Wednesday, January 26, 2011

நாத்திகர்கள் ஊரில் மழை பெய்யாது


வேத காலத்தில் நாத்திகன் என்றால் வேதத்தை ஒப்புக் கொள்ளாதவன் என்று பொருள். மீமாம்ச நூல்கள் இவர்களை மீமாம்சத்திற்கு எதிரானவர்கள் என்றும் குறிப்பிடுகிறது. யக்ஞங்களாலும் பாசங்களாலும் எவ்விதப் பயனுமில்லை என்று இவர்கள் வாதிட்டார்கள்.

இதைக் குறித்த கதை ஒன்று:

ஒரு சார்வாகன் (லோகாயதவாதி) ஒரு குடிசையின் கூரைமீது ஏறி நின்று கொண்டான். அவ்வூரில் இறந்தவர்களுக்குத் தீ வளர்த்து அவி சொரிந்து பிண்டம் ஊட்டிய ஒரு புரோகிதனை அழைத்துத் தெருவில் ஓர் இலையைப் போடச் சொன்னான். எதற்கென்று புரியாமல் புரோகிதன் அவ்வாறே செய்தான். கூரை மீது நின்ற சார்வாகன், ஒரு சோற்று உருண்டையை அதன் மீது வைக்கச் சொன்னான். தீயில் உணவைப் போட்டு இறந்தவர்களுக்குப் போய்ச்சேருகின்ற மந்திரத்தைச் சொல்லச் சொன்னான். புரோகிதன் விழித்தான். சார்வாகன் “உன் மந்திரத்தால் தீயில் கொட்டப்படும் உணவு, எங்கேயோ மேலே இருக்கிற கண்காணாத உலகிற்குப் போகும் என்றால், அந்த மந்திரம் தெருவிலிருந்து ஐந்து முழம் உயரம் இருக்கும் இந்தக் கூரைக்குச் சோற்றை ஏற்றாதோ?” என்று கேட்டான். “அய்யோ! இவன் நாத்திகன், இவன் ஊரில் இருந்தாலே மழை பெய்யாது” என்று கூவிக்கொண்டே புரோகிதன் ஓடிவிட்டான்.

மகாபாரதத்தில் சார்வாகர்களைப் பற்றிக் கதை ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாண்டவர்கள் பாரதப் போரில் வெற்றி பெற்று இந்திரப் பிரஸ்தம் என்னும் தலைநகரினுள் நுழைந்தார்கள். கௌரவர்கள் போரில் மாய்ந்து போனார்கள். அவர்கள் ஆட்சியில் நகரத்தில் வாழ்ந்த பிராம்மணர்கள், இப்போது வெற்றி பெற்று நகரினுள் வரும் பாண்டவரை வரவேற்கத் திரளாக வந்தனர். பாண்டவர்களில் மூத்தவனான தரும புத்திரரை மிகைபடப் புகழ்ந்து தங்களை ஆதரித்துப் பல்லாயிரம் ஆண்டுகள் ஆட்சி புரிய வேண்டுமென வாழ்த்தினார்கள். அவர்களிடமிருந்து விலகி நின்ற நாலைந்து பேர்கள் “இவர்கள் சொலவதை நம்பாதே” என உரக்கக் கூவினார்கள். தருமபுத்திரர் அவர்களைத் திரும்பிப் பார்த்தார். கூடி நின்ற பிராம்மணர்கள், “அவர்கள் சொலவதைக் கேட்காதீர்! அவர்கள் பூதவாதிகள், சார்வாகர்கள்” என்று கத்தினார்கள்.

பூதவாதிகளில் ஒருவன் முன் வந்து தருமனைப் பார்த்துத் தெளிவான குரலில் பேசினான்: “இந்தப் பிராம்மணர்கள் இன்று காலையில் துரியோதனனுக்குச் சொன்ன வாழ்த்தைத்தான் இப்பொழுது உனக்குச் சொல்லியிருக்கிறார்கள். உண்மையில் நீ தருமபுத்திரன் அல்ல. அதர்மத்தைச் செய்து வந்திருக்கிறவன். எதற்காகக் குருமார்களையும் பாட்டனையும் தந்தையர்களையும் சகோதரர்களையும் நண்பர்களையும் போரில் கொன்றுவிட்டு இங்கே வந்திருக்கிறாய். இவற்றைவிடக் கொடிய பாதகம் என்ன இருக்கிறது. இக்கொடிய பாதகத்தை நீ செய்யக் காரணம் என்ன? அதற்குக் காரணம் இந்த மண்ணை ஆளவேண்டும் என்னும் ஆசைதானே முன் வாழ்ந்த மன்னர்கள் பிற உயிர்களுக்காகத் தன்னுயிர் கொடுத்தார்கள். நீ மண்ணுக்காக உங்கள் குல குருவான துரோணரையும் பாட்டனான பீஷ்மரையும் சிற்றப்பனான விதுரனையும் குந்தியின் சகோதரர்களான மாமன்மார்களையும் துரியோதனன் முதல் நூறு சகோதரர்களையும் சொந்த அண்ணனான கர்ணனையும் கொன்று விட்டாய்!. நேற்றுவரை இந்தப் பிரம்மணர்களுக்கு, துரியோதனன் தர்மரட்சகனாக இருந்தான். அவனுக்கு இவர்கள் பல்லாண்டு பாடினார்கள். இன்று அவன் களத்தில் செத்துக்கிடக்கின்றான். நீ வென்று வருகிறாய். நேற்றுத் துரியோதனனைப் புகழ்ந்த அந்த வாயால் அவர்கள் இன்று உன்னைப் புகழ்கிறார்கள். இதெல்லாம் எதற்காக? அவர்களது பசுக்களையும் ஆசிரமங்களையும் அடிமைகளையும் யக்ஞ தட்சினைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவே. உள்ளதைச் சொல்லும் நாங்கள் நாத்திகர்கள்” என்று சொன்னான்.

“பிராம்மன துரோகமும் ராஜத்துரோகமும் செய்யும் இவர்களைத் தீயிலிட்டு எரியுங்கள்” எனப் பிராம்மணர்கள் கூக்குரலிட்டார்கள். அவர்களைப் பிடித்துக் கட்டி, ஓமத் தீயில் இட்டுப் பொசுக்கினார்கள்.

நா. வானமாமலை, பண்டைய வேதத் தத்துவங்களும், வேத மறுப்புப் பௌத்தமும். அலைகள் வெளியீட்டகம்.