Saturday, September 17, 2011

மாமிசம் - விர்ஜிலியோ பினோரா

நான் அ-புனைவு (non-fiction) என்று வகைப்படுத்தப்படும் நூல்களையே விரும்பி வாசிப்பேன். வரலாற்று சம்பவங்களை, அரசியல் செயல்பாடுகளை, மனித துயரங்களை உண்மை நிகழ்வுகளோடு விவரிக்கும் அவ்வகைப் புத்தகங்களில் இருந்தே அறிவைப் பெருக்கிக்கொள்ள முடியும், அவற்றைக் கொண்டே சமூக மேம்பாட்டிற்கான வழிமுறைகளைக் கண்டடையமுடியும் எனும் ஒரு வகையான பிடிவாதப்போக்கு என்றும் சொல்லலாம். அப்பிடிவாதப்போக்கை அவ்வப்போது கேள்விக்குட்படுத்தியும், அசைத்தும் பார்ப்பன் எனது தோழன் வசுமித்ர. எனது நிலைப்பாட்டை மாற்றக்கூடிய சில புனைவு இலக்கியப்புத்தகங்களிலிருந்து தேர்ந்தெடுத்த சிலப் பத்திகளை வாசித்தோ அல்லது அதை எழுதிய எழுத்தாளர் பற்றியக் குறிப்புகளையோ எடுத்துச் சொல்லி ஆர்வத்தை தூண்டிவிடுவான். அதன் பயனாக அவ்வப்போது சில புனைவு நூல்களை வாசிப்பதுண்டு. அந்தவகையில் சில புனைவுக் கதைகள், தொகுப்புகள் மனதை உலுக்குவதாக அமைந்துள்ளது. ஆனால் அவை எல்லாவற்றையும் மிஞ்சக்கூடிய ஒருவித அதிர்ச்சியுணர்வை ஏற்படுத்திய, தத்துவார்த்தக் கேள்விகளை எழுப்பிய ஒரு தொகுப்பு ரவிக்குமார் மொழிபெயர்ப்பில் 2003ல் வெளிவந்த வெளிச்சமும் தண்ணீர் மாதிரிதான் எனும் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் தொகுப்பு.

எட்டு கதைகள் இடம்பெற்றிருக்கும் இத்தொகுப்பில் முதல் கதையே மனதை உலுக்குவதாகத்தான் இருக்கிறது. மனித வாழ்க்கையின் துயர்களை, இயலாமையை, வறுமையின் வன்முறையை வெறும் நான்கு பக்கங்களில் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் கியூப எழுத்தாளர் விர்ஜிலியோ பினோரா. முதலாளித்துவம் நம் சதைகளையே பிய்த்து நமக்கே உணவாகத் தருகிறது எனும் உட்பொருளை இக்கதை எனக்கு உணர்த்துகிறது, அத்தோடு எவ்வளவுதான் மனிதன் தன்னிடம் உள்ளவற்றைக் கொண்டே வாழ்ந்துவிட முயற்சித்தாலும் அது மற்றவரின் வாழ்வாதாரத்தைப் பறிக்கக்கூடியதாக இருக்கிறது. மேலும் விரும்பியோ, விரும்பாமலோ சமூகத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை சார்ந்தே இருக்கின்றனர் எனும் நிதர்சனமும் விளங்குகிறது. எளிய மக்களின் மரணங்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை, சுவடுகள் ஏதுமின்றி தாங்களாகவே தங்களை துடைதெரிந்துவிடுவதற்கான தயாரிப்பை ஆதிக்க வர்க்கம் செய்து தருகிறது என்பதையும் இக்கதை உணர்த்த தவரவில்லை. தத்துவார்த்தக் கோட்பாடுகளை மேற்கோளாக காட்டி புலமை பாணியில் கதை சொல்லாமல் எளிய விவரணையாகவே இருப்பது இக்கதையின் சிறப்புக்குறிய அம்சமாகும். மொழி உணர்ச்சிவசப்பட்டால் ஆசிரியன் தோற்றுவிடுகிறான் என்று அடிக்கடி வசுமித்ர சொல்வான், அது எவ்வளவு உண்மை என்பது மொழிபெயர்ப்புக் கதைகளை படிக்கும் பொழுது தெரிகிறது. காம்யூவின் அந்நியனாக இருக்கட்டும், அங்கிள் சாமுக்கு மாண்டோவின் கடிதங்களாக இருக்கட்டும், அய்ஃபர் டுன்ஷின் அசீஸ் பே சம்பவமாக இருக்கட்டும் எழுத்துக்கள் சொற்சிக்கனத்தோடு வாழ்க்கையின் குரூரங்களை விவரிக்கின்றன, அங்கு படிக்கும் வாசக மனமே உணர்ச்சிவயப்படும் சூழலுக்கு இழுத்துக் செல்லப்படுகிறது. அப்படி ஏற்பட்ட ஒரு உணர்ச்சியின் பிடியிலிருந்து மீளமுடியாமல் இக்கதையை இங்குப் பதிவு செய்கிறேன்.

காப்புரிமை விதிகளை நான் மதிக்கிறேன். இன்று வாசிப்பு என்பதை ஒரு அறிவுஜீவி பழக்கமாக நினைத்துக்கொண்டு, அடையாளச் சிக்கலுக்காக பெரும்பாலும் இணையத்தை மட்டுமே நம்பி வலம் வந்துக் கொண்டிருக்கும் ஒரு தரப்பினருக்கு இத்தகைய புத்தகங்களை அறிமுகம் செய்துவைப்பது பயனளிக்கும் என்ற எண்ணமே அந்த முக்கியமான தொகுப்பிலிருந்து ஒரு கதையை முழுமையாக பதிவு செய்யத் தூண்டியது. ரவிக்குமார், அ.மார்க்ஸ், பொ. வேல்சாமி ஆகிய மூவரின் கூட்டனி வெளியிட்டுவந்த நிறப்பிரிகை இதழ் நிறுத்தப்பட்டது தமிழ் இலக்கியச் சூழலில் ஓர் இழப்பே. இருந்தாலும் மூவரும் தனித்தனியே தங்கள் படைப்புகளை சமூகத்திற்கு அளித்துவருகிறார்கள் என்பது ஆறுதலான ஒரு விசயமே.

மொழிபெயர்ப்புத்தரம், தேர்வு அகியவற்றைப் பற்றி இந்நூலின் முன்னுரையில் அரவிந்தன் எழுப்பும் கேள்விகள் முக்கியமானவை.

மாமிசம்

- விர்ஜிலியோ பினோரா

அது சாதாரணமாகத்தான் நடந்தது, எந்தப் பாவனையுமில்லாமல். அந்த நகரம் இறைச்சிப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருந்தது, அதற்கான காரணங்களை இங்கே விவரிக்கத் தேவையில்லை. எல்லோரும் கலவரப்பட்டார்கள், மிக மோசமான விமர்சனங்கள் காதில் விழுந்தன. பழி வாங்கப் போவதாகவும் பேசப்பட்டது. ஆனால், வழக்கம்போல மிரட்டல்களைத் தாண்டி எதிர்ப்பு வளரவில்லை, பாதிக்கப்பட்ட அந்த நகரத்தின் மக்கள் வெகுசீக்கிரமாகவே, பலதரப்பட்ட காய்கறிகளையும் தின்பதில் ருசிகண்டு விட்டார்கள்.

