பக்.30
...... ஆக அவர்கள் எதையும் வீணடிப்பதில்லை என்று எண்ணினேன். எப்படியோ காட்டில் ஒரு துண்டுக் குப்பை கூட இல்லை. குப்பை என்பது ‘நாகரிகமடைந்த’ சமூகத்தின் அடையாளம். ஏராளம், ஆடம்பரம், அதன்பிறகு முடையும் அசிங்கமும். ஒரு ‘நாகரிக மனிதன் கோவாவின் கடற்கரைகளையும் பனிபடந்த ரோடாங் கணவாயையும் கூடச் சீரழித்து விடுவான். இமாலயம் மற்றும் அண்டார்டிகாவின் பனிப்பாறைகள் கூட விட்டுவைக்கப்படவில்லை. பாலிதீன் என்பது கானகத்தில் ஒரு அரிதான பொருள். கெரில்லாக்கள் அதைக் காலைக்கடனுக்கான நீரைக் கொண்டு செல்வதற்காகவோ அல்லது தங்களுடைய புத்தகங்களை மழையிலிருந்து பாதுகாப்பதற்காகவோ பயன்படுத்துகின்றனர்.
பழங்குடிகள் ஆற்றுநீரையே பருகுவதால், கெரில்லாக்கள் ஆறுகளை மாசுப்படுத்துவதில்லை. அவர்கள் இயற்கையான கழிப்பறைக் காகிதங்களையும் இலைகளையுமே பயன்படுத்துகின்றனர். சுற்றுலாத் தொழில் என்கிற கொள்ளை நோய் இன்னும் இங்குவந்து சேரவில்லை. இல்லையென்றால் எல்லாவகையான கேடுகளும் வந்து, கானகத்தையும் இயற்கையையும் சமூகச் சூழலையும் விஷமாக்கியிருக்கும். ரிஷிகேஷ், அரிதுவார், பனாரஸ், அலகாபதைப் போன்று வனங்கள் புனிதத் ஸ்தலங்களாக அறிவிக்கப்படாதிருப்பதற்காக நான் கடவுளுக்கோ அல்லது அவரைப் போன்ற ஒருவருக்கோ நன்றி கூற வேண்டுமென்று எண்ணுகிறேன். இல்லையென்றால் தூய்மையான குப்பைகள் மலைகளைப் போலக் குவிக்கப்பட்டிருக்கும்.
நாகரிகமடைந்த கலாச்சாரமிக்க மக்கள் இன்னும் இங்கு வந்து சேரவில்லை என்பது உண்மையிலேயே நல்ல விஷயம்தான். ஏனெனில் தில்லி மற்றும் கல்கத்தாவில் உள்ளதைப் போன்ற விபச்சார விடுதிகள் இங்கும் தோன்றியிருக்கும். என்னுடைய பயணத்தின்போது என்னை மிகவும் வியப்புக்கு உள்ளக்கிய விஷயம் என்னவென்றால், பழங்குடிகள் தங்களுடைய ஆறுகளுக்குக் கேடு செய்வதும் இல்லை அவற்றை விழுந்து விழுந்து வணங்குவதுமில்லை, அவர்கள் பாவங்களைச் செய்வதுமில்லை, அல்லது பாவங்களைக் கழுவிப் பிராயச்சித்தம் தேடிக் கொள்வதற்காக பூஜை சடங்குகளைச் செய்வதுமில்லை. அவர்கள் சிக்கலானவர்களோ நுணுக்கமிக்கவர்களோ இல்லை.
அவர்கள் நாகரிக சமூகத்தின் திருட்டு, ஊழல், ஏமாற்று ஆகியவற்றிலிருந்து விடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் ஆடைகளைக் கூட மிகக் குறைவாகவோ அல்லது சுத்தமாக ஏதும் அணியாமலும் இருக்கிறார்கள்; ஆகவே அவர்கள் நாகரிகமிக்கவர்களின் / நாகரிகத்தின் கருத்துக்களான நிர்வாணம், கற்பு மற்றும் ஆபாசம் ஆகியவற்றிலிருந்து தூர விலகியிருக்கின்றனர். அவர்கள் தங்களுடைய குளியலறைக்கு நிர்வாணமாகச் செல்ல வேண்டியதில்லை. ஏனெனில் நிர்வாணம் என்கின்ற கருத்தையே அவர்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. எப்படியோ மாசு மற்றும் தூய்மை பற்றிய என்னுடைய சொற்பொழிவை ஒரு ஆதாரத்தைக் கூறி நிறைவு செய்கிறேன். இந்த மக்கள், கியோட்டோ கூட்டு ஒப்பந்த நடவடிக்கையைப் பற்றி எதுவும் கேள்விப்பட்டிருக்கவில்லை. அதேபோல இத்தகைய கருத்துக்களையும் மோதல்களையும் புரிந்துகொள்வதற்கு ஏதுவான புறச்சூழலும் அங்கு நிலவவில்லை என்றே சொல்லவேண்டும்…..
சத்நாம், வனம் எழுதும் வரலாறு, தமிழில் பிரசன்னா, விடியல் பதிப்பகம், 2010