செய்ய வேண்டிய தேவை அவருக்கு ஏற்பட்டது சிபு சோரன் உல்ளிட்ட ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிச்யின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் ஆதரவு விலைக்கு வாங்கப்பட்ட செயலை எதிர்த்து அண்ணா ஹஸாரேவோ,அவரது ஆதரவாளர்களோ எந்தப் போராட்டத்தையும் நடத்தவில்லை. நரசிம்மராவின் ஆட்சிக்கு முன் போஃபோர்ஸ் புகழ் ராஜிவ் காந்தி ஆட்சி நடத்தியபோதும் அண்ணாஹஸாரே வாய் திறக்கவில்லை. அரசாங்கத்தின் யர் மட்டத்திலுள்ளவர்களின் ஊழலுக்கு எதிராக வி.பி.சிங் மேற்கொண்ட துணிச்சலான நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தது, இப்போது அண்ணாஜிக்கு வாழ்த்துப் பா பாடிக் கொண்டிருகும் சங் பரிவாரம்.
நவ தாராளவாதக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட ஓராண்டுக்குள், அதன் பலனை மற்ற அணைவரையும் விட அதிகமாகத் துய்த்தவர் பங்குச் சந்தை மோசடிக்குத் துணைபோன விஜயா வங்கியின் தலைவர் தற்கொலை செய்துகொண்டார். ஹர்ஷத் மேத்தாவின் நிறுவனமொன்றில் தனது மனைவியின் பெயரில் முதலீடு செய்தவர் ப.சிதம்பரம். இந்த உண்மை அம்பலப்பட்டதும் அவர் பதவி விலகினார் என்றாலும் பின்னர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் முதலில் நிதி அமைச்சராகவும் பின்னர் உள்துறை அமைச்சராகவும் சேர்க்கப்பட்டார். பங்குச் சந்தை விவகாரத்தில் அவர்மீது விசாரணை நடத்டவேண்டும் என்று ஒருவர் நீந்திமன்றத்தில் இரு மனுத் தாக்கல் செய்தபோது அவருக்கா வழக்காட முன்வந்தவர் அருண் ஜெட்லி!. இரத்தம் தண்ணீரை விடக் கெட்டியானது. எனவே, வர்க்கப்பாசம், கட்சிப் பற்றை இரத்து செய்துவிட்டது. அண்ணா ஹஸாரேவின் ‘லோக் பால்’ திட்டத்தை விவாதித்து இறுதி செய்வதற்கான குழுவில் மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் ப.சிதம்பரம்.
ஏறத்தாழ ப.சிதம்பரத்தின் பாணியைப் பின்பற்றி சந்தை விலைகளைவிடக் குறைவான விலைக்குத் தனது ‘சிநேகிதிக்காக’ பங்குகளை வாங்கிய சசி தாரூர் (எத்தகைய அகம்பாவம் பிடித்த மனிதர்), அந்த விஷயம் அம்பலப்பட்டதும் பதவி விலக நேர்ந்தது. பங்குச் சந்தை விவகாரத்தில் பதவி விலகிய ப. சிதம்பரத்தின்மீதும் சசி தாரூர் மீதும் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்படவில்லை. சுரேஷ் கல்மாடிமீது சிபிஐ விசாரணை நடக்கிறது என்றாலும் அவர் கைது செய்யப்படவில்லை. ஆ.ராசா கைது செய்யப்பட்டதற்குக் காரணம், 2ஜி அலைக்கற்றை ஊழலில் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பின் அளவு மிகப் பெரியது என்பதா, அவர் வேறு கட்சியைச் சேர்ந்தவர் என்பதா, முதலமைச்சர் மு. கருணாநிதி கூறுவதுபோல, அவர் தலித் சாதியைச் சேர்ந்தவர் என்பதா? அண்ணாஜிதான் விளக்கம் தரவேண்டும்.
நவ-தாராளவாதக் கொள்கையை நரசிம்ம ராவ் அரசங்கத்தைக் காட்டிலும் இன்னும் முனப்பாகவும் மூர்க்கத்த்னமாகவும் நடைமுறைப்படுத்தி வரும் மன்மோகன் சிங்-ப.சிதம்பரம்-பிரனாப் முகர்ஜி-சோனியா காந்தி குழுவினரின் கொள்கைகளை இந்த மகாராஷ்டிர காந்தி ஒருபோது தட்டிக் கேட்டதில்லை.