திரு. அன்சால்டோ மட்டும்தான் அந்த நகரத்தில் விதிவிலக்கு. எந்தக் கலக்கமும் இல்லாமல் ஒரு பெரிய கத்தியை அவன் தீட்டிக்கொண்டிருந்தான். பிறகு தனது பேண்ட்டை முழங்கால் வரை கீழே தள்ர்த்திவிட்டான். தனது இடதுபுற பிருஷ்டத்திலிருந்து ஒரு துண்டுக் கறியை வெட்டி எடுத்தான். உப்பும் வினிகரும் போட்டு அந்தக் கறியைச் சுத்தம்செய்து அதை ப்ராய்லரில் வைத்து வதக்கினான். ஞாயிற்றுக்கிழமைகளில் சமைப்பதற்குப் பயன்படுத்தும் வாணலியில் அந்தக் கறியைப் போட்டு வறுத்தான். மேசையில் அமர்ந்து தனது கறியைச் சுவைத்துச் சாப்பிட ஆரம்பித்தான். அந்தச் சமயம் பார்த்துக் கதவை யாரோ தட்டுகிற சப்தம் கேட்டது. தட்டியவர் அன்சால்டோவின் பக்கத்து வீட்டில் வசிப்பவர். அவர் தனது மனக்குறையை அன்சால்டோவிடம் சொல்வதற்காக வந்தார். அன்சால்டோ மிகவும் சினேக பாவத்தோடு அந்த இறைச்சித் துண்டை அவரிடம் காண்பித்தான். அதைப் பற்றி அவர் கேட்டபோது தனது இடது பக்க பிருஷ்டத்தை அவருக்கு அன்சால்டோ காண்பித்தான். உண்மை பட்டவர்த்தனமாக இருந்தது. அவர் மிகவும் நெகிழ்ந்துபோனார், ஒரு வார்த்தையும் பேசாமல் வெளியே சென்று சற்று நேரத்தில் அந்த நகரத்தின் மேயரை அழைத்துக்கொண்டு திரும்பி வந்தார். அந்த நகரத்தின் மக்கள் தங்கள் கையிருப்பில் வைத்திருக்கும் இறைச்சியை அதாவது தங்களின் சொந்த மாமிசத்தைக் கொண்டு தங்களது பசியைத் தீர்த்துக்கொள்ளும்படி செய்யலாம் என்ற தனது ஆவலை அன்சால்டோவிடம் மேயர் தெரிவித்தார். அதிகம் படித்தவர்களின் எதிப்புக்குப் பிறகு, அன்சால்டோ அந்த நகரத்தின் மத்தியிலிருந்த சதுக்கத்துக்குச் சென்று வெகுமக்களுக்கான செய்முறை விளக்கத்தைச் செய்துகாட்டினான். அதன் பிறகு அந்தப் பிரச்ச்னை ஒரு முடிவுக்கு வந்தது.

ஒவ்வொருத்தரும் தனது இடது பிருஷ்டத்திலிருந்து இரண்டு துண்டுகளை வெட்டி எடுப்பது எப்படி என்பதை ஒருமுறை அவன் செய்துகாட்டினான். ஒரு கொக்கியில் மாட்டப்பட்டிருந்த இறைச்சியின் நிறத்திலான ப்ளாஸ்டரால் செய்யப்பட்ட பொருளை அவன் பயன்படுத்தி அதை விளக்கினான். ஒன்று அல்லது இரண்டு துண்டு மாமிசத்தை வெட்டி எடுப்பது எப்படி என்பதைச் செய்து காட்டினான். இந்த விஷயங்கள் தெளிவு படுத்தப்பட்டதும் ஒவ்வொருத்தரும் தனது இடதுபக்க பிருஷ்டத்திலிருந்து இரண்டு துண்டு மாமிசத்தை வெட்டி எடுக்கத் தொடங்கிவிட்டனர். அது பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஆனால் அதைப்பற்றி விவரிக்கக் கூடாது எனச் சொல்லப்பட்டது. இப்படியாகப் பெறப்படும் மாமிசத்தைக்கொண்டு அந்த நகரத்தின் இறைச்சித் தேவையை எத்தனை நாட்களுக்குத் தீர்க்க முடியும் எனக் கணக்கிடப் பட்டது. நூறு பவுண்டு எடையுள்ள ஒரு நபர் குடல் போன்ற சாப்பிட முடியாத உறுப்புகளைத் தவிர்த்துப் பார்த்தால் ஒரு நாளைக்கு அரை பவுண்டு மாமிசம் வீதம் நூற்று நாற்பது நாட்களுக்குத் தன்னையே சாப்பிட முடியும் என ஒரு புகழ்பெற்ற மருத்துவர் தெரிவித்தார். இந்த கணக்கு ஏமாற்றம் தருவதாயிருந்தது. ஒவ்வொருவரும் தனது அழகிய மாமிசத்தைச் சாப்பிட முடிந்தது. திரு. அன்சால்டோவின் யோசனையைப் பெண்களெல்லாம் புகழ்ந்து பேசினார்கள். உதாரணமாக, தமது மார்பகங்களைத் தின்றுவிட்ட பெண்கள் தங்களது உடம்பின் மேல் பாகத்தை மூடத் தேவையில்லாமல் போய்விட்டது. அவர்களது உடை தொப்புளோடு நின்றுவிட்டது. சில பெண்கள் பேசுவதை நிறுத்திவிட்டனர், ஏனென்றால் அவர்கள் தமது நாக்குகளை விழுங்கிவிட்டார்கள் (அதுவரை அது அரச வம்சத்தினர் மட்டுமே அனுபவித்துவந்த விருந்தாக இருந்தது.) தெருக்களில் வினோதமான காட்சிகள் நிகழ்ந்தன. வெகுகாலமாக ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத இரண்டு பெண்கள் சந்தித்துக்கொண்டபோது அவர்களால் ஒருவரையொருவர் முத்தமிட்டுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் தமது உதடுகளைக்கொண்டு அருமையான குழம்பு ஒன்றைச் சமைத்துச் சாப்பிட்டுவிட்டார்கள். சிறை அதிகாரியால் ஒரு கைதியின் மரண தண்டனை உத்தரவில் கையெழுத்திட முடியவில்லை, ஏனென்றால் அவர் தனது விரல்களிலிருந்த சதையைத் தின்று தீர்த்துவிட்டார். ருசியாகச் சாப்பிடுவதில் வல்லவர்கள் அந்த அதிகாரியும் அதில் ஒருவர் இந்தப் பழக்கத்தை வைத்துதான் விரல் சூப்புவது நல்லது என்ற பழமொழியை உருவாக்கினார்கள்.

சிறிய அளவில் இதற்கு எதிர்ப்பும் இருக்கத்தான் செய்தது. பெண்களுக்கு ஆடை தயாரிக்கும் தொழிலாளர் யூனியனைச் சேர்ந்தவர்கள் உரிய அதிகாரிகளிடம் தமது முறையான எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். பெண்கள், தமது தையல்காரகளை மீண்டும் பராமரிக்க ஊக்குவிக்கும் முழக்கம் ஒன்றை உருவாக்க வேண்டுமென்ற அவர்களது கோரிக்கையை அந்த அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர். ஆனால் அந்த எதிர்ப்பு குறிப்பிடும்படியாக இல்லை, தங்களது மாமிசத்தைத் தாங்களே உண்ணும் அந்த நகரத்து மக்களின் நடைமுறையில் அது எந்த விதக் குறுக்கீட்டையும் செய்யவில்லை.

அந்த விஷயத்தின் மிகவும் கவர்ச்சிகரமான நிகழ்ச்சி அந்த நகரத்தின் பாலே நடனக் கலைஞனின் கடைசித் துண்டு மாமிசம் வெட்டியெடுக்கப்பட்டதுதான். அவனது கலையின் மீதிருந்த மரியாதை காரணமாகத் தனது கால் பாதங்களின் முன் பகுதியைக் கடைசியாகச் சாப்பிடலாம் என அவன் விட்டு வைத்திருந்தான். பல நாட்களாக அவன் அமைதியின்றி இருந்ததை அவனது அக்கம்பக்கத்தினர் கவனித்துவந்தார்கள். கால் நுனியின் மாமிசம் மட்டுமே இப்போது மிச்சமிருந்தது. அந்தச் சமயத்தில் அவன் தனது நண்பர்களை அழைத்தான் கொடூரமான மௌனத்தின் மத்தியில் அந்தக் கடைசிப் பகுதியை அப்படியே அதை முன்பு அழகான வாயாக இருந்தது தற்போது ஒரு ஓட்டையாக மட்டுமே எஞ்சியிருக்கும் பகுதிக்குள் போட்டுக்கொண்டான். அங்கு இருந்தவர்கள் எல்லோரும் சட்டென்று இறுக்கமானார்கள்.

ஆனால், வாழ்க்கை நடந்துகொண்டிருந்தது. அதுதான் முக்கியமான விஷயம். அது அதிர்ஷ்டவசமாய் நடந்ததா? நினைவுக்கூரத்தக்க விஷயங்களுக்கான மியூசியத்தின் அறைகளில் ஒன்றில் அந்த நடனக் கலைஞனின் காலணிகள் காணப்படுவது இதனால்தானா? அந்த நகரத்தின் பருமனான நபர்களில் ஒருத்தர் (நானூறு பவுண்டுக்கு மேல் எடை உள்ளவர்) தனது கையிருப்பில் இருந்த மாமிசம் அத்தனையையும் பதினைந்தே நாளில் சாப்பிட்டு முடித்துவிட்டார்.(அவர் சிற்றுண்டி சாப்பிடுவதிலும் மாமிசம் தின்பதிலும் அதிக விருப்பம் உள்ளவர். அதுமட்டுமின்றி அவரது உடலமைப்பு, நிறையச் சாப்பிட வேண்டிய தேவையை ஏற்படுத்தியது.) கொஞ்ச காலத்துக்குப் பிறகு எவரும் அவரைப் பார்க்க முடியவில்லை. உண்மையில் அவர் ஒளிந்து வாழ்ந்துக்கொண்டிருந்தார். ஆனால் அப்படி ஒளிந்து வாழ்ந்தது அவர் மட்டுமல்ல, வேறு பலரும் அதே போலச் செய்துகொண்டிருந்தார்கள். இப்படியாக ஒருநாள் காலை திருமதி ஓர்ஃபிலா தனது மகனைக் கூப்பிட்டப்போது அவனிடமிருந்து பதிலெதுவும் வரவில்லை (அவன் தனது இடது காது மடலைச் தின்றுகொண்டிருந்தான்). காது இருந்த இடத்தில் வேறு எதையோ வைத்திருந்தான். கெஞ்சல்களோ மிரட்டல்களோ எதுவும் பயனளிக்கவில்லை. காணாமல்போனவர்களைக் கண்டுபிடிக்கும் நிபுணர் வரவழைக்கப்பட்டார். ஆனால், தான் விசாரித்துக்கொண்டிருந்தபோது தனது மகன் அமர்ந்திருந்ததாக திருமதி. ஓர்ஃபிலா சுட்டிக்கட்டிய இடத்திலிருந்து கொஞ்சம் கழிவுப் பொருள்களை மட்டுமே அந்த நிபுணரால் கண்டெடுக்க முடிந்தது. ஆனால், இப்படியான சிறுசிறு தொந்தரவுகள் அந்த நகரவாசிகளின் சந்தோஷத்தை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. தனது ஜீவாதாரத்துக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒரு நகரம் எப்படிக் குறை சொல்ல முடியும்? இறைச்சிப் பற்றாக்குறையால் பொது ஒழுங்குக்கு ஏற்பட்ட நெருக்கடி நிரந்தரமாகத் தீர்க்கப்பட்டாயிறு இல்லையா? நகரின் மக்கள்தொகை கண்ணுக்குத் தெரியாமல்போகும் அளவுக்கு வேகமாகக் குறைந்துகொண்டிருந்தது என்பது அந்த அடிப்படையான பிர்ச்சனைக்கு ஒரு பிற்சேற்கை. மக்கள் தமது வாழ்வாதாரத்தை அடைவதில் கொண்டுள்ள உறுதிப்பாட்டை அது எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. ஒவ்வொருவரிடமிருந்தும் எடுக்கப்பட்ட மாமிசத்துக்கான விலைதான் அந்தப் பிற்சேர்க்கையா? ஆனால், இப்படிப் பொருத்தமற்ற கேள்விகளைக் கேட்பது சில்லறைத்தனமான விஷயம் எனத் தோன்றக்குடும். இப்போது சிந்தனையாற்றல் நிரம்பிய அந்தச் சமூகம் நல்ல முறையில் போஷிக்கப்படுகிறது.

வெளிச்சமும் தண்ணீர் மாதிரிதான்

மொழிபெயர்ப்பு: ரவிகுமார்

தலித் வெள்யீடு, 2003.

விற்பனை உறிமை சுதர்சன் புக்ஸ், நாகர்கோயி. Ph; 04652-228445

Monday, July 25, 2011

பெண் விடுதலை: ஒரு புதிய தரிசனம் – ஓஷோ


..... மேலைப் பெண்ணுக்கும் கீழைப் பெண்ணுக்கும் இடையிலான வேறுபாடுக் குறித்த காரணங்களில் முதலாவது காரணம் காரல் மார்க்ஸ். வறுமைக்கும், போன ஜென்மம், விதி, தலையெழுத்து இவற்றுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. யார் ஏழையாயிருக்க வேண்டும், யார் பணக்காரனாயிருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது கடவுள் அல்ல, சமூகப் பொருளாதார அமைப்பே யார் ஏழையாகப் போகிறார் என்பதைத் தீர்மானிக்கிறது. இந்த அமைப்பை மாற்ற முடியும். ஏனென்றால் இது கடவுளால் படைக்கப்பட்டதல்ல, மனிதரால் உண்டாக்கப்பட்டது. உண்மையில் கடவுள் என்று ஒருவர் இல்லை என்ற கருத்துக்களை காரல் மார்க்ச் உலகம் முழுவதிலுமுள்ள அறிவாளி வர்க்கத்தின் முன் வைத்து அக்கருத்துக்களை அவர்கள் ஏற்கும்படி செய்தார்.

காரல் மார்க்சின் கருத்து சரியே என்பதை பரிசோதனை அடிப்படையில் ருசியப் புரட்சி நிரூபித்தது. அதாவது இந்த அமைப்பை மாற்ற முடியும். அரசர்கள் ஆண்டிகளாக முடியும். ஆண்டிகள் அரசர்களாக முடியும். கடவுள் இதில் எந்த குறுக்கீடும் செய்யவில்லை. ‘இப்படி நீங்கள் செய்யக் கூடாது. அவர்கள் தலையில் நான் எழுதியதை உங்களால் மாற்ற முடியாது’ என்றெல்லாம் கூறவில்லை.

ருசியாவில் ஜாரின் குடும்பம் முழுவடும் ஆண்கள், பெண்கள், முதியவர், இளையவர், குழந்தைகள், ஆறுமாதமே ஆன பச்சைக் குழந்தை, 95 வயதான கிழவன் ஆக மொத்தம் அரச குடும்பத்தைச் சேர்ந்த பத்தொன்பது பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்டார்கள். அப்போது கடவுள் குறுக்கிட்டு ‘இந்தக் குடும்பத்தை என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்? அது நான் எடுத்த முடிவு. ஏறக்குறைய உலகின் ஆறில் ஒரு பங்குக்கு நான் சொந்தக்காரர்களாக்கிய அவர்களை நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்கவில்லை. அக்காலத்தில் ருசியப் போரரசே மிகப்பெரிய பேரரசாக இருந்தது. ஜாரே உலகின் மிகப்பெரும் பணக்காரராக இருந்தான்.

ஆக முதல் சம்மட்டி அடி காரல் மார்க்சிடமிருந்து வந்தது. இரண்டாவது சம்மட்டி அடியோ சிக்மண்ட் பிராய்டிடமிருந்து வந்தது. ஆண்களும் பெண்களும் சமமானவர்கள், ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்; பெண்களைக் கண்டனம் செய்யும் எவ்விதக் கோட்பாடுகளும் தத்துவங்களும் முற்றிலும் மனிதத் தன்மை அற்றவை, ஆணதிக்க வெறி கொண்டவை இவ்வாறு அறிவித்தார் பிராய்டு. அடுத்து மூன்றாவதான கடைசி சம்மட்டி அடியோ மாஸ்டர்ஸ் ஜான்சனின் ஆராய்ச்சிகளில் இருந்து வந்தது. பெண்ணானவள் நூற்றாண்டுகளாக உடலுறவின் உச்சத்தை அனுபவிக்க விடாமலே தடுக்கப்பட்டு வந்திருக்கிறாள். உண்மையாகவே தன் நடத்தையில் மனிதத் தன்மையற்றவளாகவே பாலியல் தேவைகளுக்காகவே பெண்ணை அவன் பயன்படுத்தினான். ஆனால் அதே காமத்தை பெண் அனுபவிக்க அவன் அனுமதிக்கவில்லை.

இந்த மூன்று விஷயங்களும் மேற்கின் மொத்த சூழலையே மாற்றி இருக்கிறது. ஆனால் கிழக்கின் மரபுரீதியான மனத்தை இம்மூன்று விஷயங்களும் இன்னும் ஊடுருவவே இல்லை. இவற்றின் விளைவாக மேலைப் பெண்மணி போர்ப் பாதையில் இருக்கிறாள். ஆனால் அது எதிர்வினை நிகழ்வுதான். எனவே பெண்விடுதலை என்ற பெயரில் தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறதோ அதை நான் ஆதரிப்பதில்லை.