‘சாகும்வரை உண்ணானோன்பு’ ஒருப்பதைப் பல முறை நிகழ்த்திக் காட்டியதில் மட்டுமே காந்திக்கு ஹஸாரேவுக்கும் ஒற்றுமை உள்ளது. இருவருக்குமுள்ள முக்கிய வேறுபாடு சங் பரிவாரத்தைச் சேர்ந்த ஒருவரால் காந்தி படுகொலை செய்யப்பட்டதும் அதே சங் பரிவாரத்தைச் சேர்ந்தவகளாலும் அவர்களது நட்புச் சக்திகளாலும் ஹஸாரே வெகுவாகப் புகழப்படுவதும்தான் ஹஸாரேவின் மிக அண்மைய ‘சாகும் வரை உண்ணா நோன்பு’ நடந்துகொண்டிருந்த ஜந்தர் மந்தருக்கு வருகை தந்து அவரை உச்சிமோந்து பாராட்டியவர்களில் பாபா ராம் தேவ், ஸ்ரீஸ்ரீரவிஷங்கர் ஆகிய இரு சங் பரிவாரத் ‘துறவி’களும் அடங்குவர். உண்மையான சமூக ஆர்வலர்களான அக்னிவேஷ், மேதா பட்கர் ஆகியோர் இனியேனும் எச்சரிக்கையோடு இருப்பார்கள் என எதிர்பர்க்கலாம்.
உச்ச நீதிமன்றத்தால் பண்டைய ரோமப் பேரரசை ஆண்டு வந்த கொடுங்கோலன் நீரோ மன்னனுடன் ஒப்பிடப்பட்ட நரேந்திர மோடியின் ஆட்சியைப் பாராட்டித் தீர்த்திருக்கிறார் ஹஸாரே. அதேபோல், பால்தாக்ரேவிடமிருந்து பிரிந்து சென்று மகாராஷ்டிர நிர்மாண் சமிதி என்னும் தனிப் பட்டாளம் வைத்திருக்கும் ராஜ் தாக்ரேவுக்கும் புகழாரம் சூட்டியிருக்கிறார். நேர்மையான ஊழலற்ற நிர்வாகம் நடத்துகிறவர், தொழில் வளர்ச்சியில் குஜராத்தை இந்தியவின் ‘நம்பர் ஒன்’ ஆக ஆக்கியவர் என்று இந்திய மத்தியதர வர்கத்தினரால் போற்றப்படும், அவர்களது இலட்சிய நாயகனாக இருக்கும் மோடியின் கரங்களில் உள்ள வகுப்புவாதக் கறையோ, குஜராத் கிராமங்கள் மிகக் கொடூரமான சுரண்டலுக்கு ஆளாவதோ, அங்கிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் நகர்புறங்களுக்கு இடம்பெயர்ந்து செல்வதோ, அவர்களது நிலங்கள் அபகரிக்கப்படுவதோ ஹஸாரேவுக்கு ஒரு பொருட்டே அல்ல. ராஜ் தாக்கரே, மோடி போன்றோரின் கொள்கைகள் சிறந்தவை, ஆனால் வன்முறை வழிமுறைகள் தனக்கு உகந்தவை அல்ல என்று கூறியுல்ளார் ‘காந்தியவாதி’ ஹஸாரே. அந்த இருவரின் கொள்கைகளிலிருந்தே வன்முறை உதிக்கின்றது என்பது அவருக்கு உண்மையிலேயே புரியவில்லையா?
‘இலஞ்சம் ஊழலுக்கு எதிராக’ அண்ணா ஹசாரே கடந்த காலத்தில் நடத்திய போராட்டங்கள் அனைத்தும் இந்தியாவிலுள்ள முதலாளீயச் சுரண்டல் அமைப்பை நிர்வகிக்கின்ற பொறுப்பிலிருந்து ஒரு கட்சியைச் சேர்ந்தவர்களை நீக்கிவிட்டு மற்றொரு கட்சியைச் சேர்ந்தவர்களை நீக்கிவிட்டு மற்றொரு கட்சியை சேர்ந்தவர்களை அந்த இடத்தில் அமர்த்த உதவியிருக்கின்றதே தவிர, வேறு எதையும் சாதிக்கவில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக இருப்பது மகாராஷ்டிரத்தில் அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனம் என்ரான் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு எதிராக அண்ணா ஹஸாரே தொடங்கிய போராட்டம். இதில் ஆதாயமடைந்தது பாஜக-சிவ சேனைக் கும்பல்தான்.