பெண்கள் விடுபட வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். ஆனால் எதிர்க்கோடிக்கு போய்விடுவதை விரும்பவில்லை. பெண்கள் விடுதலை இயக்கம் எதிர்க் கோடிக்கு போய்க்கொண்டிருக்கிறது, பழிவாங்கத் துடிக்கிறது. ஆண் தனக்குச் செய்ததையே அவனுக்குத் திருப்பிச் செய்ய முயலுகிறது. இது சுத்த மடத்தனம். நடந்தது நடந்து விட்டது. இப்போது அது இல்லை. ஆண் தான் செய்ததை எல்லாம் தன்னுணர்வில்லாமலேயே செய்து விட்டான். பெண்களூக்கு எதிராக தெரிந்தே சதி செய்யவில்லை. அவனும் உணர்வுடன் இல்லை. பெண்ணும் உணர்வுடன் இல்லை.

...............................

..................................

கடந்த காலம் முழுவதும் எல்லாவிதமான தவறுகளாலும் நிரம்பியுள்ளது. கடந்தகாலத்திலிருந்து விடுபடுங்கள். எல்லாவற்றையும் ஆண் பெண் உறவு உள்பட புதிய கண்டுபிடிப்புகளின் ஒளியில் புதியதாய் தொடங்குங்கள். கடந்த காலத்தில் நடந்த எந்த அசிங்கமும் இல்லாமல் வாழ்க்கை ஒரு அழகிய அனுபவமாக, ஆனந்த நடனமாக இருப்பதற்கான வழிகளை இருவரும் சேர்ந்தே கண்டுபிடியுங்கள். பழைய தவறை திரும்பச் செய்யாதீர்கள். அப்படிச் செய்வது கடிகார ஊசலின் இயக்கத்தைப் போலவே ஆகிவிடும். முன்பு ஆண் மடத்தனமான காரியங்களைச் செய்தான். இப்போது பெண்ணும் அதே மடத்தனங்களையே செய்வாள் (என்றாகிவிடும்).

ஆனால் மனித இனம் முழுவதுமே தொடர்ந்து துன்பப் பட்டுக் கொண்டே இருக்கிறது. மடத்தனமான செய்கையை யார் செய்தார் என்பது முக்கியமில்லை. ஆனால் மனிதகுலம் தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடையாமலே இருக்கிறது. ஆணும் பெண்ணும் ஒரு ஒத்த புரிதலுக்கு வந்தாக வேண்டும். கடந்த காலத்தை அவர்கள் மன்னித்து மறந்து விட வேண்டும். ஒன்றை மட்டும் அவர்கள் நிணைவில் கொள்ளட்டும். அதாவது பெண் ஆணைப் போலவே நடித்து போலியாகக் கூடாது. ஏனென்றால் அவளுடைய கவர்ச்சிக்கும் அழகுக்கும் ஒரு வித்தியாசமான பரிமாணம் இருக்கிறது.

...................................

.........................(பக். 16-19) பெண் விடுதலை: ஒரு புதிய தரிசனம் ஓஷோ

தமிழாக்கம்: சிங்கராயர், சுவாமி அம்ரித் யாத்ரி, கவிதா வெளியீடு.

//ஆண் தான் செய்ததை எல்லாம் தன்னுணர்வில்லாமலேயே செய்து விட்டான். பெண்களூக்கு எதிராக தெரிந்தே சதி செய்யவில்லை. அவனும் உணர்வுடன் இல்லை. பெண்ணும் உணர்வுடன் இல்லை.

...............................

..................................

கடந்த காலம் முழுவதும் எல்லாவிதமான தவறுகளாலும் நிரம்பியுள்ளது. கடந்தகாலத்திலிருந்து விடுபடுங்கள். எல்லாவற்றையும் ஆண் பெண் உறவு உள்பட புதிய கண்டுபிடிப்புகளின் ஒளியில் புதியதாய் தொடங்குங்கள்//

இதை தட்டையாக அப்படியே புரிந்து கொண்டால் ஆத்திரமூட்டும் உணர்வுகள் ஏற்படக்கூடும். ஒவ்வொரு ஆணும் பெண்ணுக்கெதிரானவன் அல்ல, பல்வேறு காரணங்கள், குறிப்பாக பொருளாதார அமைப்பில் மாற்றம் ஆகியவை மனித மனதை எவ்வாறு கையாள்கிறது அல்லது கையாண்டது எனும் கோணத்தில் விரிவாக பேசவேண்டிய ஒரு கருத்து அது என்பதாக நான் உணர்கிறேன்.

அதேபோல் கடந்த காலத்திலிருந்து விடுபடுங்கள் என்பதிலும் வரலாற்றை புறக்கணித்து விட்டு, எல்லாவற்றையும் மறந்துவிட்டு கைகுலுக்கிக் கொண்டு நண்பர்களாகி விடுவேண்டும் என்பதல்ல (முடிவு அவ்வாறாகத்தான் இருக்க வேண்டும்). ஒருவரை ஒருவர் தூற்றிக் கொண்டிருக்காமல், கடந்த கால வரலாற்றை, அதில் நடந்த தவறுகளை திறந்த மனதோடு இருபாலாறும் கற்று ஆய்ந்து தீர்வை காண வேண்டும், கண்ட பின்பு கடந்த காலத்திலேயே உழல்வது அவசியமில்லை என்பதாக புரிந்துக் கொள்ளலாம்.

Thursday, May 19, 2011

அன்னா ஹஸாரே ஊழல் - எஸ்.வி.ராஜதுரை

தேர்தல் செய்திகளோ, கிரிக்கெட் போட்டிகளோ இல்லாத நாள்களில் பரபரப்புச் செய்திகளுக்குப் பஞ்சம் வந்தால் என்ன செய்வது என்று தவித்துக்கொண்டிருந்த ஊடகங்களுக்கு இருக்கவே இருக்கிறார் என்.ஜி.ஓ காந்தியவாதி அண்ணா ஹசாரே எழுபத்துமூன்று வயதாகும் அவர் காந்தி இறக்கும்போது பத்து வயதுச் சிறுவனாக இருந்திருப்பார். எனவே, தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, சிறைசென்று சிப்பி ஏந்திய தியாகியாகியிருக்க வாய்ப்பில்லை. ‘இரண்டாவது சுதந்திர போராட்டம்என்று 1970களில் அழைக்கப்பட்டதும் இண்டிரா காந்தியால் அவசரனிலை பிரகடனப்படுத்தப்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக இருந்ததுமான ஜெயப்பிரகாஷ் நாராயணின் ‘ஊழல் எதிர்ப்புப் போராட்டத்திலும் அவர் கலந்துக்கொண்டதில்லை. அப்போதுதான் அவர் இந்திய இராணுவப் பணியிலிருந்து (ஜவான்) ஓய்வுபெற்று மகாராஷ்டிரத்திலுள்ள தனது கிராமத்துக்குத் திரும்பி வந்திருந்தார். அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கும் மது அருந்துபவர்களுக்கும் எதிரான ஓர் இயக்கத்தைத் தொடங்கினார். ‘மதுவிலக்குஎன்னும் ஒரே குறிக்கோளில் மட்டுமே அவர் காந்தியின் பெயருடன் சம்பந்தப்பட்டிருக்கிறார். மர்றபடி, தனது குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு வன்முறையைப் பயன்படுத்தத் தயங்காதவராகவும் இருந்திருக்கிறார். ‘என்.ஜி.ஓ.னிதியுடன் தனது கிராமத்தை ‘முன்மாதிரி கிராமமாகஆக்க முயன்றுகொண்டிருக்கும் அவர், கிராம சமுதாயத்திலுள்ள சாதிய, வர்க்க, பாலின ஏற்றத்தாழ்வுகளைச் சிறிதும் தட்டிக் கேட்டதில்லை.

அரசாங மட்டத்தில் இலஞ்சம் ஊழல் என்பது 1991ஆம் ஆண்டுவரை இந்திய ஊடகங்களால் மிகவும் முக்கியத்ஹ்டுவம் கொடுக்கப்பட்டு வந்தது. தொழில், வர்த்தகம், ஆகியவற்றைத் தொடங்க அன்று இந்திய அரசாங்கத்தால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த கொள்கைகளும் விதிமுறைகளும்தான் இலஞ்கமும் ஊழலும் பெருகியதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. ‘லைசென்ஸ் ராஜ்என்று அழைக்கப்பட்டு வந்த அரசியல்-பொருளாதார முறை ஒழிக்கப்பட்டுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்னும் கருத்து (சி. ராஜகோபாலாச்சாரியின் தலைமையிலிருந்த சுதந்திரக் கட்சி 1960களில் சொல்லி வந்த கருத்து) பரவலாக்கப்பட்டு வந்தது. அந்தக் கருத்தைக் கொண்டிருந்தவர்கள் மகிழும் வகையில் 1991இல் நரசிம்மராவ் அரசாங்கம் நவ-தாராளவாத புதிய பொருளாதாரக் கொள்கையைப் புகுத்தி உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் கொள்ளைக்காரர்களுக்கு இந்தியாவின் கதவுகளை அகலத்திறந்ஹ்டுவிடும் பணியைத் தொடங்கிவைத்தார். அந்தத் ‘டிருப்பணிஇடையூறு இன்றி நடப்பதற்கு வேண்டி, தனது அரசாங்கத்திற்கு ‘காப்புசெய்ய வேண்டிய தேவை அவருக்கு ஏற்பட்டது சிபு சோரன் உல்ளிட்ட ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிச்யின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் ஆதரவு விலைக்கு வாங்கப்பட்ட செயலை எதிர்த்து அண்ணா ஹஸாரேவோ,அவரது ஆதரவாளர்களோ எந்தப் போராட்டத்தையும் நடத்தவில்லை. நரசிம்மராவின் ஆட்சிக்கு முன் போஃபோர்ஸ் புகழ் ராஜிவ் காந்தி ஆட்சி நடத்தியபோதும் அண்ணாஹஸாரே வாய் திறக்கவில்லை. அரசாங்கத்தின் யர் மட்டத்திலுள்ளவர்களின் ஊழலுக்கு எதிராக வி.பி.சிங் மேற்கொண்ட துணிச்சலான நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தது, இப்போது அண்ணாஜிக்கு வாழ்த்துப் பா பாடிக் கொண்டிருகும் சங் பரிவாரம்.

நவ தாராளவாதக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட ஓராண்டுக்குள், அதன் பலனை மற்ற அணைவரையும் விட அதிகமாகத் துய்த்தவர் பங்குச் சந்தை மோசடிக்குத் துணைபோன விஜயா வங்கியின் தலைவர் தற்கொலை செய்துகொண்டார். ஹர்ஷத் மேத்தாவின் நிறுவனமொன்றில் தனது மனைவியின் பெயரில் முதலீடு செய்தவர் ப.சிதம்பரம். இந்த உண்மை அம்பலப்பட்டதும் அவர் பதவி விலகினார் என்றாலும் பின்னர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் முதலில் நிதி அமைச்சராகவும் பின்னர் உள்துறை அமைச்சராகவும் சேர்க்கப்பட்டார். பங்குச் சந்தை விவகாரத்தில் அவர்மீது விசாரணை நடத்டவேண்டும் என்று ஒருவர் நீந்திமன்றத்தில் இரு மனுத் தாக்கல் செய்தபோது அவருக்கா வழக்காட முன்வந்தவர் அருண் ஜெட்லி!. இரத்தம் தண்ணீரை விடக் கெட்டியானது. எனவே, வர்க்கப்பாசம், கட்சிப் பற்றை இரத்து செய்துவிட்டது. அண்ணா ஹஸாரேவின் ‘லோக் பால்திட்டத்தை விவாதித்து இறுதி செய்வதற்கான குழுவில் மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் ப.சிதம்பரம்.

ஏறத்தாழ ப.சிதம்பரத்தின் பாணியைப் பின்பற்றி சந்தை விலைகளைவிடக் குறைவான விலைக்குத் தனது ‘சிநேகிதிக்காகபங்குகளை வாங்கிய சசி தாரூர் (எத்தகைய அகம்பாவம் பிடித்த மனிதர்), அந்த விஷயம் அம்பலப்பட்டதும் பதவி விலக நேர்ந்தது. பங்குச் சந்தை விவகாரத்தில் பதவி விலகிய ப. சிதம்பரத்தின்மீதும் சசி தாரூர் மீதும் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்படவில்லை. சுரேஷ் கல்மாடிமீது சிபிஐ விசாரணை நடக்கிறது என்றாலும் அவர் கைது செய்யப்படவில்லை. ஆ.ராசா கைது செய்யப்பட்டதற்குக் காரணம், 2ஜி அலைக்கற்றை ஊழலில் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பின் அளவு மிகப் பெரியது என்பதா, அவர் வேறு கட்சியைச் சேர்ந்தவர் என்பதா, முதலமைச்சர் மு. கருணாநிதி கூறுவதுபோல, அவர் தலித் சாதியைச் சேர்ந்தவர் என்பதா? அண்ணாஜிதான் விளக்கம் தரவேண்டும்.

நவ-தாராளவாதக் கொள்கையை நரசிம்ம ராவ் அரசங்கத்தைக் காட்டிலும் இன்னும் முனப்பாகவும் மூர்க்கத்த்னமாகவும் நடைமுறைப்படுத்தி வரும் மன்மோகன் சிங்-ப.சிதம்பரம்-பிரனாப் முகர்ஜி-சோனியா காந்தி குழுவினரின் கொள்கைகளை இந்த மகாராஷ்டிர காந்தி ஒருபோது தட்டிக் கேட்டதில்லை.

‘சாகும்வரை உண்ணானோன்புஒருப்பதைப் பல முறை நிகழ்த்திக் காட்டியதில் மட்டுமே காந்திக்கு ஹஸாரேவுக்கும் ஒற்றுமை உள்ளது. இருவருக்குமுள்ள முக்கிய வேறுபாடு சங் பரிவாரத்தைச் சேர்ந்த ஒருவரால் காந்தி படுகொலை செய்யப்பட்டதும் அதே சங் பரிவாரத்தைச் சேர்ந்தவகளாலும் அவர்களது நட்புச் சக்திகளாலும் ஹஸாரே வெகுவாகப் புகழப்படுவதும்தான் ஹஸாரேவின் மிக அண்மைய ‘சாகும் வரை உண்ணா நோன்புநடந்துகொண்டிருந்த ஜந்தர் மந்தருக்கு வருகை தந்து அவரை உச்சிமோந்து பாராட்டியவர்களில் பாபா ராம் தேவ், ஸ்ரீஸ்ரீரவிஷங்கர் ஆகிய இரு சங் பரிவாரத் ‘துறவிகளும் அடங்குவர். உண்மையான சமூக ஆர்வலர்களான அக்னிவேஷ், மேதா பட்கர் ஆகியோர் இனியேனும் எச்சரிக்கையோடு இருப்பார்கள் என எதிர்பர்க்கலாம்.

உச்ச நீதிமன்றத்தால் பண்டைய ரோமப் பேரரசை ஆண்டு வந்த கொடுங்கோலன் நீரோ மன்னனுடன் ஒப்பிடப்பட்ட நரேந்திர மோடியின் ஆட்சியைப் பாராட்டித் தீர்த்திருக்கிறார் ஹஸாரே. அதேபோல், பால்தாக்ரேவிடமிருந்து பிரிந்து சென்று மகாராஷ்டிர நிர்மாண் சமிதி என்னும் தனிப் பட்டாளம் வைத்திருக்கும் ராஜ் தாக்ரேவுக்கும் புகழாரம் சூட்டியிருக்கிறார். நேர்மையான ஊழலற்ற நிர்வாகம் நடத்துகிறவர், தொழில் வளர்ச்சியில் குஜராத்தை இந்தியவின் ‘நம்பர் ஒன்ஆக ஆக்கியவர் என்று இந்திய மத்தியதர வர்கத்தினரால் போற்றப்படும், அவர்களது இலட்சிய நாயகனாக இருக்கும் மோடியின் கரங்களில் உள்ள வகுப்புவாதக் கறையோ, குஜராத் கிராமங்கள் மிகக் கொடூரமான சுரண்டலுக்கு ஆளாவதோ, அங்கிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் நகர்புறங்களுக்கு இடம்பெயர்ந்து செல்வதோ, அவர்களது நிலங்கள் அபகரிக்கப்படுவதோ ஹஸாரேவுக்கு ஒரு பொருட்டே அல்ல. ராஜ் தாக்கரே, மோடி போன்றோரின் கொள்கைகள் சிறந்தவை, ஆனால் வன்முறை வழிமுறைகள் தனக்கு உகந்தவை அல்ல என்று கூறியுல்ளார் ‘காந்தியவாதிஹஸாரே. அந்த இருவரின் கொள்கைகளிலிருந்தே வன்முறை உதிக்கின்றது என்பது அவருக்கு உண்மையிலேயே புரியவில்லையா?