தடா, பொடா, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் போன்ற மிகக் கொடூரமான சட்டங்களுக்கு நிகரான ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை விலைக்கு வாங்கத் தன்னிடம் 50—60 கோடி ரூபாய் உல்ளது எனக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சதீஸ் ஷர்மா கூறினார் என்று இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் அமெரிக்க வெளியுறவு அமைச்சருக்கு அனுப்பிய செய்தியை விக்கிலீக்ஸிடமிருந்து பெற்று ‘தி ஹிந்து’ நாளேடு கடந்ஹ்ட மார்ச் 17 அன்று வெளியிட்டதே, அது குறித்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஹஸாரே எந்தக் கோரிக்கையையும் வைக்கவில்லை.
ஒரிஸ்ஸா தொடங்கி ராஜஸ்தான் வரை மத்திய இந்தியாவின் கனிவளங்கள் ஒட்டுமொத்தமாகச் சுரண்டப்பட்டு, பசுமைப் பகுதிகள் அனைத்தும் பாலைவனங்களாக ஆக்கப்படுவதும் முக்கிய பிரச்சனை அல்ல. இந்தப் பிரச்சனைகளைக் கையில் எடுத்துப் போராடுபவர்களூக்கு ஆதரவாக, படித்த மத்தியத்தர வர்க்கத்தினர் மெழுகுவத்திப் ராட்டம் எதையும் நடத்த மாட்டார்கள். ‘நாங்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் திருடர்கள்’ என்னும் வாசகம் பொறித்த துணிகளைத் தலையில் கட்டிக்கொண்டு வந்த மத்தியதர வர்க்க இளைஞர்களையும் இளம் பெண்களையும் ஊடகங்கள் காட்டின. தன்க்கள் தேசபக்தியைக் காட்ட்வதற்கு ‘உலககோப்பைக் கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு கிடைத்த வாய்ப்பை அவர்கள் நழுவவிடுவார்களா என்ன? இலஞ்சம் ஊழலில் திளைத்தவர்கள்தான் பெரும்பான்மையான சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக முடிகிறது என்பது உண்மைதான். எனினும், அதற்கான மாற்றுகளை உருவாக்குவதில் இந்த இளைஞ்ர்கள் காட்டிய அக்கறை என்ன? தேர்தல் முறைகளில்ன் (விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் போன்ற) சீர்திருத்தங்களையாவது கொண்டுவர்ப் போராடலாமே. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு கூடாது என்று கூறும் அதே படித்த மேல்தட்டு வர்க்கங்கள்சி சேர்ந்தவர்களான இவர்களில் எத்தனை பேர், தங்கள் வாகனத்தை நிறுத்தும் ‘டிராஃபிக் கான்ஸ்கபிளுக்கு’ இலஞ்சம் கொடுக்காமல் வந்திருப்பார்கள். சுயநிதிக் கல்லூரிகளில் கொழுத்த கட்டணம் கட்டாமல் பட்டம் பெற்றிருப்பார்கள்? ஐந்து நட்சத்திர மருத்துவமனைகளில் மருத்துவச் சோதனைகள் வேண்டாம் எனச் சொல்லியிருப்பார்கள்? இவர்கள் அனுபவிக்கும் சலுகைகள், சிறப்புரிமைகள், சொகுசுகள் எல்லாம் நவ-தாராளவாதப் பொருளாதாரத்தின் விளைச்சல்கள்தானே?
இது ஒருபுறமிருக்க, அண்ணா ஹஸாரேவின் அண்மைய நாடகத்துக்குக் கதை வசனம் எழுதித் தந்தவர்கள் மன்மோகன்சிங்-ப.சிதம்பரம் கோஷ்டியினர்தான் என்னும் முடிவுக்குத்தான் நாம் வரவேண்டியுள்ளது.