‘இலஞ்சம் ஊழலுக்கு எதிராகஅண்ணா ஹசாரே கடந்த காலத்தில் நடத்திய போராட்டங்கள் அனைத்தும் இந்தியாவிலுள்ள முதலாளீயச் சுரண்டல் அமைப்பை நிர்வகிக்கின்ற பொறுப்பிலிருந்து ஒரு கட்சியைச் சேர்ந்தவர்களை நீக்கிவிட்டு மற்றொரு கட்சியைச் சேர்ந்தவர்களை நீக்கிவிட்டு மற்றொரு கட்சியை சேர்ந்தவர்களை அந்த இடத்தில் அமர்த்த உதவியிருக்கின்றதே தவிர, வேறு எதையும் சாதிக்கவில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக இருப்பது மகாராஷ்டிரத்தில் அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனம் என்ரான் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு எதிராக அண்ணா ஹஸாரே தொடங்கிய போராட்டம். இதில் ஆதாயமடைந்தது பாஜக-சிவ சேனைக் கும்பல்தான்.

தடா, பொடா, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் போன்ற மிகக் கொடூரமான சட்டங்களுக்கு நிகரான ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை விலைக்கு வாங்கத் தன்னிடம் 5060 கோடி ரூபாய் உல்ளது எனக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சதீஸ் ஷர்மா கூறினார் என்று இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் அமெரிக்க வெளியுறவு அமைச்சருக்கு அனுப்பிய செய்தியை விக்கிலீக்ஸிடமிருந்து பெற்று ‘தி ஹிந்துநாளேடு கடந்ஹ்ட மார்ச் 17 அன்று வெளியிட்டதே, அது குறித்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஹஸாரே எந்தக் கோரிக்கையையும் வைக்கவில்லை.

ஒரிஸ்ஸா தொடங்கி ராஜஸ்தான் வரை மத்திய இந்தியாவின் கனிவளங்கள் ஒட்டுமொத்தமாகச் சுரண்டப்பட்டு, பசுமைப் பகுதிகள் அனைத்தும் பாலைவனங்களாக ஆக்கப்படுவதும் முக்கிய பிரச்சனை அல்ல. இந்தப் பிரச்சனைகளைக் கையில் எடுத்துப் போராடுபவர்களூக்கு ஆதரவாக, படித்த மத்தியத்தர வர்க்கத்தினர் மெழுகுவத்திப் ராட்டம் எதையும் நடத்த மாட்டார்கள். ‘நாங்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் திருடர்கள்என்னும் வாசகம் பொறித்த துணிகளைத் தலையில் கட்டிக்கொண்டு வந்த மத்தியதர வர்க்க இளைஞர்களையும் இளம் பெண்களையும் ஊடகங்கள் காட்டின. தன்க்கள் தேசபக்தியைக் காட்ட்வதற்கு ‘உலககோப்பைக் கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு கிடைத்த வாய்ப்பை அவர்கள் நழுவவிடுவார்களா என்ன? இலஞ்சம் ஊழலில் திளைத்தவர்கள்தான் பெரும்பான்மையான சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக முடிகிறது என்பது உண்மைதான். எனினும், அதற்கான மாற்றுகளை உருவாக்குவதில் இந்த இளைஞ்ர்கள் காட்டிய அக்கறை என்ன? தேர்தல் முறைகளில்ன் (விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் போன்ற) சீர்திருத்தங்களையாவது கொண்டுவர்ப் போராடலாமே. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு கூடாது என்று கூறும் அதே படித்த மேல்தட்டு வர்க்கங்கள்சி சேர்ந்தவர்களான இவர்களில் எத்தனை பேர், தங்கள் வாகனத்தை நிறுத்தும் ‘டிராஃபிக் கான்ஸ்கபிளுக்குஇலஞ்சம் கொடுக்காமல் வந்திருப்பார்கள். சுயநிதிக் கல்லூரிகளில் கொழுத்த கட்டணம் கட்டாமல் பட்டம் பெற்றிருப்பார்கள்? ஐந்து நட்சத்திர மருத்துவமனைகளில் மருத்துவச் சோதனைகள் வேண்டாம் எனச் சொல்லியிருப்பார்கள்? இவர்கள் அனுபவிக்கும் சலுகைகள், சிறப்புரிமைகள், சொகுசுகள் எல்லாம் நவ-தாராளவாதப் பொருளாதாரத்தின் விளைச்சல்கள்தானே?

இது ஒருபுறமிருக்க, அண்ணா ஹஸாரேவின் அண்மைய நாடகத்துக்குக் கதை வசனம் எழுதித் தந்தவர்கள் மன்மோகன்சிங்-ப.சிதம்பரம் கோஷ்டியினர்தான் என்னும் முடிவுக்குத்தான் நாம் வரவேண்டியுள்ளது.

காமன்வெல்த் விளையாடுப் போட்டி ஊழல், 2ஜி அலைக்கற்றை ஊழல், சதிஷ் ஷர்மா விவகாரம் போன்ற அடுத்தடுத்த ஊழல் குற்றச்சாட்டுகளை மன்மோகன் சிங் அரசாங்கம் எதிர்கொண்டிருந்தபோது, கடந்த மார்ச் மாதத் தொடக்கத்தில், இலஞ்சம் ஊழல் தொடர்பான புகார்களைப் புலன் விசாரணை செய்வதற்கான ஓர் அமப்பை உருவாக்காவிட்டால் ‘சாகும்வரை உண்ணா நோன்புஇருக்கப் போவதாக அண்ணா ஷஸாரே அறிவித்தார். ஆனால், அவரது சாவையும் உண்ணானோன்பயும்விட முக்கியமான செய்தித் தீனிகள் ஊடகங்களில் வாய்களுக்கு அப்போது கிடைத்து வந்தன: எகிப்தியப் புரட்சி, ஜப்பான் சுனாமி, உலக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகியன. எனவே அண்ணா ஹஸாரேவின் அறிவிப்பை அவை காதில் (வாயில்) போட்டுக் கொள்ளவில்லை.

அனலிடிகல் மந்த்லி ரெவ்யூஎன்னும் ஆங்கில ஏடு (ஏப்ரல் 2011 இதழ்) சில சுவாரசியமான தகவல்களைத் தருகிறது: மார்ச் 14 முதல் 21 வரை, இந்திய வட்டாரட்ங்களிலிருந்து கூகிள்நியூஸ் இணையதளம் திரட்டி வெளியிட்ட கட்டுரைகளில் மூன்றே மூன்று கட்டுரைகளில் மட்டுமே அண்ணா ஹஸாரேவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. ‘லோக் பால்விஷயமாக விவாதிக்கப் பிரதமர் அலுவலகத்திலிருந்து தனக்கு அழைப்பு வந்ததாக அண்ணா ஹஸாரே 23ம் ட்தேதி, அறிவித்தார் அழைப்பு வந்த அன்றே அவர் பிரதமன் அலுவலகத்துக்குச் சென்றார். பிரதமரின் அலுவலகமும் ‘லோக் பால்சட்டத்தை இயற்றூவது குறித்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அறிவித்தது. மார்ச் 24 முதல் 51 வரை இந்திய வட்டாரங்களிலிருந்து திரட்டி கூகிள் நியூஸ் இணையதளம் வெளியிட்ட கட்டுரைகளில் 42181 கட்ட்ரைகளில் அண்ணா ஹஸாரேவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்பிறகுதான் ஏப்ரலில் நாடகத்தின் கடைசிக் ஆட்சிகள்- அண்ணா ஹஸாரேவின் ‘சாகும்வரை உண்ணா நோன்பு’, பாலிவு நடிகர்களின் ஆதரவு, கோவை, மும்பை டெல்லி போன்ற நகரங்களில் மேட்டுகுடி மக்களில் மெழுகுவர்த்திக் உட்டங்கள், ‘உண்ணா நோன்பைக் கைவிடுமாறு சுஷ்மா ஸ்வராஜ், சோனியா காந்தி முதலியோரின் ‘நெஞ்சை உருக்கும் வேண்டுகோள்கள்ஆகியவற்றை இந்திய மக்களுக்கு காட்டின ஊடகங்கள்.

‘லோக் பால்என்னும் மக்கள் நீதிமன்றத்தை அமைப்பதற்கான சட்ட முன்வரைவை உருவாக்குவதற்கான (121 கோடி மக்கள் உள்ள இந்தியாவில்) ‘மக்கள் பிரதிநிதிகளையும் ஹஸாரேவே நியமித்துவிட்டார். அரசாங்கம், நீதித்துறை முதலியவற்றில் உள்ளவர்கள் இலஞ்சம் வாங்குவதும், ஊழலில் ஈடுபடுவதும் இனி தடுக்கப்பட்டுவிடப் போகின்றன. இந்தியாவில் இனி கறை படியாத முதலாளியம் இருக்கப் போகிறது. டாட்டாக்களும் அம்பானிகளும் புனிதர்களாகப் போகின்றனர். மன்மோகன் சிங் ப.சிதம்பரம் குழுவினரை பொருத்தவரை, இனி இந்தியாவில் ஒரே ஒரு குற்றம்தான் இருக்கும் இலட்சக்கணக்கான மக்கள் ஏழைகளாக இருப்பது ஒரு குற்றமல்லவா?

- உயிர் எழுத்து, மே 2011 இதழ்

Monday, March 28, 2011

வனம் எழுதும் வரலாறு, சத்நாம்


பக்.30

...... ஆக அவர்கள் எதையும் வீணடிப்பதில்லை என்று எண்ணினேன். எப்படியோ காட்டில் ஒரு துண்டுக் குப்பை கூட இல்லை. குப்பை என்பது ‘நாகரிகமடைந்த’ சமூகத்தின் அடையாளம். ஏராளம், ஆடம்பரம், அதன்பிறகு முடையும் அசிங்கமும். ஒரு ‘நாகரிக மனிதன் கோவாவின் கடற்கரைகளையும் பனிபடந்த ரோடாங் கணவாயையும் கூடச் சீரழித்து விடுவான். இமாலயம் மற்றும் அண்டார்டிகாவின் பனிப்பாறைகள் கூட விட்டுவைக்கப்படவில்லை. பாலிதீன் என்பது கானகத்தில் ஒரு அரிதான பொருள். கெரில்லாக்கள் அதைக் காலைக்கடனுக்கான நீரைக் கொண்டு செல்வதற்காகவோ அல்லது தங்களுடைய புத்தகங்களை மழையிலிருந்து பாதுகாப்பதற்காகவோ பயன்படுத்துகின்றனர்.

பழங்குடிகள் ஆற்றுநீரையே பருகுவதால், கெரில்லாக்கள் ஆறுகளை மாசுப்படுத்துவதில்லை. அவர்கள் இயற்கையான கழிப்பறைக் காகிதங்களையும் இலைகளையுமே பயன்படுத்துகின்றனர். சுற்றுலாத் தொழில் என்கிற கொள்ளை நோய் இன்னும் இங்குவந்து சேரவில்லை. இல்லையென்றால் எல்லாவகையான கேடுகளும் வந்து, கானகத்தையும் இயற்கையையும் சமூகச் சூழலையும் விஷமாக்கியிருக்கும். ரிஷிகேஷ், அரிதுவார், பனாரஸ், அலகாபதைப் போன்று வனங்கள் புனிதத் ஸ்தலங்களாக அறிவிக்கப்படாதிருப்பதற்காக நான் கடவுளுக்கோ அல்லது அவரைப் போன்ற ஒருவருக்கோ நன்றி கூற வேண்டுமென்று எண்ணுகிறேன். இல்லையென்றால் தூய்மையான குப்பைகள் மலைகளைப் போலக் குவிக்கப்பட்டிருக்கும்.

நாகரிகமடைந்த கலாச்சாரமிக்க மக்கள் இன்னும் இங்கு வந்து சேரவில்லை என்பது உண்மையிலேயே நல்ல விஷயம்தான். ஏனெனில் தில்லி மற்றும் கல்கத்தாவில் உள்ளதைப் போன்ற விபச்சார விடுதிகள் இங்கும் தோன்றியிருக்கும். என்னுடைய பயணத்தின்போது என்னை மிகவும் வியப்புக்கு உள்ளக்கிய விஷயம் என்னவென்றால், பழங்குடிகள் தங்களுடைய ஆறுகளுக்குக் கேடு செய்வதும் இல்லை அவற்றை விழுந்து விழுந்து வணங்குவதுமில்லை, அவர்கள் பாவங்களைச் செய்வதுமில்லை, அல்லது பாவங்களைக் கழுவிப் பிராயச்சித்தம் தேடிக் கொள்வதற்காக பூஜை சடங்குகளைச் செய்வதுமில்லை. அவர்கள் சிக்கலானவர்களோ நுணுக்கமிக்கவர்களோ இல்லை.

அவர்கள் நாகரிக சமூகத்தின் திருட்டு, ஊழல், ஏமாற்று ஆகியவற்றிலிருந்து விடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் ஆடைகளைக் கூட மிகக் குறைவாகவோ அல்லது சுத்தமாக ஏதும் அணியாமலும் இருக்கிறார்கள்; ஆகவே அவர்கள் நாகரிகமிக்கவர்களின் / நாகரிகத்தின் கருத்துக்களான நிர்வாணம், கற்பு மற்றும் ஆபாசம் ஆகியவற்றிலிருந்து தூர விலகியிருக்கின்றனர். அவர்கள் தங்களுடைய குளியலறைக்கு நிர்வாணமாகச் செல்ல வேண்டியதில்லை. ஏனெனில் நிர்வாணம் என்கின்ற கருத்தையே அவர்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. எப்படியோ மாசு மற்றும் தூய்மை பற்றிய என்னுடைய சொற்பொழிவை ஒரு ஆதாரத்தைக் கூறி நிறைவு செய்கிறேன். இந்த மக்கள், கியோட்டோ கூட்டு ஒப்பந்த நடவடிக்கையைப் பற்றி எதுவும் கேள்விப்பட்டிருக்கவில்லை. அதேபோல இத்தகைய கருத்துக்களையும் மோதல்களையும் புரிந்துகொள்வதற்கு ஏதுவான புறச்சூழலும் அங்கு நிலவவில்லை என்றே சொல்லவேண்டும்…..

சத்நாம், வனம் எழுதும் வரலாறு, தமிழில் பிரசன்னா, விடியல் பதிப்பகம், 2010

Wednesday, February 16, 2011

நாத்திகவாதம்: அஜாதசத்ருவுக்கு, அஜீத கேசம்பலி பதில்


ஓ! மன்னனே! பிச்சை அல்லது உயிர்பலி அல்லது காணிக்கை என்று எதுவுமில்லை. நற்பலனும் இல்லை, நல்ல அல்லது கெட்ட செயல்களுக்கு விளைவுகளுமில்லை. இந்த உலகம் அல்லது மறு உலகம் என்ற ஒன்றில்லை. தந்தையும் இல்லை தாயும் இல்லை. அவர்கள் இல்லாமல் வாழ்க்கையில் வசந்தம் வரும் என்பது இல்லை. மிக உயர்ந்த இடத்தை அடைந்த, முழுமையாக நடந்த,இந்த உலகத்தையும், மறு உலகத்தையும் தம்மளவில் புர்ந்துகொண்ட, அறிந்துகொண்ட, தங்கள் அறிவை மற்றவர்களுக்குக் கற்றுத் தருகின்ற துறவிகளோ அல்லது பார்ப்பனர்களோ இந்த உலகில் யாருமில்லை.

நான்கு மூலப்பொருள்களைக் கொண்டு உருவானதுதான் மனித உயிர். அவன் இறந்தால், அவனுடைய பூதவுடல் பூமிக்கு மீண்டும் சென்று விடும்; அவன் உடலின் திரவம் நீராகி விடும்; வெப்பம் தீயாகிவிடும்; மூச்சுக்காற்று காற்றில் கலந்து விடும்; அவன் வலிமை வானத்தில் கரைந்து விடும்; இந்த நான்கு பூதங்களும் அய்ந்தாவது பூதமாக்ய சவப்பெட்டியுடன் சேர்ந்து மனித உடலை அழித்து விடுகின்றன. சுடுகாட்டுக்குச் செல்லும் வரையிலும் மனிதர்கள் ஒப்பாரி வைக்கிறார்கள். ஆனால் அம்மனிதனுடைய எலும்புகள் வெளுத்து விடுகின்றன. அவனுடைய படையல்கள் சாம்பலாகி விடுகின்றன. தான தர்மங்கள் என்னும் கருத்து முட்டாள்களுடையது. தான தர்மங்களின் மூலம் நற்பேறு கிடைக்குமென்று அவர்கள் பேசுவது வடிகட்டிய பொய். சோம்பேறிகளின் வாயளப்பு. முட்டள்களாகியிருந்தாலும் சரி, அறிவாளிகளாகியிருந்தாலும் சரி, அவர்கள் இறந்த பிறகு அவர்களுடைய உடல் மறைந்த பிறகு எதுவுமே இருக்கப்போவதில்லை.