காமன்வெல்த் விளையாடுப் போட்டி ஊழல், 2ஜி அலைக்கற்றை ஊழல், சதிஷ் ஷர்மா விவகாரம் போன்ற அடுத்தடுத்த ஊழல் குற்றச்சாட்டுகளை மன்மோகன் சிங் அரசாங்கம் எதிர்கொண்டிருந்தபோது, கடந்த மார்ச் மாதத் தொடக்கத்தில், இலஞ்சம் ஊழல் தொடர்பான புகார்களைப் புலன் விசாரணை செய்வதற்கான ஓர் அமப்பை உருவாக்காவிட்டால் ‘சாகும்வரை உண்ணா நோன்பு’ இருக்கப் போவதாக அண்ணா ஷஸாரே அறிவித்தார். ஆனால், அவரது சாவையும் உண்ணானோன்பயும்விட முக்கியமான செய்தித் தீனிகள் ஊடகங்களில் வாய்களுக்கு அப்போது கிடைத்து வந்தன: எகிப்தியப் புரட்சி, ஜப்பான் சுனாமி, உலக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகியன. எனவே அண்ணா ஹஸாரேவின் அறிவிப்பை அவை காதில் (வாயில்) போட்டுக் கொள்ளவில்லை.
’அனலிடிகல் மந்த்லி ரெவ்யூ’ என்னும் ஆங்கில ஏடு (ஏப்ரல் 2011 இதழ்) சில சுவாரசியமான தகவல்களைத் தருகிறது: மார்ச் 14 முதல் 21 வரை, இந்திய வட்டாரட்ங்களிலிருந்து கூகிள்நியூஸ் இணையதளம் திரட்டி வெளியிட்ட கட்டுரைகளில் மூன்றே மூன்று கட்டுரைகளில் மட்டுமே அண்ணா ஹஸாரேவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. ‘லோக் பால்’ விஷயமாக விவாதிக்கப் பிரதமர் அலுவலகத்திலிருந்து தனக்கு அழைப்பு வந்ததாக அண்ணா ஹஸாரே 23ம் ட்தேதி, அறிவித்தார் அழைப்பு வந்த அன்றே அவர் பிரதமன் அலுவலகத்துக்குச் சென்றார். பிரதமரின் அலுவலகமும் ‘லோக் பால்’ சட்டத்தை இயற்றூவது குறித்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அறிவித்தது. மார்ச் 24 முதல் 51 வரை இந்திய வட்டாரங்களிலிருந்து திரட்டி கூகிள் நியூஸ் இணையதளம் வெளியிட்ட கட்டுரைகளில் 42181 கட்ட்ரைகளில் அண்ணா ஹஸாரேவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்பிறகுதான் ஏப்ரலில் நாடகத்தின் கடைசிக் ஆட்சிகள்- அண்ணா ஹஸாரேவின் ‘சாகும்வரை உண்ணா நோன்பு’, பாலிவு நடிகர்களின் ஆதரவு, கோவை, மும்பை டெல்லி போன்ற நகரங்களில் மேட்டுகுடி மக்களில் மெழுகுவர்த்திக் உட்டங்கள், ‘உண்ணா நோன்பைக் கைவிடுமாறு சுஷ்மா ஸ்வராஜ், சோனியா காந்தி முதலியோரின் ‘நெஞ்சை உருக்கும் வேண்டுகோள்கள்’ ஆகியவற்றை இந்திய மக்களுக்கு காட்டின ஊடகங்கள்.
‘லோக் பால்’ என்னும் மக்கள் நீதிமன்றத்தை அமைப்பதற்கான சட்ட முன்வரைவை உருவாக்குவதற்கான (121 கோடி மக்கள் உள்ள இந்தியாவில்) ‘மக்கள் பிரதிநிதிகளை’யும் ஹஸாரேவே நியமித்துவிட்டார். அரசாங்கம், நீதித்துறை முதலியவற்றில் உள்ளவர்கள் இலஞ்சம் வாங்குவதும், ஊழலில் ஈடுபடுவதும் இனி தடுக்கப்பட்டுவிடப் போகின்றன. இந்தியாவில் இனி கறை படியாத முதலாளியம் இருக்கப் போகிறது. டாட்டாக்களும் அம்பானிகளும் புனிதர்களாகப் போகின்றனர். மன்மோகன் சிங் – ப.சிதம்பரம் குழுவினரை பொருத்தவரை, இனி இந்தியாவில் ஒரே ஒரு குற்றம்தான் இருக்கும் இலட்சக்கணக்கான மக்கள் ஏழைகளாக இருப்பது ஒரு குற்றமல்லவா?
- உயிர் எழுத்து, மே 2011 இதழ்