இதே போன்று சஞ்சயா பேலாத்திப்பட்டர் பின் வருமாறு கூறுகிறார்:

இன்னொரு உலகம் இருக்கிறதா என என்னிடம் கேட்பீர்களாயின், அப்படி ஒரு உலகம் இருப்பதாக நான் எண்ணியிருந்தால் ஆம் என்று கூறுவேன். ஆனால், நான் ஆம் என்று கூறப்போவதில்லை. அப்படி ஒரு உலகம் இருக்கிறதா அல்லது இல்லையா என்பது குறித்து நான் சிந்திப்பதுமில்லை. வேறுவிதமாகவும் நான் சிந்திப்பதுமில்லை. நான் அதை மறுக்கவுமில்லை. இன்னொரு உலகம் இருக்கிறது என்றோ அல்லது இல்லயென்றோ நான் கூறவுமில்லை. தற்செயலாகத்தான் மனித உயிர்கள் உருவாக்கப்படுகிறதா என்பது குறித்தோ, நன்மை, தீமை ஆகியவற்றின் விளைவுகள் குறித்தோ அல்லது உண்மையக் கண்டுபிடித்த மனிதன் மரணத்திற்குப் பின்பும் உயிர் வாழ முடியுமா என்பது குறித்தோ என்னிடம் கேட்பீர்களாயின் உங்கள் அனைத்துக் கேள்விகளுக்கும் இதே பதிலைத்தான் தருவேன்.

பக். 137-138, இந்தியா: காலத்தை எதிர்நோக்கி, யேன் மிர்தால், தமிழில் வெ. கோவிந்தசாமி, விடியல் பதிப்பகம், 2001.

Wednesday, January 26, 2011

நாத்திகர்கள் ஊரில் மழை பெய்யாது


வேத காலத்தில் நாத்திகன் என்றால் வேதத்தை ஒப்புக் கொள்ளாதவன் என்று பொருள். மீமாம்ச நூல்கள் இவர்களை மீமாம்சத்திற்கு எதிரானவர்கள் என்றும் குறிப்பிடுகிறது. யக்ஞங்களாலும் பாசங்களாலும் எவ்விதப் பயனுமில்லை என்று இவர்கள் வாதிட்டார்கள்.

இதைக் குறித்த கதை ஒன்று:

ஒரு சார்வாகன் (லோகாயதவாதி) ஒரு குடிசையின் கூரைமீது ஏறி நின்று கொண்டான். அவ்வூரில் இறந்தவர்களுக்குத் தீ வளர்த்து அவி சொரிந்து பிண்டம் ஊட்டிய ஒரு புரோகிதனை அழைத்துத் தெருவில் ஓர் இலையைப் போடச் சொன்னான். எதற்கென்று புரியாமல் புரோகிதன் அவ்வாறே செய்தான். கூரை மீது நின்ற சார்வாகன், ஒரு சோற்று உருண்டையை அதன் மீது வைக்கச் சொன்னான். தீயில் உணவைப் போட்டு இறந்தவர்களுக்குப் போய்ச்சேருகின்ற மந்திரத்தைச் சொல்லச் சொன்னான். புரோகிதன் விழித்தான். சார்வாகன் “உன் மந்திரத்தால் தீயில் கொட்டப்படும் உணவு, எங்கேயோ மேலே இருக்கிற கண்காணாத உலகிற்குப் போகும் என்றால், அந்த மந்திரம் தெருவிலிருந்து ஐந்து முழம் உயரம் இருக்கும் இந்தக் கூரைக்குச் சோற்றை ஏற்றாதோ?” என்று கேட்டான். “அய்யோ! இவன் நாத்திகன், இவன் ஊரில் இருந்தாலே மழை பெய்யாது” என்று கூவிக்கொண்டே புரோகிதன் ஓடிவிட்டான்.

மகாபாரதத்தில் சார்வாகர்களைப் பற்றிக் கதை ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாண்டவர்கள் பாரதப் போரில் வெற்றி பெற்று இந்திரப் பிரஸ்தம் என்னும் தலைநகரினுள் நுழைந்தார்கள். கௌரவர்கள் போரில் மாய்ந்து போனார்கள். அவர்கள் ஆட்சியில் நகரத்தில் வாழ்ந்த பிராம்மணர்கள், இப்போது வெற்றி பெற்று நகரினுள் வரும் பாண்டவரை வரவேற்கத் திரளாக வந்தனர். பாண்டவர்களில் மூத்தவனான தரும புத்திரரை மிகைபடப் புகழ்ந்து தங்களை ஆதரித்துப் பல்லாயிரம் ஆண்டுகள் ஆட்சி புரிய வேண்டுமென வாழ்த்தினார்கள். அவர்களிடமிருந்து விலகி நின்ற நாலைந்து பேர்கள் “இவர்கள் சொலவதை நம்பாதே” என உரக்கக் கூவினார்கள். தருமபுத்திரர் அவர்களைத் திரும்பிப் பார்த்தார். கூடி நின்ற பிராம்மணர்கள், “அவர்கள் சொலவதைக் கேட்காதீர்! அவர்கள் பூதவாதிகள், சார்வாகர்கள்” என்று கத்தினார்கள்.

பூதவாதிகளில் ஒருவன் முன் வந்து தருமனைப் பார்த்துத் தெளிவான குரலில் பேசினான்: “இந்தப் பிராம்மணர்கள் இன்று காலையில் துரியோதனனுக்குச் சொன்ன வாழ்த்தைத்தான் இப்பொழுது உனக்குச் சொல்லியிருக்கிறார்கள். உண்மையில் நீ தருமபுத்திரன் அல்ல. அதர்மத்தைச் செய்து வந்திருக்கிறவன். எதற்காகக் குருமார்களையும் பாட்டனையும் தந்தையர்களையும் சகோதரர்களையும் நண்பர்களையும் போரில் கொன்றுவிட்டு இங்கே வந்திருக்கிறாய். இவற்றைவிடக் கொடிய பாதகம் என்ன இருக்கிறது. இக்கொடிய பாதகத்தை நீ செய்யக் காரணம் என்ன? அதற்குக் காரணம் இந்த மண்ணை ஆளவேண்டும் என்னும் ஆசைதானே முன் வாழ்ந்த மன்னர்கள் பிற உயிர்களுக்காகத் தன்னுயிர் கொடுத்தார்கள். நீ மண்ணுக்காக உங்கள் குல குருவான துரோணரையும் பாட்டனான பீஷ்மரையும் சிற்றப்பனான விதுரனையும் குந்தியின் சகோதரர்களான மாமன்மார்களையும் துரியோதனன் முதல் நூறு சகோதரர்களையும் சொந்த அண்ணனான கர்ணனையும் கொன்று விட்டாய்!. நேற்றுவரை இந்தப் பிரம்மணர்களுக்கு, துரியோதனன் தர்மரட்சகனாக இருந்தான். அவனுக்கு இவர்கள் பல்லாண்டு பாடினார்கள். இன்று அவன் களத்தில் செத்துக்கிடக்கின்றான். நீ வென்று வருகிறாய். நேற்றுத் துரியோதனனைப் புகழ்ந்த அந்த வாயால் அவர்கள் இன்று உன்னைப் புகழ்கிறார்கள். இதெல்லாம் எதற்காக? அவர்களது பசுக்களையும் ஆசிரமங்களையும் அடிமைகளையும் யக்ஞ தட்சினைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவே. உள்ளதைச் சொல்லும் நாங்கள் நாத்திகர்கள்” என்று சொன்னான்.

“பிராம்மன துரோகமும் ராஜத்துரோகமும் செய்யும் இவர்களைத் தீயிலிட்டு எரியுங்கள்” எனப் பிராம்மணர்கள் கூக்குரலிட்டார்கள். அவர்களைப் பிடித்துக் கட்டி, ஓமத் தீயில் இட்டுப் பொசுக்கினார்கள்.

நா. வானமாமலை, பண்டைய வேதத் தத்துவங்களும், வேத மறுப்புப் பௌத்தமும். அலைகள் வெளியீட்டகம்.